Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 043 (Jesus Heals a Deaf and Dumb Person)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

15. இயேசு கலிலேயாவுக்குத் திரும்புதல், யோர்தானுக்கு செல்லுதல், ஊமையும் செவிடுமானவனை சுகமாக்குதல் (மாற்கு 7:31-37)


மாற்கு 7:31-37
31 மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். 32 அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். 33 அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு; 34 வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். 35 உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். 36 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி, 37 எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

அநேக மக்கள் இறைவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதில்லை. ஒருசிலர் மட்டுமே இயேசுவின் நாமத்தை அறிக்கையிடுகிறார்கள். ஊமையும், செவிடுமானவனைப் போல மக்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆண்டவருடைய அழைப்பை திறந்த செவிகளுடன் கேட்பதில்லை. அவர்கள் முழு இருதயத்துடன் நற்செய்தியின் காரியத்தை புரிந்துகொள்வதில்லை. அவர்களுடைய நாவுகள் ஆண்டவரை மகிமைப்படுத்தி பேசுவதில்லை. அசுத்தமான, வெறுமையான வார்த்தைகளும், மாய்மாலமான துதிகளும் அவர்கள் வாய்களில் இருந்து வருகின்றன. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. இயேசு அவர்களுடைய இருதயங்களின் கட்டுகளை இன்னும் அவிழ்க்க இடம் கொடுப்பதில்லை. உண்மையான விசுவாசத்தின் முன்பு நீங்கள் ஊமையாய் இருக்கிறீர்களா? இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்களை தீமையிலிருந்து விடுதலை செய்ய திறமையும், வல்லமையும் உடையவராக இருக்கிறார். அவர் உன்னை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறார். கிறிஸ்து உனது மனதைத் திறக்க விரும்புகிறார். உண்மையான விசுவாசத்திற்கு எதிராக கடினப்படாதபடிக்கு உன்னைப் பாதுகாக்கிறார். அவருடைய வல்லமைக்கு சாட்சியாக நீ மாற விரும்புகிறார்.

இயேசு தீரு, சீதோன் பகுதிகளில் இருந்து, யோர்தானின் கிழக்குப் பகுதிக்குச் சென்றார். யூதர்களை விட்டு விலகிச் சென்றார். அவருடைய சொந்த தேசத்தார் ஊமையும், செவிடுமானவனைப் போல இருந்தார்கள். அவர்கள் இறைவனுடைய வார்த்தையை பெற்றிருப்பதாக நம்பினார்கள். அவர்கள் அதைக் கேட்டார்கள். தொடர்ச்சியாக மன்றாடினார்கள். உண்மையில் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், முடவர்களாகவும் இருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களில் தங்கியிருக்கவில்லை.

யோர்தானுக்கு அப்புறத்தில் இருந்து அவரிடம் கொண்டு வரப்பட்ட ஒரு வியாதியஸ்தனை இயேசு அங்கே சந்தித்தார். அவன் குணமடையும்படி சில விசுவாசிகள் அவனை அழைத்து வந்திருந்தார்கள். இயேசு அவர்களை அன்புடனும், இரக்கத்துடனும் நடத்தினார். அவனுடைய செவிடான காதுக்குள் தன்னுடைய விரலை விட்டு, இறைவனுடைய கரம் அவனுடைய தலையைத் தொடுவதை உணரும்படி செய்தார். இயேசு தனது சொந்த விரலினால் அவனுடைய பேச முடியாத நாவைத் தொட்டார். அவனுக்குள் இறைவனுடைய வல்லமை பாய்ந்தோடும்படி அப்படிச் செய்தார். பின்பு இயேசு பரலோகத்தை நோக்கிப் பார்த்தார். இரட்சிப்பும், மன்னிப்பும் இறைவனிடம் இருந்து மட்டுமே வருகின்றது என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்து தனது உறுதியான அடையாளங்கள், தனது அன்பின் மூலம் அவனுக்குள் விசுவாசத்தைக் கொண்டு வந்தார். அவர் தனது வாயைத் திறந்து சொன்னார்: “திறக்கப்படுவாயாக”. உடனடியாக அந்த மனிதன் கேட்கக் கூடியவனாக மாறினான். அவனுடைய வாய் திறவுண்டது. அவன் தெளிவாக பேச ஆரம்பித்தான். அவன் முதலாவது கேட்ட வார்த்தை இறைவனுடைய வார்த்தை ஆகும்.

இன்றும் இறைவனின் குமாரன் அநேகருடைய காதுகளைத் தொடுகிறார். அவர்கள் நாவுகளில் தனது விரல்களை வைத்து சொல்கிறார்: “திறக்கப்படுவாயாக” இந்த உலகத்தின் மில்லியன் கணக்கான மக்களை கேட்பவர்களாகவும், சாட்சிகளாவும் மாற்றுவது அவருடைய திட்டம் ஆகும். அவர் பிதாவின் பெயரில் களிகூருகிறார். கிறிஸ்துவிடம் குணமடையும்படி உங்கள் நண்பர்களை நீங்கள் கொண்டு வருவீர்களா? அவர் பரிந்து பேசுபவர், உதவி செய்பவர். யாரும் இவரை விட்டு விலகிச் செல்ல வேண்டாம். இவர் அன்புள்ளவர். பரிந்துபேசுகின்ற இறைவன்.

விண்ணப்பம்: வல்லமையுள்ள ஆண்டவரே, நாங்கள் உமது அன்பை நினைத்து துதிக்கிறோம். நீர் யோர்தானில் செவிடான மனிதனை சுகப்படுத்தியதற்காக உமக்கு மகிமை செலுத்துகிறோம். எங்கள் செவிட்டுதன்மை, பேசாத தன்மையில் இருந்து எங்களை விடுதலை செய்யும். எங்கள் இருதயங்களின் கட்டுகளை நீர் அவிழ்க்கிறீர். நாங்கள் உமது மகிமையைக் காண்கிறோம். உமது உருவாக்கும் வார்த்தையைக் கேட்கிறோம். உமது நாமத்தை மனிதர்கள் முன்பு துதிக்கிறோம். எங்கள் நாட்களில் அநேகருடைய செவிகளைத் திறந்தருளும். உம்மை என்றென்றும் துதிக்கும்படி எங்கள் நாவுகளைத் தொடும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு எவ்விதம் செவிடும், ஊமையுமான மனிதனை சுகமாக்கினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 03:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)