Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 038 (The Return of the Apostles)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

10. அருட்பணிப் பயணத்தை முடித்து அப்போஸ்தலர்கள் திரும்புதல், மற்றும் வனாந்தரத்தில் ஐயாயிரம் பேர் போஷிக்கப்படுதல் (மாற்கு 6:30-44)


மாற்கு 6:30-44
30 அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள். 31 அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது. 32 அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். 33 அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 34 இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். 35 வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று; 36 புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 37 அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். 38 அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள். 39 அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 40 அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும், உட்கார்ந்தார்கள். 41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். 43 மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். 44 அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

கிறிஸ்துவின் சீஷர்கள் தமது ஊழியப் பயணத்தை முடித்துவிட்டு திரும்பினார்கள். அவருடைய நாமத்தினால் பேசிய வார்த்தைகளையும், செயல்பட்ட வல்லமையையும் குறித்துச் சொன்னார்கள். இயேசு அவர்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். இறைவன் அவர்கள் மூலமாய் செயல்பட்டதை உணரும்படி அப்படிச் செய்தார். அவர்கள் மத்தியில் இருந்த இறைவனுடைய ராஜ்யத்தின் மகிழ்ச்சியான அனுபவங்களைக் குறித்து நன்றி செலுத்தும்படி சொன்னார். உங்கள் நண்பர்கள் மத்தியில் பணிசெய்யும் போது வெளிப்படும் இயேசுவின் வல்லமையான அதிகாரத்திற்காக நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து நன்றி செலுத்தும்படி இயேசு உங்களை வழிநடத்துகிறார். அவருடைய செயல்களை நீங்கள் அறிவதன் மூலம் அவரைத் துதிக்க முடியும். அப்போது நீங்கள் பெருமையடையாமல், தாழ்மையுடனும், நன்றியுணர்வுடனும் இருப்பீர்கள்.

இயேசு தனியாயிருக்கும்படி திரளான மக்கள் விடவில்லை. அவரைப் பின் தொடர்ந்து வந்தார்கள். அவருக்கு முன்பாகவே சென்று கூடியிருந்தார்கள். என்ன ஓர் ஆச்சரியம், கிறிஸ்து களைப்புடன் இருந்தாலும் அவர்களை அனுப்பிவிடவில்லை. அவர்கள் மீது மனதுருகினார். நீதியின் மீதான அவர்களின் பசிதாகத்தை அறிந்தார். அன்பு மற்றும் இரக்கத்திற்கான அவர்களின் ஏக்கத்தை உணர்ந்தார். அவர்களுக்கு தமது ஆவியானவரின் நியாயப்பிரமாணத்தை போதித்தார். இறைவனின் இரட்சிக்கும் கிருபையைக் குறித்து விளக்கிச் சொன்னார்.

பரிசுத்தமான ஆண்டவர் நெடுநேரமாக மக்களுக்கு பிரசங்கிப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அவரைச் சுற்றிலும் புல்தரைகளில் அமர்ந்தார்கள். அவர்களின் தாகம் நிறைந்த இருதயங்களில் பரதீசு வந்திறங்கியது. மாலை நேரம் ஆகியது. அவர்களுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று.

சீஷர்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதைக் குறித்து யோசித்தார்கள். திரளான மக்களின் பசியைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கும் நமது உலகில் பெருகிவரும் அழிவுகளுக்கு பசி காரணமாக உள்ளது.

திரளான மக்களுக்கு உணவைக் கொடுக்கும்படி இயேசு தமது சீஷர்களைக் கேட்டுக்கொண்டார். சீஷர்கள் மக்களின் தொகையை எண்ணி, தேவைப்படும் பணத்தைக் கணக்கிட்டார்கள். அவர்கள் திறமைமிக்க வியாபாரிகளைப் போல நினைத்துப் பேசினார்கள். ஆனாலும் இறைவனின் குமாரனாகிய கிறிஸ்துவிற்கு மனித கணக்கீடுகளும், காரண காரியங்களும் தேவையில்லை. தம்மைச் சூழ இருந்த ஆவிக்குரிய பசி கொண்ட திரள் மக்களுக்கு இரக்கம் பாராட்டும்படி அவர் தீர்மானித்தார். அவர்களுக்கு அப்பமும் கொடுக்க தீர்மானித்தார். எனவே அவர் எல்லா மக்களையும் பெரிய விருந்திற்கு அழைத்தார். அவர் சிறியவற்றை பெரியதாக மாற்றும் வல்லமை படைத்தவர் ஆவார்.

இயேசு தமது சீஷர்களின் கைகளில் இருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வாங்கினார். தமது பிதாவின் முன்பு அவைகளை வைத்தார். அவர்களிடம் இருந்த கொஞ்சத்திற்காக பிதாவிற்கு நன்றி செலுத்தினார். பின்பு அவர் அப்பங்களைப் பிட்டு சீஷர்கள் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் ஆச்சரியப்பட்டு திகைத்தார்கள். எவ்விதம் இறைவனின் குமாரன் பரிபூரண கிருபையை மனிதர்களுக்கு வழங்குகிறார் என்பதற்கு சாட்சி பகிர்ந்தார்கள்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்பு அப்பங்களும், மீன்களும் முதலில் இருந்ததைவிட அதிகமாக இருந்தன. கிறிஸ்து நன்றி செலுத்தியதின் மூலம் இறைவனின் ஆசீர்வாதம் இவ்விதமாக ஏற்பட்டது. அவர் திரளான மக்களுக்கு அப்பத்தை பிட்டுக் கொடுத்தது போல, நாம் இறைவனுடன் ஒப்புரவாகும்படி தமது சரீரத்தை பிட்கும்படி ஒப்புக்கொடுத்தார். ஆண்டவருடைய இராப்போஜனத்தில் நாம் ஆசீர்வதிக்கப்படும்படி விரும்புகிறார். நாம் அன்பிலும், தியாகத்திலும் பெலப்படும்படி செயல்படுகிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படும் இறைவனுடைய ஆசீர்வாதத்தின் இரகசியத்தை நீங்கள் உணர்கிறீர்களா? நாம் பெற்றிருக்கும் சிறிய காரியத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். விசுவாசத்துடன் நன்றி செலுத்துவது தான் இறைவனுடைய பொக்கிஷங்களின் கதவைத் திறக்கும் சாவி ஆகும். உங்களுக்கு அருகில் இருக்கும் கிறிஸ்துவின் உதவியை நம்புங்கள். நீங்கள் பெற்றிருக்கும் சிறிய காரியத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். அவருடைய வல்லமையை விசுவாசியுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். உங்கள் நண்பர்களின் சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளை எல்லா நேரங்களிலும் சந்திக்க விரும்புகிறார். நன்றியுணர்வுடன் இருக்க ஒருபோதும் மறவாதீர்கள்.

விண்ணப்பம்: ஆண்டவரே, எங்கள் அவிசுவாசம், நன்றி செலுத்தாத தன்மைக்காக எங்களை மன்னியும். திரளான மக்கள் மீது நீர் மனதிரங்கியது போல நாங்களும் இரக்கம்பாராட்ட எங்களுக்குக் கற்றுத்தாரும். உமது மன்னிப்பிற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நாங்கள் அறிந்த மற்றும் அறியாதிருக்கிற உமது ஆசீர்வாதங்களுக்காக நன்றி கூறுகிறோம். எங்கள் நண்பர்களும் இந்த ஆசீர்வாதங்களைப் பெற நாங்கள் உம்மை நாடுகிறோம். அவர்கள் மாற்றம் பெற உதவும். அவர்கள் முதலாவது அப்பத்தை யோசிக்காதபடி, அந்நியர்களுக்கும், உமது ராஜ்யத்தை நாடுபவர்களுக்கும் சேவைபுரிய உதவும். ஆமென்.

கேள்வி:

  1. ஐயாயிரம் பேரை போஷித்ததின் இரகசியம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 03:45 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)