Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 076 (Jesus’ Command to Preach the World)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

3. உபவத்திரவத்தின் மத்தியிலும் உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளையிடுதல் (மாற்கு 13:9-13)


மாற்கு 13:9-13
9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். 10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். 11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர். 12 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். 13 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

ஆலயத்தின் அழிவைக் குறித்த சிந்தனையில் இருந்து இயேசு தமது சீஷர்களின் கவனத்தை வேறொரு முக்கியமான காரியத்திற்கு திருப்பினார். அவர்கள் பரிசுத்த ஆவி தங்கும் ஆலயமாக ஆயத்தமாக்கப்பட வேண்டியது அவசியம். குழப்பங்கள் நிறைந்த உலகின் மத்தியில் இறைவனுடைய ஆலயமாக அவர்கள் இருக்கிறார்கள். அன்பின் வழியில் ஆவிக்குரிய புரட்சி செய்கிறார்கள். அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகளால் அவிசுவாசிகளாகவும், தூஷணம் செய்கிறவர்களாகவும் கருதப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.

தங்கள் இருதயங்களில் உள்ள புதிய நிலையை அவர்களால் மறுதலிக்க முடியாது. பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டினால், இறைவன் திரியேகர் என்பதையும் அவர்கள் அவருடைய நீதியின் பிள்ளைகள் என்பதையும் நிச்சயமாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அடிக்கப்பட்டாலும், மூளைச் சலவை செய்யப்பட்டாலும் ஆறுதலின் ஆவியானவர் அவர்களை கைவிடமாட்டார். அவர்கள் புதிய படைப்பாக மாறுகிறார்கள். பாவங்களில் மரித்திருக்கிற உலகிற்கு அவர்கள் தடைக்கல்லாக இருக்கிறார்கள். மனித இருதயங்களில் உள்ள இறைவன் மீதான வாஞ்சை ஒடுக்கப்படுகிறது. எங்கெல்லாம் மறுபடியும் பிறந்த மக்கள் இருக்கிறார்களோ, அங்கே ஆவிக்குரிய வாழ்வு விண்ணப்பம் மற்றும் எதிரிகள் மீதான அன்பின் மூலம் அமைதியான செயல்களினால் தொடர்கிறது.

நமது உலகில் உள்ள இறைவனுக்குள்ளான நமது வாழ்வை எவரும் அகற்றவோ அல்லது முடிவுக்கு கொண்டு வரவோ முடியாது. இந்த அனுபவத்தின் அடையாளமாக, லெபனோன் மலைகளில் நாம் ஒன்றைக் காண்கிறோம். ஒருவகை செடியின் ஆழமான கடின வேர்ப்பகுதியை ஒருவன் வெட்ட முடியும். ஆனால் அதை முற்றிலும் அழிக்க முடியாது. அது பூமியின் ஆழங்களுக்குள் ஊடுறுவி தொடர்ந்து வளரும். மறுபடியும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். இந்த அரிய வகை செடி நற்செய்தி ஆகும். காலங்கள் தோறும் அவர்கள் இதை அனுபவித்து வருகிறார்கள். இந்த உலகில் உள்ள எந்தவொரு வல்லமையும் பரிசுத்த நற்செய்தியின் வல்லமையை முடிவுக்கு கொண்டு வரமுடியாது.

கிறிஸ்து வெற்றியாளர். புறக்கணிப்பு, உபத்திரவத்தின் மத்தியிலும் அவருடைய வார்த்தை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கும் செல்கிறது. நற்செய்தியானது உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் பிரசங்கிக்கப்படாதவரை உலகத்தின் முடிவு வராது. உலகத்தின் எல்லா மொழிகளிலும் நற்செய்தியானது பிரசங்கிக்கப்பட வேண்டும். நீதியுள்ள இறைவனின் மக்களால் இது நிகழ்த்தப்பட வேண்டும். எதுவரைக்கும் நீ தூங்கிக் கொண்டிருப்பாய்? உன்னையும், உனது குடும்பத்தையும் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பாய்? எழுந்திருந்து உனது அயலாகத்தாரிடம் செல். நற்செய்தியானது அவசியமான ஒன்று. சிலுவையில் அறையப்பட்டவரைக் குறித்த நற்செய்தி அனைவருக்கும் தேவை. அவர் பாவங்களை மேற்கொண்டார். மரணத்தை ஜெயித்தார், நரகத்தின் மீது வெற்றி சிறந்தார், மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். நிலைவாழ்வு தரும் இறைவனாக இருக்கிறார்.

கிறிஸ்துவின் வெற்றிப்பவனியை விட்டு நீ பிரிந்திராமல், தைரியமாகப் பேசு. நமது திரியேக இறைவனின் மகிமையானது இரவு பகலாக தொலைக்காட்சி நிகழச்சிகள் மூலம் பல்வேறு மொழிகளில் அறிவிக்கப்படுகிறது. இறைவனின் அன்பு புத்தகங்கள், பத்திரிகைகள், நற்செயல்கள் மூலம் அவரைக் காண விரும்புவோருக்கு காண்பிக்கப்படுகிறது.

நற்செய்தியானது இலவசம். இரட்சிப்பைத் தேடுகிறவர்கள் அதை அடைகிறார்கள். முழு உலகிற்கும் நற்செய்தி அறிவிக்கப்படுதல் முடிவின் ஒரு அடையாளமாக உள்ளது.

எவ்விதமாக தங்களை தற்காத்துக்கொள்வது என்று இயேசுவைப் பின்பற்றுவோர் கவலைப்படத் தேவையில்லை. அவர் பரிசுத்த ஆவியைத் தந்திருக்கிறார். சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களையும், புறாக்களைப் போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் அவர்கள் அன்புடன் சத்தியத்தைப் பேச அருள்புரிவார். கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகள் தீர்க்கதரிசிகளைப் போல அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் தங்களுடைய சொந்த எண்ணங்களைப் பேசவில்லை. உபத்திரவத்தின் நேரங்களில் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மூலம் பேசுகிறார்.

ஆண்டவர் அவர்களுடைய கீழ்ப்படிதலை எதிர்பார்த்தார். ஆவியானவர் விரும்புகிறதை அவர்கள் பேச வேண்டும். நற்செய்தியில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகளை அவர்கள் அறிந்து ஆயத்தமாயிருக்க வேண்டும். தனது இருதயத்தில் அநேக வசனங்களை வைத்திருப்பவனும், பரிசுத்த ஆவியின் மெல்லிய சத்தத்தை கேட்கும்படி தனது காதை தீட்டி வைத்திருப்பவனும் பாக்கியவான். அவனுடைய ஆண்டவரின் ஆறுதலை கொடிய துன்பம் மற்றும் மரண நேரத்திலும் பெறுவான்.

நாம் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கிறோம். இந்த உலகின் ஞானமானது இறைவன் முன்பு பைத்தியமாய் இருக்கிறது.

புதிதாக மனந்திரும்பிய ஒரு விசுவாசி தனது சொந்தக் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுகிறான். அவன் ஏளனம் செய்யப்பட்டு, அவமானத்தை அடைகிறான். சில சமயம் சொந்த சகோதரர்கள் அல்லது பெற்றோர்கள் அவனைக் கொல்வதின் மூலம் இறைவனுக்கு சேவை செய்வதாக நினைக்கிறார்கள். சில நாடுகளில் உள்ள இளம் வாலிபர்களின் தலைவர்கள் சிறுபிள்ளைகளை மறுதலிக்கச் செய்யும்படி துன்புறுத்துகிறார்கள். அவர்களுடைய விசுவாசமுள்ள பெற்றோர்களை அழிக்கிறார்கள்.

இயேசு என்ற பெயர் நமது இருதயங்களில் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. மேலும் அது பகை, சிலுவை மற்றும் மரணத்தையும் கொண்டு வருகிறது. ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதி இறைவனுடன் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை. மில்லியன்கணக்கான உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் உங்களைப் போலவே சோதனைகளின் ஊடாக கடந்து சென்றுள்ளார்கள். அவர்கள் ஆண்டவருக்குள் தங்களை திடப்படுத்திக் கொண்டார்கள். நீங்களும் தீங்கு நாளில் எதிர்த்து நிற்க முடியும். ஆவிக்குரிய போராட்டத்தை விட்டு ஓடிவிட வேண்டாம். இலகுவான வழியைத் தேட வேண்டாம். இறைவனுடைய வார்த்தை கண்டிப்பாக பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆண்டவர் நம்மை முன்னேறிச் செல்ல கட்டளையிடுகிறார்கள். பொய்யான நோக்கங்கள் வேண்டாம். விசுவாசத்தை மறுதலிக்க வேண்டாம். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி எழுந்திருந்து, முன்னேறிச் செல்லுங்கள்.

இறைவனுடைய கோபத்தைவிட உனக்கு அருளப்பட்ட அவரது அன்பு பெரியது. எனவே இயேசுவினால் உனக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை மறுதலிக்க வேண்டாம். இந்த உலகில் உள்ள எல்லா ஆவிகளைவிடவும் அவர் வல்லமை நிறைந்தவர். இந்த அன்பும், நமது விசுவாசமும் தான் உலகத்தை ஜெயிக்கும். முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவன் இரட்சிக்கப்படுவான்.

அவருடைய நாமத்தின் நிமித்தம் துன்பப்படுகிறவர்களை இயேசு பெலப்படுத்துகிறார். அவர்களுக்கு தமது உண்மையுள்ள வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத்தேயு 28:20).

விண்ணப்பம்: ஆண்டவரே, எங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நாங்கள் அடிக்கடி சுயநலமுள்ளவர்களாக இருக்கிறோம். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நீர் எங்களை இறைவனுக்கென்று மீட்டுக்கொண்டீர். உமது பரிசுத்த ஆவியுடன் எங்களுக்கு நீர் வாழ்வையும் தந்துள்ளீர். உம்மை அறியாதவர்களுக்கு உம்மைக் குறித்து மிக அரிதாகவே பேசுகிறோம். உமது இரட்சிப்பை தெளிவாக அறிவிக்கத் தவறுகிறோம். தயவாய் எங்கள் இருதயங்களைத் திறந்தருளும். உமது இரக்கத்தை எங்களுக்குத் தாரும். எங்கள் சகோதரரிடம் நாங்கள் சென்று நித்திய வாழ்வு தரும் உமது அன்பின் வார்த்தைகளை தெரிவிக்க உதவும். அவர்களையும், எங்களையும் மன்னியும். அவர்கள் கண்களைத் திறந்தருளும். அப்போது அவர்கள் உம்மிடம் வருவார்கள். உம்மை ஏற்றுக்கொள்ளும்படியான விருப்பத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தும். எங்கள் சாட்சியின் நிமித்தம் நாங்கள் பெருமைகொள்ளாதபடி, எங்களைக் குறித்தே நாங்கள் பேசாதபடி, உமது வார்ததை நிறைவேற்ற உதவும். நாங்கள் சந்திக்கும் மக்களிடம் பேச ஏற்ற வார்த்தைகளைத் தாரும். நீர் எங்களிடம் பேசுவதையே நாங்கள் பேச உதவும். உமது வழிநடத்துதலுக்கு கீழ்ப்படியச் செய்யும். எங்கள் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்களை உமது இரக்கத்தால் இரட்சியும். நித்திய இரட்சிப்பைத்தாரும். ஆமென்.

கேள்வி:

  1. உலகத்தின் முடிவோடு எவ்விதம் உலகிற்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல் இணைக்கப்படுகிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 04:25 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)