Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 044 (Feeding the Four Thousand)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

16. நாலாயிரம் பேரை போஷித்தல் (மாற்கு 8:1-9)


மாற்கு 8:1-9
1 அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: 2 ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். 3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். 4 அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். 5 அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள். 6 அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 7 சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். 8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். 9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.

பெருந்திரளான மக்கள் இறைவனுடைய வார்த்தைக்காக ஏங்கினார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து அநேக மணிநேரங்கள் அவர் பேசுவதைக் கேட்டார்கள். ஒவ்வொரு இருதயமும் தூய அன்பிற்காகவும், இறைவனின் பாதுகாப்பிற்காகவும் ஏங்கியது. ஆண்டவரைத் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். பரிசுத்தமானவருக்கு முன்பாக மன்றாடி, அவருடைய வார்த்தையை கற்றுக்கொண்டு, பரலோக வல்லமை, நித்திய மகிழ்ச்சியினால் தங்களின் ஆத்துமாவை நிரப்பிகின்றார்கள். இறைஞானம் மற்றும் உண்மையான அறிவின் ஊற்று இயேசு என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டீர்களா? இரட்சகரிடம் வாருங்கள். நீங்கள் நன்றாயிருக்கும்படி அவருடைய நற்செய்தியைக் கேட்க நேரம் செலவழியுங்கள். அப்போது நீங்கள் புத்துணர்வடைவீர்கள்; புதுப்பிக்கப்படுவீர்கள்.

மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவனுடைய வார்த்தை இயேசு கிறிஸ்து. அவர் ஆத்துமாக்களின் தாகத்தை தணிக்கின்றார். அவரும் மெய்யான மனிதனாக இருந்தார். மனிதனுக்கு தேவையான பொதுவான காரியங்களுக்கு அவர் கட்டுப்பட்டிருந்தார்.

தாகத்துடன் வார்த்தையைக் கேட்பவர்களை திருப்திபடுத்த இயேசு விரும்பினார். ஏனெனில் அவர்கள் மூன்று பகல்கள், மூன்று இரவுகளாக ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்கள். இப்பொழுது தான் ஐயாயிரம் பேரை போஷித்த பெரிய அற்புதத்தை சீஷர்கள் அனுபவித்திருந்தார்கள். பசியுள்ள மக்களை அனுப்பிவிடும்படி ஏற்கெனவே அவர்கள் சொன்னது போல, இப்போது சொல்லவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு புதிய அற்புதத்தை அவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தார்கள். இயேசு நமது ஆத்துமாக்களை மட்டும் இரட்சிக்கிறவர் அல்ல, அவர் நமது சரீரங்கள் மீதும், உலகத் தேவைகள் குறித்தும் அக்கறை கொள்கிறவர். அவர் இன்னொரு அற்புதம் செய்து திரளான மக்களைப் போஷிக்க ஆயத்தமாகினார். அவர் சில அப்பங்களையும், அவர்கள் வைத்திருந்த மீனையும் பெற்றுக்கொண்டார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு போதுமான அளவு கிடைக்கும்படி ஆசீர்வதித்தார். இயேசு பரலோகத்தில் இருந்து உணவு மேஜையை கொண்டு வரவில்லை. அவர்கள் வைத்திருந்த கொஞ்ச உணவை, அவர் பெற்றுக்கொண்டார். அவர் அதை மகிழ்வுடன் பிதாவின் சமூகத்தில் கொண்டு வந்தார். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி செலுத்தினார். திரளான மக்களுக்கு அந்த உணவைக் கொடுத்தார். அவருடைய வல்லமையினால் உணவு அதிகரித்துப் பெருகியது.

நீ பெற்றிருக்கும் கொஞ்சத்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறாயா? அதிலே நீ திருப்தியாக இருக்கிறாயா? அதைக் குறித்து முறுமுறுக்கிறாயா? ஆடம்பரத்தை நாட வேண்டாம். இறைவன் முன்பு உங்கள் உணவிற்காக நன்றி செலுத்துங்கள். எல்லா நேரங்களிலும் உங்கள் இரட்சகரை துதியுங்கள். தேவையுள்ளோருக்கு உங்கள் கொஞ்சத்தில் இருந்து கொடுங்கள். அப்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உன்னதமானவரின் ஆசீர்வாதங்கள் உங்கள் மூலமாக அநேகருக்கு செல்வதைக் காண்பீர்கள். ஆண்டவரை மகிழ்வுடன் துதிக்க ஒருபோதும் மறவ வேண்டாம்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, எங்கள் விசுவாசக் குறைவை மன்னியும். எங்கள் பூமியில் ஜனத்தொகை, வேலைவாய்ப்பின்மை பெருகினாலும் நீர் ஒருவரே அவர்களை திருப்திப்படுத்தக் கூடிய சர்வ வல்லமையுள்ளவர். மக்கள் உம்மைக் காணவும், உமது வார்த்தையைக் கேட்கவும் கற்றுத்தாரும். அப்போது அவர்கள் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுவார்கள். வானங்களின் பலகணிகளைத் திறந்து, உமது ஆசீர்வாத மழை பெய்யப்பண்ணும். நீர் எங்களை இரட்சித்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நீர் எங்களை பாதுகாக்கிறீர். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு ஏன் நாலாயிரம் பேரை போஷித்தார்? எப்படி போஷித்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 06:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)