Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 037 (King Herod’s Fear)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

9. யோவான்ஸ்நானகனின் மரணத்திற்குப் பின்பு ஏரோது ராஜா பயம் அடைதல் (மாற்கு 6:14-29)


மாற்கு 6:14-29
14 அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15 சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப் போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16 ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான். 17 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது, 18 யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 19 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று. 20 அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான். 21 பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்மநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது, 22 ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்; 23 நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான். 24 அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். 25 உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். 26 அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப் பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்; 27 உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான். 28 அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள். 29 அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

யோவான்ஸ்நானகன் அவனுடைய காலத்தில் மிகவும் முக்கியமான மனிதனாக இருந்தான். அவன் எல்லா தீர்க்கதரிசிகளையும்விடப் பெரியவனாக இருந்தான். கிறிஸ்து அழிவுக்குரிய ஆயுதங்களினால் நமது உலகை அழிக்க வரவில்லை என்றும், அவிசுவாசிகள் மீது வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணுவார் என்றும் பரிசுத்த ஆவியினால் முன்னுரைத்தான். அவர் மனிதர்களின் பாவங்களைப் போக்கும், இறைவனுடைய தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியாக இருப்பார் என்று கூறினான்.

எலியாவின் ஆவியினாலும், வல்லமையினால் நிறைந்தவனாக யோவான் ஸ்நானகன் செயல்பட்டான். அவன் ஏரோது ராஜாவிடம் வந்தான். அவனுடைய ஒழுக்கக் கேட்டை அறிவித்தான். எனவே ராஜா கோபமுற்று, இந்த உண்மையான மனிதனை இருள்நிறைந்த சிறைக்குள் தள்ளினான். இருப்பினும் யோவான்ஸ்நானகன் உண்மையுள்ள தீர்க்கதரிசி என்பதை ராஜா அறிந்திருந்தான். எனவே தனது அரசியல் காரியங்களைக் குறித்து, அவனிடம் சென்று இரகசியமாக ஆலோசனைகளைக் கேட்டான். அதன்படி செயல்பட்டான். அவனுடைய பரிவார கூட்டம் அவனை துதி பாடியது. நல்ல ஆலோசனைகளை அவனுக்கு வழங்கவில்லை. தீர்க்கதரிசியின் ஆலோசனையைக் கேட்டு ராஜா செயல்பட்டாலும், அவன் சரீரத் தூய்மை மற்றும் திருமணப் பரிசுத்தம் ஆகிய காரியங்களில் கீழ்ப்படியவில்லை.

ஏரோதியாள் ராஜாவின் சகோதரனுடைய மனைவியாக இருந்தாலும், ராஜாவுடன் சேர்ந்து வாழ்ந்தாள். யோவான்ஸ்நானகன் ராஜாவைக் கண்டித்ததினால் அவனை வெறுத்தாள். இறைவனுடைய சாட்சியாகிய இவனை அழிக்கும்படி அவள் தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏரோதின் பிறந்தநாள் விழாவில் ஏரோதியாளின் மகள் நடனமாடினாள். ராஜாவைப் புகழ்ந்தாள். ஏரோதியாள் பழிவாங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தாள். அவள் தனது மகள் யோவான்ஸ்நானகனின் தலையைக் கேட்கும்படி தூண்டிவிட்டாள். அவள் விரும்பும் எதையும், தனது ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவதாக ராஜா ஆணையிட்டிருந்தான்.

அவன் ஆணையிட்டதின் நிமித்தம், தனது வார்த்தையை விருந்தினர்கள் முன்பு மீற முடியாமல் இருந்தான். யோவானை சிரச்சேதம் செய்யும்படி ஏரோது கட்டளையிட்டான்.

விபச்சார ராஜாவின் குடி போதையினாலும், ஏரோதியாளின் பழிவாங்கும் இருதயத்தினாலும், அவளுடைய மகளின் நயவஞ்சக நடனத்தினாலும், இறைவனுடைய தீர்க்கதரிசி அநீதியாகக் கொல்லப்பட்டான். இதைப்பார்க்கும் போது இறைவனுடைய ராஜ்யத்தைவிட உலகத்தின் வல்லமைகள் பெரியவைகளாக இருப்பதைப் போல் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. அவர்களுடைய மனச்சாட்சி எப்போதும் அவர்களை குத்திக்கொண்டே இருக்கிறது.

இயேசுவின் பணிகள், அவருடைய சீஷர்களின் வல்லமையான பிரசங்கங்களை ஏரோது கேட்ட போது, பயந்து நடுங்கினான். இந்த ராஜா மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்பவன். தன்னால் கொல்லப்பட்ட யோவான் ஸ்நானகனின் ஆவி உயிர்பெற்று எழுந்து இயேசுவில் வாழ்வதாக நினைத்தான். தன்னை அழித்து, தனது ராஜ்யத்தை அபகரிக்கப் போவதாகக் கருதினான்.

வல்லமை, ஐசுவரியம், இச்சை ஆகியவைகள் உண்மையில் மனிதனைப் பெலப்படுத்துவது கிடையாது. அவனுக்கு திருப்தியையும், பாதுகாப்பையும் தராது. ஆனால் உண்மை, தூய்மை, சுத்த மனச்சாட்சி ஆகியவைகள் உங்களுக்கு சமாதானத்தைத் தருகின்றன. உங்கள் இருதயங்களில் சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றன. உலகத்தையும், காமத்தையும் இச்சிக்க வேண்டாம். பரிசுத்தத்தையும், இறைவனின் வல்லமையையும் தெரிந்துகொள்ளுங்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பவன் அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாறுகிறான். இறைவனுடன் என்றென்றும் சமாதானத்துடன் வாழுகிறான்.

விண்ணப்பம்: ஆண்டவரே, யோவான்ஸ்நானகனின் தைரியமுள்ள சாட்சிக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் கோழைத் தனத்தை மன்னியும். நாங்கள் மனிதர்களின் பாவத்தின் பெயரை பெரும்பாலும் பேசுவதில்லை. மனந்திரும்புதலை வலியுறுத்தும் முன்பு மன்னிப்பைப் பிரசங்கிக்கிறோம். உமக்கு உண்மையாகப் பணி செய்ய எங்களுக்கு கற்றுத்தாரும். உமது தாழ்மையின் சாயலில் நாங்கள் நடக்கும்படி உதவும். உமது எல்லையற்ற அன்பை நடைமுறைப்படுத்த உதவும். ஆமென்.

கேள்வி:

  1. யோவான்ஸ்நானகனின் மரணத்திற்கு காரணங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 03:41 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)