Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 018 (Argument About the Sabbath)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - இயேசுவிற்கும், யூதத் தலைவர்களுக்கும் இடையே போராட்டம் (மாற்கு 2:1 - 3:6)

4. ஓய்வு நாளை கடைப்பிடிப்பது குறித்த தர்க்கம் (மாற்கு 2:23-28)


மாற்கு 2:23-28
23 பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள். 24 பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். 25 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, 26 அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். 27 பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; 28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

பழைய உடன்படிக்கையின் ஓய்வுநாள் கட்டளையை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் மரணத்திற்கு பாத்திரர்களாக இருந்தார்கள். ஓய்வு நாள் என்பது ஆண்டவரால் பரிசுத்தப்படுத்தப்பட்ட நாள் ஆகும். அவருடைய பணிக்காகவும், அவர் மகிமைக்காகவும் பிரிக்கப்பட்ட நாள். முழு தேசமும் ஓய்வுநாளை அனுசரிக்கும்படி ஆண்டவர் கட்டளை இட்டிருந்தார். இது இறைவனின் ஓய்வில் முழுதேசமும் பங்கு பெறுவதன் பழைய உடன்படிக்கை அடையாளமாகும்.

ஆவிக்குரிய விதத்தில் கிறிஸ்துவும் ஓய்வுநாளை முழுமையாகக் கடைப்பிடித்தார். அவர் கல்லறையில் சனிக்கிழமை ஓய்ந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அவர் உயிருடன் எழுந்தார்.

ஆனால் பரிசேயர்கள் ஓய்வுநாளை அன்பில்லாத சடங்காச்சார செயலாக மாற்றிவிட்டார்கள். மக்கள் அடிமைகளாக மாறிப்போனார்கள். வெறுமனே கடமையாக மட்டும் இது கருதப்பட்டது.

எனவே ஓய்வுநாளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதபடி கண்டிப்புமிக்க பரிசேயர்கள் மக்களை துன்புறுத்தினார்கள். நெருப்பு மூட்டுவது கூட ஓய்வுநாளில் தடைசெய்யப்பட்டிருந்தது. ஓய்வுநாளில் அவர்கள் உணவு சமைப்பதில்லை. உணவை சூடாக்குவது இல்லை. எந்த ஒரு வேலையும் செய்வதில்லை. தானியங்களை பொறுக்குவது ஓய்வுநாளை மீறுகிற செயலாகக் கருதப்பட்டது.

இயேசு நியாயப்பிரமாணத்தை அறிந்திருந்தார். அவருடைய ஞானம் பெரியது. ஓய்வுநாளுக்காக மனிதன் உருவாக்கப்படவில்லை. மனிதனுக்காகத்தான் ஓய்வுநாள் உருவாக்கப்பட்டது என்பதை இயேசு அவர்களுக்கு காண்பித்தார். தாவீது பரிசுத்த சமூகத்திற்குள் சென்று ஆசாரியர்கள் மட்டும் உண்ணக்கூடிய அப்பங்களை எடுத்து புசித்தான். தன்னுடன் இருந்தவர்களுக்கும் கொடுத்தான். தாவீதுடன், அவனுடன் இருந்தவர்களும் பசியினால் சாகாதபடிக்கு, அந்த அப்பங்களை எடுத்துச் சாப்பிட்டார்கள். கட்டளையை மீறிய இச்செயலுக்காக தாவீதை இறைவன் தண்டிக்கவில்லை. அவனுடைய விசுவாசத்தைக் கனப்படுத்தி, பல்வேறு ஆசீர்வாதங்களைக் கொடுத்தார்.

இதைப் போன்றே ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதினால் மனிதர்கள் இரட்சிக்கப்படுவதில்லை என்று ஆண்டவராகிய இயேசு தெளிவுப்படுத்தினார். இரக்கமுள்ள இறைவன் மீது அவர்கள் கொண்டிருக்கிற விசுவாசம் தான் முக்கியம். கட்டளையை கடைப்பிடிப்பதன் மூலம் பரலோகத்தை அடைய நினைப்பவர்கள் சாபத்திற்கு கீழானவர்கள். அவர்கள் தங்கள் ஆத்துமாவின் நிலையையும், இறைவனின் அன்பையும் உணராதவர்கள்.

எனவே புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள் குறிப்பிட்ட நாட்கள் அல்லது நேரங்களை பரிசுத்தப்படுத்தும்படி கிறிஸ்து கட்டளையிடவில்லை. தங்கள் நடத்தையின் மூலம் தங்களை பரிசுத்தப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக வாழவும் கட்டளையிடுகிறார். எனவே ஆண்டவரின் பிரசன்னத்தில் மகிழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் வாழுகின்றார்கள். அவர் ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் பரிசுத்தமாக்குகிறார். அநேக பாடுகள் மத்தியிலும் இந்த உலகில் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழச் செய்கிறார்.

கிறிஸ்து நம்மை பழைய உடன்படிக்கையிலிருந்து விடுவித்திருக்கிறார். நம்மை புதிய உடன்படிக்கைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அவர் தரும் நித்திய அரசாட்சிக்கு பரிசுத்த ஆவியானவர் அச்சாரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அங்கே நாட்கள் அல்லது காலங்கள், ஓய்வு கிடையாது ஆண்டவருக்கே துதி உண்டாகட்டும்.

கிறிஸ்து தம்மை ஒய்வுநாளின் ஆண்டவர் என்று அழைக்கிறார். அவரே இறை சட்டதிட்டங்களை நமக்குக் கொடுத்தவர். அதற்கான விளக்கத்தை புதிய வழிகளில் கொடுப்பதற்கு அவர் உரிமையும், வல்லமையும் கொண்டவர். அவர் தம்முடைய நித்திய வல்லமையில் புதிய வழிமுறைகளைத் தருகிறார். கிறிஸ்து ஓய்வுநாளை அழிக்கவில்லை. தமது அன்பினால் அதை பூரணப்படுத்தினார். விசுவாசிகளின் மேல் அவருடைய ஆவியானவர் தங்கியிருக்கிறார். வாரத்தின் எல்லா நாட்களையும் அவர் பரிசுத்தப்படுத்துகிறார். நம்மை இலவசமாய் நீதிமான்களாக்கியதன் மூலம் நமக்கு சமாதானத்தைத் தருகிறார்.

கிறிஸ்தவப் பிதாக்களை ஓய்வுநாட்களில் சபை கூடாதபடி ஆவியானவர் வழிநடத்தினார். நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்தில் இருந்து புதிய உடன்படிக்கையினால் இறைவனுடைய பிள்ளைகளை விடுதலையாக்கினார். அவர்கள் சபை கூடி வருவதற்கு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளைத் தெரிந்துகொண்டார்கள். புதிய உடன்படிக்கையானது மரணத்தின் மீது வெற்றி, கிறிஸ்துவின் பிரசன்னம் இவற்றிற்கு அடையாளமாக கர்த்தருடைய பந்தி இருந்தது. நாம் இப்போது இப்படிக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் சபை கூடி வர வேண்டுமா? நாம் கேட்கவேண்டியது இதுதான். நீங்கள் புதிதாகப் பிறந்தவர்களா? விடுதலை பெற்ற பரிசுத்தவானா? அல்லது நியாயப்பிரமாணம் மற்றும் பாவத்தின் சேவகனா?

விண்ணப்பம்: பிதாவே, உமது குமாரன் எங்களை நியாயப்பிரமாணத்திலிருந்து மறுபிறப்பிற்கும், உமது நித்திய அன்பிற்கும் நேராக எங்களை விடுதலையாக்கியதற்கு, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்களது இருதயங்களில் ஆளுகை செய்கிறீர். உமது கிருபையினால் சமாதானம் தருகிறீர். நியாயப்பிரமாணத்தின் ஆவிக்கு நாங்கள் அடிமையாகாதபடி எங்களுக்கு உதவும். உமது இரக்கத்தை ஒவ்வொரு நாளும் எங்கள் செயலில் வெளிப்படுத்த உதவும். நீரும், உமது குமாரனும் எல்லா நேரங்களிலும் எங்களை இரட்சிக்கிறீர். ஆமென்.

கேள்வி:

  1. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது குறித்து இயேசுவிற்கும், யூதர்களுக்கும் ஏன் முரண்பாடு ஏற்பட்டது?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 10:06 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)