Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 093 (Peter Denies Jesus)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

10. பேதுரு இயேசுவை மறுதலித்தான் (மாற்கு 14:66-72)


மாற்கு 14:66-72
66 அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து, 67 குளிர்காய்ந்து கொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். 68 அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று. 69 வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். 70 அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். 71 அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். 72 உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான்.

பேதுரு இயேசுவை விட்டுவிட விரும்பவில்லை. இறுதிநேரத்தில் அவர் வெற்றி பெறுவார். தனது மகிமையை இறைவனின் குமாரன் வெளிப்படுத்துவார். யூதர்களின் ஆலோசனைச் சங்கம் முன்பு அற்புதம் நிகழ்த்துவார் என்று நிச்சயமாக நம்பினான்.

அப்போஸ்தலர்களில் முதன்மையானவன் எந்த விலைக்கிரயம் செலுத்தியாவது கிறிஸ்துவுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற தீர்மானமாய் இருந்தான். எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வாக்குறுதிகளை இறைவனிடம் முழுமையாகவோ அல்லது சரியாகவோ நிறைவேற்ற முடியாது என்பதை அறியாமல் இருந்தான். பலவீனமான சுயத்தின் மீதான விசுவாசத்தில் வாக்குறுதிகள் அஸ்திபாரமிடப்படுகின்றன.

கிறிஸ்துவைப் பின்பற்றுவோரை உலகம் விரைவில் அடையாளம் கண்டுகொள்ளும். அவர்களுடைய முகங்கள் கிறிஸ்துவின் இரக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. அவர்களின் சுபாவம் மறைந்திருக்காது. தூரத்தில் இருந்து இந்த உலகம் அவர்களின் ஆவியை உணர்ந்துகொள்ளும்.

தன்னுடைய ஆண்டவர் கட்டப்பட்டிருந்த சூழ்நிலையில் பேதுரு மறைந்துகொண்டு நிற்பதை ஒரு சாதாரண வேலைக்காரப் பெண் கண்டுபிடித்தாள். பேதுரு இருள்சூழ்ந்த நேரத்தில் கோழை கதாநாயகனைப் போல இயேசுவைப் பின்தொடர்ந்தான். இவ்விதமாக ஆரம்பத்தில் இருந்தே அவரை மறுதலிக்கும்படி அவன் ஆயத்தப்பட்டான். தன்னை யாரும் கண்டுபிடிப்பதை அவன் விரும்பவில்லை. இவ்விதமாக அவன் பொய் பேச ஆயத்தப்பட்டான். பேதுரு தனது எஜமானை மறுதலித்தான். அவனுடைய அறிக்கையை மறந்துபோனான். பரிசுத்த ஆவியானவர், இதை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தார். நசரேயனாகிய இயேசுவே கிறிஸ்து. அவர் உயிருள்ள இறைவனின் குமாரன். பேதுரு புறக்கணித்த போதும், பொய்பேசிய போதும் நரகம் நகைத்தது. அப்போஸ்தலர்களில் முதன்மையான பேதுரு தன்னுடைய எஜமானை மறுதலித்தபோது, பிசாசினுடைய நகைப்பின் சத்தத்தின் எதிரொலியாக சேவுல் கூவுகிற சத்தம் இருந்தது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் தடுமாற்றம் ஏற்பட்டதால், பொய்களின் பிதாவிற்கு இரையாக பேதுரு எளிதில் மாறிப்போனான். கிறிஸ்துவின் மீதான உனது விசுவாசத்தில் நீ உண்மையாக இருக்கிறாயா? அல்லது பரிசுத்த ஆவியினால் நீ பிறவாததினால் நீ மன உறுதியற்றவனாக இருக்கிறாயா?

நரகம் வெற்றியை முழுமையடையச் செய்தது. சிறிய பொய்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் அது திருப்தியடையவில்லை. உறுதியான மறுதலிப்பிற்கு நேராக பேதுருவை அது வழிநடத்தியது. அவன் இன்னொரு பெண் முன்பாக தனது எஜமானை மறுதலித்தான். அவரை ஒருபோதும் அறியவில்லை என்று சத்தியம் பண்ணினான்.

பேதுரு பயந்தானா? அல்லது கசையடியை தவிர்க்க எண்ணினானா? அல்லது வேலைக்கார பெண்ணையும், ஒன்றும் அறியாத வேலைக்காரர்களையும் அவன் ஒரு பொருட்டாக கருதவில்லையா? கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் தனது தைரியத்தைக் காண்பிக்க, ஆலோசனைச் சங்கம் முன்பு இப்படி நினைத்து செயல்பட்டானா?

நிச்சயமாக நமக்கு காரணம் தெரியாது. பேதுருவிற்கும் வேலைக்காரப் பெண்ணிற்கும் ஏற்பட்ட கூர்மையான உரையாடலை குளிர்காய்ந்து கொண்டிருந்த மக்கள் கவனித்தார்கள். அவர்கள் பேதுருவை உற்று நோக்கினார்கள். அவனுடைய பேச்சைக் கவனித்தார்கள். கலிலேயனாகிய இயேசுவைப் போல அவனுடைய பேச்சு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். தனது இரட்சகர் மற்றும் அவருடைய குணமாக்கும் அற்புதச் செயல்களுக்கு சாட்சி பகர கிடைத்த நிகரற்ற சந்தர்ப்பத்தை பேதுரு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இயேசு ஏற்கெனவே முன்னுரைத்த படியே, அவன் அவரை வெளியரங்கமாக சபித்தான். இயேசுவை ஒருபோதும் அறியவில்லை என்று சபித்தான்.

இது சாத்தானுடைய திட்டம்: இயேசுவைப் பின்பற்றுவோர அவருடைய ஆண்டவரை மறுதலிக்கும் படி வழிநடத்துவது, அவர்கள் தாமாகவே வீழ்ந்து போகச் செய்வது, அவர்களது விசுவாசத்தை பலவீனப்படுத்துவது, இயேசுவை விட்டு அவர்களை தூரப்படுத்துவது.

கிறிஸ்து இந்த சம்பவத்தை முன்பாகவே அறிந்திருந்து கொண்டவராக இருந்தார். நரகத்தின் வெற்றியை தனது அன்பினால் ஒன்றுமில்லாமையாக்கினார். பேதுரு யூதாசைப் போல தனது உள்ளான இருதயத்தில் அவரை மறுதலிக்கவில்லை. அவன் பட்டயத்தைக் குறித்த பயத்தால் அவசரப்பட்டு அவரை மறுதலித்துவிட்டான். இதனால் அவன் சாத்தானுடைய வலையில் வீழ்ந்தான். அவனுடைய மூன்றாவது மறுதலிப்பின் போது பேதுருவை எச்சரிக்கும்படி சேவல் இருமுறை கூவுவதைக் குறித்து கிறிஸ்து பேசியிருந்தார். பின்பு சேவலின் சத்தம் அவனுடைய இருதயத்தை ஊடுறுவிச் சென்றது. அவன் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார். அவன் முதன்மையான சீஷன் அல்ல என்பதைப் புரிந்துகொண்டார். அவன் எதற்கும் உபயோகமற்ற ஒரு பொய்யன். அவன் நித்திய நியாயாதிபதி முன்பு நடுங்கி பயந்து நின்றான். தன்னையே தாழ்த்தினான். மனம் கசந்து அழுதான்.

இயேசு அடிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டபோது, பேதுரு கண்ணீர் சிந்தினான். அவனது பெருமை உடைக்கப்பட்டது. அவன் உள்ளம் நொறுங்கியவனாக தனது தோல்வியை அறிந்தான். இந்த மனந்திரும்புதல் மூலம் கிறிஸ்து அவனுடைய சீஷத்துவத்தை புதுப்பிக்க ஆரம்பித்தார். மெய்யான மனந்திரும்புதலின்றி ஜென்ம சுபாவ மனிதன் இறைவனின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது. அவன் சுயத்தை வெறுக்க வேண்டும். பரிசுத்த ஆவியினால் புதுப்பிக்கப்பட வேண்டும்.

நீ சேவல் கூவுகிற சத்தத்தைக் கேட்டதுண்டா? நீ கிறிஸ்துவைப் பின்பற்றுபவன் என்பதை அது உனக்கு நினைவுப்படுத்துகிறது. ஒருவேளை நீ அவரை மறுதலிக்கக்கூடிய அபாயத்தில் இருக்கலாம். அல்லது ஒரு கொடிதான பாவத்தில் வீழ்ச்சியடைய நேரிடலாம். சேவல் கூவுகிற சத்தம் ஆழ்ந்த நித்திரையிலிருந்து உன்னை விழிப்படையச் செய்யக்கூடும். இரட்சகர் முன்பு உனது பாவத்தை அறிக்கையிடு. வெட்கக்கேடான உனது சுயத்தை எண்ணி மனம் கசந்து அழுது மனந்திரும்பு. அப்போது இரட்சிக்கப்பட்டு, என்றென்றும் வாழ்வடைவாய்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் பேதுருவை விட சிறந்தவர்கள் அல்ல. எங்கள் சூழ்நிலைகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் வெட்கக்கேடான பாவங்கள் மூலம் ஆயிரக்கணக்கான முறை நாங்கள் உம்மை மறுதலிக்கிறோம். நீர் என்னை அறிந்திருக்கிறீர். எனது பாவத்தை மன்னியும். என்னை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தும். என்னுடைய சுயநம்பிக்கையிலிருந்து என்னை விடுவித்து, உம்மீது மட்டுமே நம்பிக்கை கொள்ளச் செய்யும். உம்மைப் பின்பற்றுவதன் மூலம் உமது வல்லமையை அனுபவிக்க உதவும். ஆமென்.

கேள்வி:

  1. எவ்விதம் பேதுரு படிப்படியாக நொறுக்கப்பட்டான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:41 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)