Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 092 (Jesus Before the Religious Court)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

9. ஆலோசனைச் சங்கம் முன்பு இயேசு (மாற்கு 14:53-65)


மாற்கு 14:53-65
53 இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள். 54 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்து கொண்டிருந்தான். 55 அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை. 56 அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை. 57 அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள்கேட்டோம் என்று, 58 அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். 59 அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று. 60 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 61 அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். 62 அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். 63 பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? 64 தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள். 65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

யூதப் பிரதிநிதிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி ஒன்று கூடினார்கள். பகையினாலும் , பொறாமையினாலும் நிறைந்து இயேசுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தார்கள். அவர்களில் அநேகர் இளம் நசரேயனை ஒழித்துக்கட்ட தீர்மானித்தார்கள். அவர்களுடைய குற்றச்சாட்டின்படி தேசத்தில் தாக்கம் உண்டுபண்ணியதின் மூலம் ரோம அதிகாரத்தின் தலையீடு ஏற்பட்டு புதிய யுத்தம் ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் பயந்தார்கள்.

தங்கள் தீய எண்ணத்தை மறைத்து, வெளிப்பிரகாரமான சட்ட நடவடிக்கைகளை அவர் மீது கொண்டு வந்தார்கள். நியாயப்பிரமாணத்தின்படி இயேசு தவறு செய்துவிட்டார். அவர் இறைநிந்தனை செய்பவர், ஏமாற்றுக்காரர் என்று நிரூபிக்க பொய்சாட்சிகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் பொய் சாட்சிகள் மூலம் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட முடியவில்லை.

இறுதியான சாட்சியும் பொய்யாகிவிட்டது. இறை ஆலயத்தைக் குறித்து கிறிஸ்து கூறிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த குற்றச்சாட்டு இருந்தது. அவர் ஒருபோதும் இப்படிக் கூறவில்லை, “இந்த ஆலயத்தை நான் இடித்துப் போடுவேன்”. அவர் இப்படிச் சொன்னார், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். நான் இதை மூன்று நாட்களில் எழுப்புவேன். (யோவான் 2:19) தமது சரீரமாகிய ஆலயம் மற்றும் தமது உயிர்ந்தெழுதலைக் குறித்து அவர் பேசினார்.

இயேசுவின் வார்த்தைகள் மற்றும் அதற்குரிய வியாக்கியானங்கள் குறித்து யூதர்கள் விவாதித்தார்கள். அவர்கள் செய்தியின் மையத்தை புரிந்துகொள்ளவில்லை. அவர்கள மத்தியில் இருந்த இயேசுகிறிஸ்து தான் இறைவனின் உயிருள்ள ஆலயமாக இருக்கிறார். அவருக்குள் இறைவனின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருக்கிறது.

மனிதர்களின் பொய்கள் முன்பு இயேசு அமைதி காத்தார். துன்மார்க்கமான பொய்களின் நிமித்தம் தன்னை சிலுவையில் பிதாவானவர் கைவிடமாட்டார் என்று இயேசு நம்பிக்கையுடன் இருந்தார். பாவிகள் மீதான தனது அன்பைக் காண்பித்தார். அவருடைய அமைதியைக் கண்டு ஆலோசனைச் சங்கத்தார் கலக்கமடைந்தார்கள். இருப்பினும் தன்னைச் சுற்றியிருந்த தமது எதிரிகளைக் கண்டு இயேசு பயப்படவில்லை. தமது உண்மையுள்ள பிதாவின் வழிநடத்துதலுக்கு முழுவதுமாக தன்னை ஒப்புக்கொடுத்தார்.

விசாரனை தோல்வியுற்றபோது, பிரதான ஆசாரியனாகிய காய்பா எழுந்து நின்றான். உயிருள்ள இறைவனின் குமாரனாகிய மேசியா இயேசு தானா என்பதை அறிக்கையிடும்படி கேட்டான். இயேசுவின் மீது மரணத்திற்கு ஏதுவான தீர்ப்பு கொண்டுவரும்படி அவன் இப்படிக் கேட்டான். வலிமைமிக்கவரும், இறைவனுடைய வல்லமையினால் தாங்கப்படக் கூடியவராகவும் இருக்கிற கிறிஸ்துவை யூதர்கள் எதிர்பார்த்தார்கள். பாடுகளின் மத்தியில் கட்டப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவருமாக நிற்கிற கிறிஸ்துவை எதிர்பார்க்கவில்லை.

இறைவனுடைய குமாரன் என்று உரிமை கோருவதை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்க பிரதிநிதிகளும் மிக மோசமான இறைநிந்தனையாகக் கருதினார்கள். இறைவன் ஒருவராயிருக்கிறார். அவருக்கு துணையானவர் யாரும் கிடையாது. அவர் மகிமையிலும், பரலோக ஒளியிலும் வாழ்கிறார்.

அவர் ஆலோசனைச் சங்கத்தின் முன்பு நின்றார். நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களிடம் பதிலளித்தார். அவர் யார்? அவரது பணி என்ன? என்பதையும் அவருடைய எதிர்கால வருகையையும் குறிப்பிடும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளில் மிகவும் அற்புதமான வார்த்தைகளில் இவைகளும் ஒன்று. எனவே இதை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில் அதைக் காத்துக்கொள்ளுங்கள்.

கிறிஸ்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்படி பொய் கூறவில்லை. தனது உண்மையான தன்மையை அவர் மறுதலிக்கவில்லை. அவர் கூறினார். “நான் இருக்கிறேன்”. இது பழைய உடன்படிக்கையும், புதிய உடன்படிக்கையின் அஸ்திபாரத்தையும் குறிப்பிடுகின்ற ஒரு வாக்கியம் ஆகும். பத்துக்கட்டளைகளை ஆண்டவர் கொடுத்தபோது இந்த வாக்கியத்தைக் கூறினார். “நான் இருக்கிறேன்” என்று கூறி வனாந்தரத்தில் எரியும் முட்செடியின் மத்தியில் தன்னை வெளிப்படுத்தினார். இதேவிதமாக கிறிஸ்து யோவான் நற்செய்தி நூலில் பலமுறை இந்த வாக்கியத்தை பயன்படுத்துகிறதைக் காண்கிறோம். “நான் இருக்கிறேன்” கிறிஸ்து தன்னை இறைவனின் குமாரன் என்று அழைத்தார். மேலும் தனக்குள் இறைவன் வாசமாயிருக்கிறார் என்பதையும் அறிக்கையிட்டார். அவர் மூப்பர்கள் மத்தியில் கட்டப்பட்டவராக நின்றுகொண்டிருந்தார். அவர்கள் இதைக் கேட்டபோது மிகவும் கோபப்பட்டார்கள்.

இந்த அறிக்கை நிச்சயமாக மரணத்தைக் கொண்டுவரும் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் வானம் திறப்பதைக் கண்டார். தனது உயிர்த்தெழுதலை அவர் அறிக்கையிட்டார். அவர் பரமேறிச் சென்று பிதாவின் மகிமை நிறைந்த வலது பாரிசத்தில் அமருவார். அவர் மட்டுமே மனிதர்களை இரட்சிக்கிறவர். இறைவனின் வலது பாரிசம் என்பது கிறிஸ்துவிற்கு மட்டுமே உரிய இடம் ஆகும். “கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்” (சங் 110:1).

எழுபது மூப்பர்கள் முன்பு இயேசு தன்னை குற்றம் தீர்க்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காண்பித்தார். கிறிஸ்துவின் பாதத்தின் கீழ் அவர்களை இறைவன் கொண்டு வருவார் என்பதை வெளிப்படுத்தினார். (தானி 7:13) இறைவனின் வார்த்தை கூறுவதை இளம் நசரேயன் நீதிபதிகள் முன்பு சாட்சியிட்டார். உண்மையில் அவர் நித்திய நியாயாதிபதியாக இருக்கிறார். உயிருள்ளோரையும், மரித்தோரையும் நியாயம்தீர்க்கிற இறைவனின் குமாரன் வானத்தின் மேகங்கள் மீது வருவார்.

இந்த வசனங்களின் அர்த்தங்களை ஒவ்வொரு யூதனும் அறிந்திருந்தான். யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தின் முன்பு கிறிஸ்து தான் மேசியா என்பதை அறிக்கையிட்டார். இந்தக் குறிப்பான வார்த்தைகள் மூலம் தான் உயிருள்ள இறைவனின் குமாரன் என்பதையும், மற்றும் அவரே மெய்யான கிறிஸ்து, நித்திய நியாயாதிபதி, ஆண்டவர் என்பதையும் நிரூபித்தார். அனைவரும் அவருக்கு பதிலளிக்க வேண்டியவர்கள். அவரையே ஆராதிக்க வேண்டியவர்கள். துதியின் பாடல்களை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

இஸ்ரவேலின் தலைவர்கள் இயேசுவிற்கு உடனடியாக தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் அல்லது அவருக்கு மரணத்தீர்ப்பு கொடுக்க வேண்டும். இறைநிந்தனை செய்தார் என்று குற்றம் சுமத்தி மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள். எல்லோர் முன்பும் அவரை அடித்தார்கள்.

இறைவனின் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியானவர் அவர்கள் முன்பு அமைதியாக நின்றார். அவர்களுடைய அக்கிரமத்தையும், பகையையும் அவர் சுமந்தார். அவர் மாறுத்தரம் எதுவும் சொல்லவில்லை. மனிதர்கள் தங்கள் கீழ்ப்படியாமையில் இறைவனின் குமாரனை அடிக்கிறார்கள். உனது நிலை என்ன? நீ அவரை ஆராதிக்கிறாயா? அவரை நேசிக்கிறாயா? அல்லது அவரை புறக்கணிக்கிறாயா? அவரை நீயும் சிலுவையில் அறைகிறாயா?

விண்ணப்பம்: உயிருள்ள ஆண்டவராகிய இயேசுவே, நீரே என் ஆண்டவர், என் இறைவன், என் நியாயாதிபதி, என் மீட்பர். உமது கரங்களில் எனது ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுக்கிறேன். எங்கள் பாவங்களை மன்னியும், எங்களை பரிசுத்தப்படுத்தும். உமது இறைத்தன்மையை பயமின்றி சாட்சியிட உதவும். உமது சித்தத்தின்படி நடக்க கற்றுத்தாரும். நீர் இறைவனின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறீர். நீர் மகிமை நிறைந்தவராக விரைவில் வருவீர். ஆமென்.

கேள்வி:

  1. யூதர்களின் ஆலோசனைச் சங்கம் முன்பு இயேசு அளித்த பதிலின் அர்த்தம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:20 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)