Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 090 (Jesus’ Struggle in His Prayer)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

7. இயேசு மன்றாடும் போது ஏற்பட்ட போராட்டம் (மாற்கு 14:39-42)


மாற்கு 14:39-42
39 அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். 40 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள். 41 அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். 42 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.

நீதியுள்ள இயேசுவின் மீதும், உலகத்தின் மீதும் காரிருள் வந்தது. நமது பாவங்களை ஏற்றுக்கொண்ட அவர் மீதான இறைவனின் கோபம் அதிகமானது. தீமையின் சேனைகள் அவரைப் பின்பற்றுவோரின் ஆத்துமாக்களைத் தாக்கின. இயேசு நகரத்திற்கு வெளியே கெத்சமனே தோட்டத்திற்குள் சென்றார். அங்கு ஒலிவ எண்ணெய் ஆலை இருந்தது. அவரை நொறுக்கவும், அவரை நசுக்கவும் ஆண்டவர் சித்தம் கொண்டார். அவரிடமிருந்து புதிய எண்ணெய் புறப்பட்டு அனைத்து விசுவாசிகளையும் நோக்கி வந்தது. நல்ல ஒலிவமரத்தின் வேருடனும், வளங்களுடனும் நாம் பங்காளிகளாக இருக்கிறோம். அவர் பிதாவின் கோபாக்கினை என்ற ஒலிவ எண்ணெய் ஆலையில் நொறுக்கப்பட்டார். அவர் தாமே நமக்காகப் பாடுபட்டார்.

இயேசு நடுங்கினார். அவர் துக்கம் நிறைந்தவராக வியாகுலப்பட்டார். அவருடைய இருதயத்தின் கவலை மிகவும் பெரியது. அது அவரை முழுவதும் நசுக்கியது. அவரைத் தவிர வேறு ஒருவரும் இந்த வேதனையை விளங்கிக்கொள்ள முடியாது. அவரை நேசிப்பவன், அவருடன் இணைந்திருப்பவன் இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட இந்த நிகழ்வின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இறைவனுடைய குமாரன் மரணத்திற்கும்,சாத்தானுக்கும் பயப்படுகிறவர் அல்ல.அவர் இந்த தீய வல்லமைகளுடன் போராடி, தமது சரீரத்தில் அவைகள் மீது வெற்றி பெற்றார். அநேக முறை அவர் இவ்விதமாக வெற்றியை அடைந்தார்.

அவர் தன்னையே தாழ்த்தி, தமது அன்பினால் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார். பிதாவானவர் தமது முகத்தை அவருக்கு மறைத்தார். மனிதர்களின் பாவத்தை சுமந்த பலி ஆடாக அவரை மாற்றி, நமது இடத்தில் அவரை தண்டித்தார்.

அவர் மீது ஊற்றப்பட்ட இறைவனுடைய நியாயத்தீர்ப்பினால் இயேசு தமது பிதாவை விட்டுப் பிரிக்கப்படுவதை எண்ணி நடுங்கினார். இறைவனின் கோபாக்கினையாகிய கசப்பான பாத்திரத்தை அவர் ஏற்றுக்கொள்ளாதபடி கிறிஸ்துவின் சரீரமும், மனித ஆத்துமாவும் தடுத்தன. ஆனாலும் மனிதர்களின் பாவங்களுக்கான தண்டனையை அவர் தன்மீது ஏற்றுக்கொண்டார்.

குமாரன் உதவிக்காக மன்றாடினார். இந்த கடினமான நேரத்தில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பிதாவிடம் கேட்டார். உலக இரட்சிப்பிற்காக வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா? அவர் உலகத்தாரின் மீட்பிற்காக வந்தவர். இந்த சூழ்நிலையில் அவர் நொறுக்கப்பட்டார். தனது சுயத்தை முழுமையாகக் கொண்டு செயல்பட்டார். அந்தப் பாத்திரத்தைப் பானம்பண்ணும்படி அவர் ஆயத்தமானார். இந்தப் போராட்டமானது நமக்கு ஒரு உண்மையைப் போதிக்கிறது, உலகை மீட்பதற்கு சிலுவையைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை.

சீஷர்கள் தங்களுடைய விண்ணப்பங்களினால் அவருக்கு உறுதுணையாக இருக்கும்படி இயேசு கூறியிருந்தார். சற்று முன்பு கிறிஸ்துவிற்காக உயிரையும் விடுவேன் என்று கூறிய பேதுரு தூங்கிக்கொண்டிருந்தான். இருளின் அதிகாரத்தின் கீழ் சீஷர்கள் நித்திரை மயக்கத்தில் இருந்தார்கள். எந்த ஒரு மனிதனும் தனது பெலத்தினால் பிசாசை மேற்கொள்ள முடியாது. இறைவனின் ஆவியானவர் விசுவாசிகளைப் பாதுகாக்கிறார். அவர்களுக்கு வெற்றியைத் தருகிறார்.

தன் மீது நம்பிக்கை கொள்பவன் இக்கட்டான சூழ்நிலையில் இருள்சூழ்ந்து கொள்வதைக் காண்பான். ஆரம்பத்தில் இருந்து இந்தப் போராட்டம் இருக்கிறது. தனது சொந்த அனுபவத்தின் மூலம் இயேசு நம்மை எச்சரிக்கிறார். நாம் பரிசுத்த ஆவியின் பெலத்தை நாட வேண்டும். பரிசுத்த வேதாகமத்தைப் படிக்க வேண்டும். தொடர்ச்சியாக மன்றாட வேண்டும். வேததியானம் நமது மனதைப் பலப்படுத்துகிறது. நாம் தீய ஆவிகளையும், அவைகளின் தீய வழிகளையும் பகுத்தறிக முடியும். வஞ்சிக்கிறவனாகிய சாத்தானின் சோதனைகளை நாம் மேற்கொள்ள முடியும்.

நற்செய்தியை கவனமாக வாசிக்காதவன், கருத்துடன் மன்றாட்டை ஏறெடுக்காதவன் நிச்சயமாக சோதனையில் வீழ்ந்து போவான். மனிதன் இறைவனுக்கு பணி செய்ய விருப்பமாய் இருக்கிறான். ஆனாலும் மாம்சம் பலவீனமாக உள்ளது. நமக்கு இறைவனின் வல்லமை தேவை. அவருடைய ஆவியானவர் நமது ஆவியைப் பலப்படுத்துகிறார். நமக்கு வெற்றியைத் தருகிறார். விசுவாசத்தின் காரியங்களை புறக்கணிக்க வேண்டாம். ஆவிகளுடன் போராடும்படி இறைவனிடம் வாருங்கள். இறைவனின் ஆவி மட்டுமே உன்னைப் பெலப்படுத்த முடியும். உனது மாம்சத்தின் இச்சைகளையும், மனதின் மூடத்தனத்தையும் நீ அவரால் மேற்கொள்ள முடியும்.

ஆவிக்குரிய யுத்தத்தில் சீஷர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். விழித்திருக்கும்படி கிறிஸ்து அவர்களுக்குக் கட்டளையிட்டார். எந்த ஒரு மனிதனும் இறைவனுடன் உலகத்தை ஒப்புரவாக்க முடியாது என்பதை இந்த அனுபவம் நமக்கு காண்பிக்கிறது. இயேசுவைத் தவிர வேறு ஒருவனும் சாத்தானை வெல்ல முடியாது. எல்லோரும் தூங்கினாலும் அவர் விழித்திருந்து மன்றாடினார். இயேசுவில் நமக்கு எவ்வளவு பெரிய ஆறுதல் இருக்கிறது. பரலோகத்தில் அவர் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர் இரவுபகலாக விழித்துக்கொண்டிருக்கிறார். அவர் நமது பலவீனத்தின் மத்தியில் நமக்காகப் பரிந்து பேசுகிறார். நமது உண்மையற்ற தன்மையை அவரது உண்மை மேற்கொள்கிறது. அவருடைய பெலன் நமது பலவீனத்தை சரிசெய்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த மனிதர்களினால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இயேசு இதை மறுபடியும், மறுபடியும் சொல்லிக் கொண்டே இருந்தார். பரலோகமும், பூமியும் இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தன. இயேசுவின் அனைத்துப் போதனைகளும் சீஷர்களுக்கு உதவி செய்யாததைப் போலக் காணப்பட்டது. இன்னும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அருளப்படவில்லை.

தமது சீஷர்கள் சோதனையில் தோற்றுப்போன போது இயேசு கூறினார் “போதும்” இறுதியாக இயேசு தமது சீஷர்களிடம் கூறினார்: “இதோ”. தங்கள் முன்பு நேரிடவுள்ள அந்த விசித்திரமான நிகழ்வைக் காணும்படி அவர்கள் கண்களைத் திறக்கச் சொன்னார். வேதாகமத்தில் “இதோ” என்ற வார்த்தையை நாம் எங்கு வாசித்தாலும், நமது கண்களைத் திறந்து கவனமாகப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் முக்கியமான செய்தி என்ன? பிதாவின் சித்தத்திற்கு இயேசு கிறிஸ்து முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். பாவிகளின் கைகளால் சங்கிலியினால் கட்டப்படும்படி ஒப்புக்கொடுத்தார். பாவம் நிறைந்த தன்னால் படைக்கப்பட்ட மக்களின் கரங்களில், படைத்தவர் தன்னையே கொடுத்தார்.

இதற்கு முன்பு இயேசு தூங்கிக்கொண்டிருந்த சீஷர்களை எழுப்பி அவர்களிடம் கூறினார்: “இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் வந்துவிட்டான். எனது உண்மைக்குப் பதிலாக அவனது துரோகத்தைப் பரிசாகக் கொடுக்கிறான். நான் அவனை மீட்டேன். அவன் என்னை வெறுக்கிறான். நான் அவனுக்காக மன்றாடினேன். அவன் என்னை வெறுக்கிறான். அவன் தன்னையே அழித்துக்கொள்கிறான்”.

பிரியமான சகோதரனே, நீ எப்படி இருக்கிறாய்? நீ தூங்கிக்கொண்டிருக்கிறாயா? அல்லது இயேசுவின் வார்த்தைகளை கவனமாகவும், கருத்துடனும் கேட்டுக்கொண்டிருக்கிறாயா?

விண்ணப்பம்: ஆண்டவரே, எங்களுக்காக நீர் பாடுபட்டபடியினாலே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் மனித எண்ணங்கள், ஆவிக்குரிய உறக்கத்திற்காக எங்களை மன்னியும். உமது வார்த்தையினால் எங்களை எழுப்பும். சோதனைகளை நாங்கள் பகுத்தறிய உதவி செய்யும். உமது பரிசுத்த ஆவியினால் எங்களைப் பெலப்படுத்தும். நாங்கள் உமது கட்டளைகளை நிறைவேற்ற உதவும். உமது சித்தம் செய்யவும், உம்மை மகிமைப்படுத்தவும் கிருபை தாரும். நீர் எங்களுக்காக பரிந்து பேசுகிறீர். நீர் எங்களுக்காக இறைவனின் கோபாக்கினையாகிய பாத்திரத்தை ஏற்றுக்கொண்டீர். ஆமென்.

கேள்வி:

 1. இயேசு ஏன் மிகவும் நடுக்கமுற்று, வியாகுலப்பட்டார்?

கேள்விகள் - 4

பிரியமான வாசகரே,
நற்செய்தியாளர் மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்த நான்காவது பாடத்தை நீங்கள் கவனமாகப்படித்தால், பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் எளிதில் பதிலளிக்க முடியும். 19 கேள்விகளில் 15 க்கு சரியான பதில் அளித்தால், நாங்கள் உங்களுக்கு கடைசி பாடத்தை அனுப்பி வைப்போம்.

 1. இரண்டு ஆண்டவர்கள் இருக்கிறார்களா?
 2. மக்களின் காணிக்கையைக் குறித்து இயேசு என்ன நினைத்தார்?
 3. தேவாலயத்தின் அழிவைக் குறித்து இயேசு கூறிய வார்த்தைகளின் முக்கியத்துவம் என்ன?
 4. “யுத்தங்கள் நேரிடும்? என்று இயேசு ஏன் சொன்னார்?”
 5. உலகத்தின் முடிவோடு எவ்விதம் உலகிற்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல் இணைக்கப்படுகிறது?
 6. “பாழாக்குகிற அருவருப்பு” என்றால் என்ன அர்த்தம்?
 7. மகா உபத்திரவ காலத்தில் யார் பிரவேசிப்பார்கள்?
 8. அந்திகிறிஸ்துவின் குணாதிசயங்கள் என்ன? அவனுடைய வருகைக்கான அடையாளங்கள் என்ன?
 9. கிறிஸ்துவின் வருகைக்கான கடைசி அடையாளங்கள் என்ன?
 10. “இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்த சந்ததி ஒழிந்து போகாது”. என்ற கூற்றின் அர்த்தம் என்ன?
 11. உலகங்களின் முடிவைக் குறித்த தீர்க்கதரிசனத்தில் இருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்?
 12. ஆண்டவருடைய வருகைக்காக நாம் எப்படி விழிப்பாயிருந்து காத்திருக்க முடியும்?
 13. பஸ்கா ஆட்டுக்குட்டியின் முக்கியத்துவம் என்ன?
 14. மரியாள் இயேசுவை அபிஷேகம் செய்த காரியம் மற்றும் அதற்குப் பின்பு நடந்த உரையாடலில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
 15. யூதாஸ் இயேசுவையும், சீஷர்களையும் காட்டிக்கொடுக்க ஏன் நினைத்தான்?
 16. இயேசு இரவு உணவு ஆயத்தப்படுத்தும்படி விரும்பிய வீட்டில் இருந்த மனிதனை கண்டுகொள்ளும்படி இயேசு தமது இரண்டு சீஷர்களுக்குக் கொடுத்த அடையாளம் என்ன?
 17. கர்த்தருடைய இராப்போஜனத்தின் முக்கியத்துவம் என்ன?
 18. இயேசு பேதுருவை எச்சரித்த போது அவன் செய்த தவறு என்ன?
 19. இயேசு ஏன் மிகவும் நடுக்கமுற்று, வியாகுலப்பட்டார்?

தயவுசெய்து உங்கள் முழுப்பெயர், முகவரியை தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் பதில்களை பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள்:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany
Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 11:58 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)