Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 036 (Sending Out the Twelve)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

8. பன்னிரெண்டு பேரை அவர்கள் தேசத்திற்குள் அனுப்புதல் (மாற்கு 6:7-13)


மாற்கு 6:7-13
7 அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, 8 வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்; 9 பாதரட்சைகளைப் போட்டுக் கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார். 10 பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால் அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள். 11 எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12 அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13 அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள்.

இயேசு கோத்திரங்களின் எண்ணிக்கைக்குத் தக்கதாக தமது சீஷர்களை தேசத்திற்குள் அனுப்பினார். அனைவரையும் இறைவனுடைய ராஜ்யத்திற்குள் அழைக்கும்படி கட்டளையிட்டார். ஒவ்வொரு தனிநபரும் மனந்திரும்புவதும், தீமையில் இருந்து விடுதலை பெறுவதும் அவசியமானது. தன்னால் தெரிந்துகொள்ளப்பட்டோரை ஆயுதமில்லாமல், இரண்டு இரண்டு பேராக ஆவிக்குரிய யுத்தம் செய்யும்படி அனுப்பினார். ஒருவரையொருவர் பெலப்படுத்தும்படியும், ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படியும் அப்படிச் சொன்னார். ஒருவர் பேசும் போது, மற்றொருவர் மன்றாட முடியும். ஒருவர் சோர்வுறும்போது, மற்றொருவர் அவரை உற்சாகப்படுத்த முடியும். இறைவனுடைய ராஜ்யம் என்பது தனிநபர்களின் அறிவுத்திறமையால் கட்டப்படுவது அல்ல. அனைவர் மத்தியிலும் இருக்கும் அன்பின் ஐக்கியத்தால் கட்டப்படுகிறது. கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன் அவருடைய தூதுவராகவும், அவருடைய ராஜ்யத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறான். விசுவாசிகளின் இருதயங்களில் செயல்படும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் இன்று இது உணரப்படுகிறது. கிறிஸ்துவின் மரணம், வாழ்வு, அசுத்த ஆவிகளைத் துரத்துதல், இருளின் வல்லமை மறைந்துபோதல், மீட்பர் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கை ஆகியவற்றை அவருடைய செய்தியாளர்கள் பிரசங்கிக்கும் போது, மக்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெறுகிறார்கள்.

கிறிஸ்துவின் செய்தியாளர்கள் எளிமையானவர்கள். அவர்களுடைய செல்வத்தை யாரும் இச்சிக்கவோ, அவர்களைத் தாக்கவோ முடியாது. அவர்கள் உலக சுமைகளினால் தங்களை வருத்தப்படுத்த மாட்டார்கள். தங்கள் பரலோகப் பிதாவை எல்லா நேரத்திலும் நம்புவார்கள். முதலாவது இறைவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும். நீங்கள் இறைவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்ய இயலாது. ஒன்றை நேசித்து, இன்னொன்றை பகைப்பீர்கள். ஒன்றிற்கு உண்மையாய் இருந்து, மற்றதை அசட்டை செய்வீர்கள். மனிதர்கள் சுபாவத்தின்படி பணம், உடைமையை விரும்புகிறார்கள். கிறிஸ்து தமது ஆவிக்குரிய ராஜ்யத்திற்கும் மனதிருப்தி, பரலோகப் பிதாவின் மீது தொடர்ச்சியான நம்பிக்கையின் அடிப்படையில் அவருடைய வல்லமையான பணிக்காகவும் உங்களை அழைக்கிறார்.

ஆயத்தமாய் இருப்பவர்களுக்கு நேராக பரிசுத்த ஆவியானவர் ஆண்டவரின் பணியாளர்களை வழிநடத்துகிறார். அவருடைய வார்த்தையைக் கேட்கும்படி ஆயத்தமாயிருப்பவர்களுக்கு நேராக ஆண்டவர் உங்களை வழிநடத்தும்படி ஊக்கமாய் மன்றாடுங்கள். அவருக்காக ஏங்கும் தனிநபர்களைக் கண்டுபிடிக்கும்படி ஆண்டவர் உங்களை அழைக்கிறார். அவர்கள் உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள். உங்கள் பிரசங்கம் பலனுள்ளதாக இருக்கும். அவர்கள் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் அன்பை உருவாக்குவார். நீங்கள் இறைவனுடைய வழிநடத்துதலின்படி விசுவாசக் கீழப்படிதலுடன் இருக்கும்போது, உங்கள் வார்த்தைகளைக் கேட்கும் இருதயங்களில் இருந்து சமாதானத்தின் ஆவியானவர் அசுத்த ஆவிகளைத் துரத்துவார். அவர் நொந்துபோன இருதயங்களை சுகப்படுத்துவார். உங்கள் தாழ்மையான பணியின் மூலம் அநேகரை இரட்சிப்பார்.

விண்ணப்பம்: ஆண்டவரே, எங்கள் மீதான உமது அன்பிற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள். உமது அன்பின் ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கும்படி நீர் எங்களை உமது அதிகாரத்தினால் அழைத்திருக்கிறீர். பரிசுத்தத்தில் நடக்க உதவும். உமது வல்லமையின் வார்த்தையினால் எங்களை பயிற்றுவியும். உமது நீதியின் மீது பசிதாகமுள்ளோர் திருப்தியடையச் செய்யும். அசுத்தம், பெருமை, தீய ஆவிகளினால் கட்டுப்பட்டோர் விடுதலையடையவும், ஆவிக்குரிய விதத்தில் மறுபடியும் பிறக்கச்செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு தமது அப்போஸ்தலர்களை பிரசங்கிக்கும்படி அனுப்புவதற்கு முன்பு கொடுத்த கட்டளைகள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 03:37 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)