Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 021 (Calling of the Twelve Apostles)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

2. பன்னிரெண்டு அப்போஸ்தலர்களை அழைத்தல் (மாற்கு 3:13-19)


மாற்கு 3:13-19
13 பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். 14 அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், 15 வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். 16 அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். 17 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், 18 அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், 19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

ஒவ்வொருவரும் மனந்திரும்பும்படி இயேசு அழைத்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனிடம் செல்லும் வழியை அவர் திறந்தார். சிலுவையில் அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தார்.

எவ்வளவு பெரிய ஆச்சரியம், ஒரு சிலர் அவருடைய வார்த்தையைக் கேட்டார்கள். அவர்களுக்கான இறைவனின் திட்டத்தைப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி இரட்சகரிடம் வந்தார்கள். அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள். அவர்கள் “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். மறுபடியும் பிறந்தவர்கள் தாழ்மையுடனும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள்.

இயேசு இருதயங்களை அறிகிறவர். ஒவ்வொரு தனிநபரின் எதிர்காலத்தை அறிகிறவர். அவர் பெருந்திரளாய் பின்பற்றியவர்களிடம் இருந்து தனிப்பட்ட நபர்களை தெரிந்துகொள்கிறார். தன்னிடம் வரும்படி அழைக்கிறார். அவர்களை பயிற்றுவிக்கிறார். உலகிற்கு நற்செய்தியைக் கொண்டு செல்லும்படி அனுப்புகிறார். இரட்சிப்பின் நற்செய்தியை பிரசங்கிப்பதும், பரப்புவதும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கிடைத்துள்ள பாக்கியம் ஆகும். பிரியமான வாசகரே, இறைவனுக்கு சேவை செய்வதை ஒரு வேலையாகக் கருத வேண்டாம். உங்கள் ஆண்டவரின் அழைப்பிற்காக காத்திருங்கள். உங்கள் சொந்த பலத்தினால் சாத்தானின் தந்திரங்களை மேற்கொள்ள முடியாது. ஆண்டவரால் பெலப்படுத்தப்படும் மக்கள் தங்கள் வாழ்வை தியாகம் செய்கிறார்கள். அவருடைய நாமத்திற்காகப் பாடுபடுகிறார்கள். அவருடைய நித்திய திட்டத்தின் படி, அவருடைய ராஜ்யத்தில் பணிபுரிய அழைக்கப்படுகிறார்கள்.

எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பின் நற்செய்தியை வழங்குகின்ற செய்தியாளர்களைப் போல அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவைக் குறித்த தத்துவங்களைக் கொடுக்கவில்லை. தங்கள் விசுவாசத்தைக் குறித்து தர்க்கம் பண்ணவில்லை. கிறிஸ்துவில் உள்ள இறைவனின் இலவச இரட்சிப்பை அனைவருக்கும் கொண்டு சென்றார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன். ஏற்றுக்கொள்பவன் ஏற்றுக்கொள்ளக்கடவன். தனது இருதயத்தை இறைவனுடைய குமாரனுக்கு எதிராக கடினப்படுத்துகிறவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.

தனது வார்த்தைகளைக் கொண்டு செல்வதற்காக மட்டும் இயேசு தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட சீஷர்களை நியமிக்கவில்லை. மாறாக அவர்கள் வெறுமையான நியாயப்பிரமாணங்களை மேற்கொள்ளும் வல்லமையையும், செத்த தத்துவங்களை அகற்றவும், அசுத்த ஆவிகளைத் துரத்தவும், இறைஅரசு இப்போது வெளியரங்கமாக வந்துள்ளது என்பதைக் காண்பிக்கவும் வல்லமையைத் தந்தார். இந்த உலகத்தின் அதிபதி விஞ்ஞானம், பணம் அல்லது அறிவுத்திறனால் அகற்றப்படவில்லை. நற்செய்தியை எளிமையாகப் பிரசங்கிப்பதின் மூலம் அவன் அகற்றப்படுகிறான். சிலுவையில் அறையப்பட்ட உயிருள்ள ஆண்டவர் இறைவனின் இரட்சிக்கும் வல்லமையை அவரை விசுவாசிப்பவர்களுக்குத் தருகிறார்.

தன்னுடன் இருக்கும்படி இயேசு பன்னிரெண்டு அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொண்டார். தன்னுடைய மக்களாகிய பன்னிரெண்டு கோத்திரத்தாரை வழிநடத்துவதற்கான அடையாளமாக இது காணப்பட்டது. எண் 12 என்பதை 3 x 4 என்று குறிப்பிடலாம். 3 என்பது பரிசுத்த திரியேகத்தைக் குறிக்கிறது. நான்கு என்பது நான்கு திசைகளைக் குறிப்பிடுகிறது. ஆகவே 12 என்பது இறைவனும், மனிதர்களும் இணைவதை வெளிப்படுத்துகிறது.

பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் பெயர்களைப் படிப்பவர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். அவர்களில் 4 அல்லது 6 பேர் மீனவர்கள். கடினமான வேலை செய்பவர்கள். திபெரியாக் கடலின் கரைப்பகுதியில் உள்ள யோர்தானின் முகப்பில் அமைந்துள்ள பெத்சாயிதாவில் இருந்து 3 பேர் இருந்தார்கள். முதல் ஆறு சீஷர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தார்கள். மனந்திரும்பியிருந்தார்கள். முதலாவது யோவான்ஸ்நானகனின் சீஷர்களாக இருந்தார்கள். ஆண்டவர் தனது அப்போஸ்தலர்களை எல்லாக் கோத்திரங்கள் மற்றும் பக்தி வாழ்வு மையங்களில் இருந்து அழைக்கவில்லை. முதல் பாதி பேரை மீனவர்கள் நிறைந்த சிறிய கிராமங்களில் இருந்து அழைத்தார்.

முதல் மூன்று பேர் உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் இயேசுவுடன் இணைந்திருந்தார்கள். பேதுருவை “பாறை” என்று இயேசு அழைத்தவர். ஒருவேளை அவன் பெரியவராக இருந்திருப்பார். அவன் அவசரப்பட்டு பேசுவான். மற்ற அனைவரையும் விட அவன் தைரியமிக்கவன். அவன் எல்லா நேரங்களிலும் ஞானமாக, புத்தியுடன் செயல்படமாட்டான். ஆனால் மிகவும் உணர்ச்சிவசப்படுவான். மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்திற்காக செயல்படுவான். இறை வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்தான். அவன் கிறிஸ்துவின் சாட்சிக்கு அடையாளமாக இருந்தான். சபைக்கு அஸ்திபாரமாக இருந்தான். இயேசு பரமேறிச் சென்றபோது அப்போஸ்தலர்களில் அவன் தான் முதன்மையானவனாக இருந்தான்.

இயேசுவைப் பின்பற்றியவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பவர்களாக, பெருமைமிக்கவர்களாக யாக்கோபும், யோவானும் இருந்தார்கள். இயேசு அவர்களை “இடி முழக்கத்தின் மக்கள்” என்று அழைத்தார். ஒரு சமயத்தில் சமாரியக் கிராமத்தார் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, இந்த இரண்டு பேரும் வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணுவோம் என்று பழிவாங்கும் உணர்வோடு பேசினார்கள்.

ஆனாலும் இளம் யோவானில் இருந்து இயேசு, இறைவனுடைய அன்பின் மனிதனை உருவாக்கினார். அவன் மிக ஆழமாக இயேசுவை அறிந்திருந்தான். மற்ற நற்செய்தியாளர்கள் இயேசுவின் அற்புதங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை எழுதினார்கள். யோவான் இயேசுவை தன்னில் உணர்ந்தவனாக அவருடைய மகிமையை விவரித்தான்.

இறைவனின் குமாரன் பரமேறிச் சென்ற பின்பு, எருசலேமில் மூன்று தலைவர்களில் யோவானும் ஒருவனாக இருந்தான். பேதுருவும், பவுலும் இறந்த பிறகு, எருசலேமின் அழிவிற்குப் பின்பு, அவன் எபேசுவுக்குச் சென்றான். அங்குள்ள சபையில் அவன் ஊழியம் செய்தான். ஆண்டவர் அவனுக்கு உலகத்தின் முடிவு மற்றும் அவருடைய வருகை குறித்த வெளிப்பாட்டைத் தந்தார்.

செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபைக் குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை. ஆண்டவருடைய மறுரூப மலையிலும் கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் பாடுபட்ட போதும், யவீருவின் மகளை உயிருடன் எழுப்பிய போதும் அவன் இயேசுவுடன் இருந்தான். பன்னிரெண்டு பேரில் அவன் முதலாவது இரத்த சாட்சியாக மரித்தான். ஏரோது அகிரிப்பா ராஜா யூதர்களைப் பிரியப்படுத்துவதற்காக அவனைக் கொன்றான்.

பேதுரு, யாக்கோபு, யோவான் முதன்மையான சீஷர்களாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த இரண்டாவது வட்டத்தில் அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல் இருந்தார்கள்.

அந்திரேயா பேதுருவின் சகோதரன். அவன் பேதுருவை இயேசுவிடம் வழிநடத்தினான். இயேசுவை கிறிஸ்து என்று முதலில் அறிக்கையிட்டான் (யோவான் 1:14).

பிலிப்பு பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். பேதுருவும், அந்திரேயாவும் இதே பட்டணத்தைச் சேர்ந்தவர்கள். அவன் நல்ல மனிதன், பிரசங்கி, திட்டமிடுபவன், நோக்கத்தில் நேர்மையானவன் (யோவான் 1:43, 45; 6:5; 12:21; 14:8, அப்போஸ்தலர் 1:13).

நாத்தான்வேல் சத்தியத்தை பகுத்துப்பார்ப்பவன். அவன் பற்தெலோமேயு என்றும் அழைக்கப்பட்டான். அவன் அத்திமரத்தின் கீழ் தியானித்து, விண்ணப்பம் ஏறெடுத்தபோது இயேசு அவனைக் கண்டார். அவன் உத்தம இஸ்ரவேலன் என்று சாட்சியிட்டார். நாத்தான்வேல் முதலாவது இயேசுவை “இறைவனின் குமாரன்” என்றும் “இஸ்ரவேலின் ராஜா” என்றும் அழைத்தான் (யோவான் 1:46-49; 21:2).

இந்த ஆறு சீஷர்களைச் சுற்றிலும் வெளிவட்டத்தில் மூன்று சீஷர்கள் இருந்தார்கள். மத்தேயு, தோமா, மற்றொரு யாக்கோபு, ததேயு, மற்றொரு சீமோன், யூதாஸ்காரியோத்து.

நற்செய்தியாளர் மத்தேயுவைக் குறித்து அநேக தகவல்கள் இல்லை. அவன் வரிவசூலிப்பவன், சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவன். இயேசு அவனை அழைத்தார். அப்போஸ்தலர்கள் பட்டியலில் அவன் பெயர் ஏழாம் இடத்தில் வருகிறது. யோவானைப் போல அவன் சுபாவம் உடையவன். தனித்துவம் வாய்ந்தவன். அவன் பவுல், யோவான், லூக்கா போன்ற சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளர்களுடன் இணைத்துப் பேசப்படுகிறான். தனது நற்செய்தியில் இயேசுவைக் குறித்த தேவையான புரிந்துகொள்ளக்கூடிய, முதன்மையான தகவல்களைத் தருகிறான். அவனுடைய நற்செய்தி நூலில் அவனைக் குறித்து எழுதாதது அவனுடைய சிறந்த, முக்கியமான குணாதிசயத்தை நமக்கு காண்பிக்கிறது (மத்தேயு 9:9-11; மாற்கு 2:14; லூக்கா 5:27,28) .

சந்தேகப்படுகின்ற தோமா இன்றைய வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை விசுவாசிக்கும் அவன் கையில் உள்ள அடையாளத்தைப் பார்க்காமல் விசுவாசிக்க மாட்டேன் என்றான். அநேக ஐரோப்பிய மேதைகள் மற்றும் சத்தியத்தை நாடுகின்ற இறைமக்களுக்கு தோமா ஒரு உதாரணமாக மாறினான் (யோவான் 11:16; 14:5; 20:24-29).

மத்தேயு, தோமா பெயர்களுக்குப்பின்பு மூன்று அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருகிறது. நம்மில் அநேகருக்கு அவர்களைப் பற்றி தெரியாது. கானானியனாகிய சீமோன் கிறிஸ்துவின் சீஷனாக மாறும் முன்பு “செலோத்தே” குழுவைச் சேர்ந்தவனாக இருந்தான். அவர்கள் வன்முறையின் மூலம் இறையரசை உடனடியாக கட்டியெழுப்ப முயன்ற மத வைராக்கியமிக்கவர்கள். இயேசு அவனை அழைத்தார், அவனுக்குக் கற்றுக்கொடுத்தார். அவனை மாற்றினார். அவன் எளிமையின் வழியில் இயேசுவை தாழ்மையுடன் பின்பற்றினான்.

இயேசு யூதாஸ்காரியோத்தை அழைத்தார். பன்னிரெண்டு சீடர்களில் அவன் மட்டும் தான் யூதனாக இருந்தான். மற்ற அனைவரும் கலிலேயாப் பகுதியைச் சேர்ந்தவர்கள். யூதாஸ் திருடன், பணஆசை பிடித்தவன், அதிகாரத்தை விரும்பி அதற்காக எதையும் செய்யத் துணிந்தவன். கிறிஸ்துவை நோக்கி அவனது இருதயம் தொடர்ந்து கடினப்பட்டது. பிசாசு அவனுக்குள் புகுந்தான். அவன் பரிசுத்தவானைப் போல காணப்பட்டான். அவனது இருதயம் பண ஆசையினால் நிறைந்திருந்தது. அவன் இறைவனை மறுதலித்தான். அவன் மட்டுமல்ல, அநேக சீஷர்கள் கூட அரசியல் கிறிஸ்து இயேசுவை எதிர்பார்த்தார்கள். ஆனாலும் தங்கள் எண்ணங்களை மாற்றி, இயேசுவை இருக்கிற வண்ணமாக ஏற்றுக்கொண்டார்கள். யூதாஸ் கீழ்ப்படியாதவனாக இருந்தான். யூதாஸ் பழிஉணர்வோடும், பகையோடும் அவரை காட்டிக்கொடுத்தான். எவ்வளவு கொடுமையான காரியம்? இயேசுவின் முடிவைக் குறித்து அவன் கவனித்துப் பார்த்தபோது, இயேசு குற்றமற்றவர் என்று சாட்சியிட்டான். இறுதியில் தூக்குப்போட்டுக் கொண்டு செத்தான். இயேசு அவனை இறுதி போஜனத்தின் போது மென்மையுடனும், கண்டிப்புடனும் நடத்தினார். அவன் முத்தமிட்டபோது, அவனை சபிக்கவில்லை. “சிநேகிதன்” என்று அவனை அழைத்தார்.

பன்னிரெண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களைப் படிப்பவர்கள், இயேசு வித்தியாசமான மக்களை அழைத்ததை உணரமுடியும். அவர்களுடைய ஐக்கியத்தில் பெருமை, அகங்காரம் போன்ற பிரச்சினைகள் கண்டிப்பாக இருந்தது. ஆனாலும் இயேசுவின் ஆவியானவர் அவர்களின் மனங்களை மாற்றினார். பரிசுத்த ஆவியின் அன்பினால் அவர்களை ஆட்டுக்குட்டிகளாக மாற்றினார். அவர்கள் இறுதிவரை இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் வழியை பின்பற்றினார்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்கள் ராஜா. நீர் உமது அப்போஸ்தலர்களை அழைத்தீர். உமது நாமத்தினால் உமது அன்பின் ராஜ்யத்தை அவர்கள் மூலம் பரவச் செய்தீர். எங்கள் பாவங்கள் பெருமையை மன்னியும். நாங்கள் உமது அழைப்பை அசட்டை செய்யாதபடி காத்துக்கொள்ளும். கனம், அதிகாரம், புகழ், பண ஆசையை நாங்கள் நாடாதபடி உதவும். நாங்கள் உம்மை காட்டிக் கொடுக்காதபடி, உம்மை நேசிக்க உதவும். நீர் ஏற்றுக்கொள்கிற உயிருள்ள பலியாக எங்கள் வாழ்வை உமக்குத் தருகிறோம். ஆமென்.

கேள்வி:

  1. பன்னிரெண்டு சீஷர்கள் யார்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன?

கேள்விகள் - 1

பிரியமான வாசகரே,
நற்செய்தியாளர் மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்த முதல் புத்தகத்தை நீங்கள் கவனமாகப்படித்தால், நிச்சயம் நிலைத்திருக்கும் பொக்கிஷங்களை பெறுவீர்கள். அதே சமயத்தில் பின்வரும் கேள்விகளுக்கும் உங்களால் எளிதில் பதிலளிக்க முடியும்.

  1. மாற்கு யார். அவருடைய உடன்-வேலையாட்கள் யார்?
  2. மாற்கு நற்செய்தியின் முக்கிய ஆதாரம் என்ன?
  3. மாற்கு தனது நற்செய்தியை யாருக்கு, எப்போது எழுதினார்?
  4. “நற்செய்தி” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?
  5. “இயேசு” என்ற பெயரின் முக்கியத்துவம் என்ன?
  6. “கிறிஸ்து” என்ற பட்டப்பெயரின் முக்கியத்துவம் என்ன?
  7. “இறைவனின் குமாரன்” என்ற பதத்தில் உள்ள முக்கியமான குறிப்புகள் என்ன?
  8. ஏன் மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தியை இந்த வார்த்தைகளினால் ஆரம்பிக்கிறார்?
  9. யோவான் ஸ்நானகனின் செய்தியின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் என்ன?
  10. எவ்விதம் பரிசுத்த திரியேகம் வெளிப்படுகிறது?
  11. ஏன் பரிசுத்த ஆவியானவர் முதலாவது இயேசுவை சாத்தானால் வனாந்தரத்தில் சோதிக்கப்படும்படி வழிநடத்தினார்?
  12. “இறைவனுடைய ராஜ்யத்தின்” சிறப்புத் தன்மைகள் என்ன?
  13. இயேசுவின் அழைப்பின் பொருள் என்ன?” என்னைப் பின்பற்றி வாருங்கள். நான் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்”?
  14. பிசாசுபிடித்திருந்தவனை இயேசு எப்படி விடுதலையாக்கினார்? இன்று அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டவர்களை அவர் எவ்விதம் விடுதலை செய்கிறார்?
  15. நற்செய்தியாளர் மாற்கு எவ்விதம் தனது நற்செய்தியில் கிறிஸ்துவைக் காண்பிக்கிறார்?
  16. புரிந்துணரக்கூடிய இறைவனுடைய சித்தம் என்ன?
  17. இயேசு எவ்விதம் பாவங்களை மன்னிக்கும் தனது அதிகாரத்தைக் காண்பித்தார்?
  18. இயேசு ஆயக்காரர்கள் மற்றும் பாவிகளுடன் பந்தியிருந்ததன் முக்கியத்துவம் என்ன?
  19. ஏன் இயேசுவின் சீஷர்கள் உபவாசம் இருக்கவில்லை?
  20. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது குறித்து இயேசுவிற்கும், யூதர்களுக்கும் ஏன் முரண்பாடு ஏற்பட்டது?
  21. ஏன் இயேசு நியாயப்பிரமாண வேதபாரகர்கள் மீது கோபப்பட்டார்?
  22. எந்தப் பகுதிகளில் இருந்து இயேசுவிடம் பெருந்திரள் மக்கள் வந்தார்கள்?
  23. பன்னிரெண்டு சீஷர்கள் யார்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன?

75% கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளித்தால், நாங்கள் இதன் தொடர்ச்சியான அடுத்த புத்தகத்தை உங்களுக்கு அனுப்புவோம். தயவுசெய்து உங்கள் முழுப்பெயர், முகவரியை தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் பதில்களை பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள்:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 10:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)