Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 017 (Conversation About Fasting)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - இயேசுவிற்கும், யூதத் தலைவர்களுக்கும் இடையே போராட்டம் (மாற்கு 2:1 - 3:6)

3. உபவாசத்தைக் குறித்த உரையாடல் (மாற்கு 2:18-22)


மாற்கு 2:18-22
18 யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். 19 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. 20 மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். 21 ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். 22 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.

இறைவனின் கண்களில் தயவைக் காண்பதற்கு தனது செயலாகிய உபவாசம் உதவும் என்று ஒரு மதவாதி நினைக்கிறான். ஒருவேளை பரிசுத்தமானவர் அவனுக்கு பதிலளிக்க கூடும். உண்மையில் ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருப்பது எளிதான காரியம் அல்ல. பசியினால் வயிறு ஒட்டிப் போய்விடும். பசியினால் உதடுகள் காய்ந்து போகும்.

சடங்கு ரீதியாக உபவாசம் இருக்கும்படி கிறிஸ்து தமது சீஷர்களுக்குப் போதிக்கவில்லை. அவருடன் என்றென்றும் இருக்கும்படி போதித்தார். அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ச்சி உண்டு. தங்கள் பாவங்களை மேற்கொள்ள உபவாசம் மற்றும் மனந்திரும்புதலை மேற்கொள்ளும்படி யோவான்ஸ்நானகன் போதித்திருந்ததைக் கேட்டவர்களும் அவரைப் பின்பற்றியவர்கள் ஆவார்கள். அநேக முறை அவர்கள் தோற்றுப் போயிருந்தார்கள். இயேசு தொய்ந்துபோன அவர்கள் ஆத்துமாக்களை தமது அளவற்ற அன்பினால் பெலப்படுத்தினார்.

பரிசேயர்கள் கண்டிப்பு மிக்க மதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆவியின்றி நியாயப்பிரமானத்தை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்களுடைய சுயநீதியை நிலைநாட்ட முயற்சித்தார்கள். உபவாசம் இருக்கிறவன் துன்மார்க்கனாய் இருப்பதை அவர்கள் உணரவில்லை. உபவாசம் ஒரு மனிதனின் சுபாவத்தை மாற்றி அமைப்பதில்லை.

இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு புதிய சுபாவம் கொடுக்கப்படுகிறது. தனது இரத்தத்தினால் அவர்களை பரிசுத்தமாக்குகிறார். தனது ஆவியின் வல்லமையினால் அவர்களுக்கு வாழ்வு தருகிறார். அவர் பாரம்பரியங்களையும், சடங்காச்சாரங்களையும் மீறினார். அவருடைய ஆவியின் வல்லமையினால் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை தருகிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் உபவாசம் மற்றும் மன்றாட்டு மூலம் இறைவனின் கவனத்தை ஈர்க்க வேண்டிய தேவை இல்லை. பரிசுத்தமான இறைவன் தமது குமாரன் மூலம் மனிதர்களிடம் வந்துள்ளார். தன்னை சந்திக்க ஆயத்தமாய் உள்ள மணவாட்டியைச் சேர்த்துக்கொள்ள வரும் மணவாளனைப் போல அவர் இருக்கிறார். கிறிஸ்து இந்த உலகில் வரும்போது, நாம் திருமண மகிழ்ச்சியைப் பெற்றவர்கள் போல அவருடன் வாழுவோம். இறைவன் விசுவாசிகளுடன் தமது ஆவியினால் இணைந்திருக்கிறார். கிறிஸ்துவின் மீதான விசுவாசம் புதிய உடன்படிக்கையை குறிக்கின்றது.

உபவாசம் இருப்பது அல்லது அழுவது அல்ல, மகிழந்திருப்பது தான் திருச்சபையின் அடையாளம் ஆகும். கிறிஸ்துவை பின்பற்றுபவன் நீதிமானாக்கப்படுகிறான். நம்முடைய செயல்களினால் அல்ல, கிறிஸ்து நமக்காகப் பரிந்துபேசுவதால் இறைவன் நமக்கு பதிலளிக்கிறார். தானதருமங்கள் மற்றும் உபவாசத்தின் மூலம் பரதீசை அடைய முயற்சி செய்பவன் தோற்றுப்போவான். அவன் தனது சொந்த பெலத்தினால் வாழ முற்படுகிறான். நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்து இறைவனை பிரியப்படுத்த நினைப்பது வீணான காரியம் ஆகும்.

நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்தில் இருந்து கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினார். கிருபையினால் தமது ஆவியின் மூலமாக இறைவன் நம்மில் வாழ்கிறார். இயேசு நம்மை மணவாளனின் தோழர்கள் என்று அழைக்கிறார்.

இயேசு தமது சபையின் எதிர்காலத்தை அறிந்திருந்தார். தன்னைப் பின்பற்றுபவர்கள் நியாயப்பிரமாணத்தை ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவருடைய நற்செய்தி புதிய ரசத்தைப் போன்றதாகும். அவருடைய வல்லமையினால் நிறைந்ததாகும். நியாயப்பிரமாணத்தின் பழைய மாதிரிகள், ஆராதனை முறைமைகள் விடுதலையின் மகிழ்ச்சியுடன் இசைந்து போவதில்லை. எனவே புதிய வல்லமை தேவை. புதிய வழிகள் ஆராதனை தேவை. துதியின் பாடல்கள், துயரத்தில் ஆறுதல், வீடுகளில் மன்றாட்டுகள், எல்லா நேரங்களிலும் பகைவர்கள் மீதான அன்பு தேவை. கிறிஸ்துவின் ஆவியும், ஆண்டவரின் மகிழ்ச்சியும் புதிய ஆவியின் புதிய முறைகளை தோற்றுவிக்கின்றன.

விண்ணப்பம்: கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருமணத்தில் நீர் எங்களை உம்முடன் இணைத்துகொள்கிறீர். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் எங்களை பரிசுத்தப்படுத்துகிறீர். உமது வல்லமையுள்ள ஆவியினால் எங்களை தூய்மைப்படுத்துகிறீர். உமது மகிழ்ச்சிக்கும், உமது பணிக்கும் எங்களை அர்ப்பணிக்க உதவும். நாங்கள் விசுவாசத்துடன் நடக்க கற்றுத் தாரும். எல்லா நேரங்களிலும் நீர் எங்களுடன் இரும். ஆமென்.

கேள்வி:

  1. ஏன் இயேசுவின் சீஷர்கள் உபவாசம் இருக்கவில்லை?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 10:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)