Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- English -- Mark - 004 (Christ's Official Title)
This page in: -- Arabic -- ENGLISH -- Indonesian -- Tamil -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1-13)
1. மாற்கு நற்செய்தியின் தலைப்பு மற்றும் சின்னம் (மாற்கு 1:1)

இ) கிறிஸ்துவின் பணியைக் குறித்த பெயரின் முக்கியத்துவம்


எபிரெய “மேசியா” என்பதற்கு இணையான கிரேக்க வார்த்தை “கிறிஸ்து” என்பதாகும். இதன் அர்த்தம் “அபிஷேகம்” என்பதாகும். பழைய ஏற்பாட்டு ராஜாக்களைக் குறிப்பிட இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. பெர்சியா ராஜா கோரேஸ் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். (ஏசாயா 45:1) ராஜாக்கள் மட்டுமல்ல ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் பரிசுத்த எண்ணையினால் அபிஷேகிக்கப்பட்ட கிறிஸ்துக்களாக இருக்கிறார்கள். இறைவனால் நியமிக்கப்பட்ட ஆவிக்குரிய தகுதிக்கு அடையாளமாக இந்த அபிஷேகம் இருக்கிறது. இந்த வார்த்தையின் உருவகப் பயன்பாடு அபிஷேகம் பண்ணப்பட்டவர் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கியதற்கான அடையாளமாக வருகின்றது. குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான உரிமை, ஞானம், வல்லமை, இரக்கம் மற்றும் அனைத்து தகுதிகளையும் அபிஷேகம் பண்ணப்பட்டவர் பெறுகிறார். இறைவனுடைய சித்தத்தின்படி செயல்படுவதற்கு அவனைப் பெலப்படுத்துகிறது.

ஒப்பற்ற கிறிஸ்து வருவார். அவரில் இறைவனுடைய ஈவுகள் பரிபூரணமாக நிறைந்திருக்கும் என்று பழைய ஏற்பாட்டில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் படிப்படியாக வெளிப்படுத்தினார். கி.மு 700-ல் ஏசாயா தீர்க்கதரிசி கூறினான்: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும் (ஏசாயா9:6-7).

இயேசு நாசரேத்தூர் ஜெபஆலயத்தில் அமர்ந்திருந்த போது ஏசாயாவின் இன்னொரு தீர்க்கதரிசனத்தை அவரே உறுதிப்படுத்தினார். அவரைக் குறித்து கூறப்பட்ட தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி வாசித்தார் : “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார் (லூக்கா4:18-19).

யூதேயாவின் ரோம ஆளுநர் பிலாத்துவிற்கு முன்பு அவர் தமது இறை அரசை வெளியரங்கமாக அறிவித்துக் கூறினார் : “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்" (யோவான்18:36-37).

இந்த ஆதாரத்தில் இருந்து நசரேயனாகிய இயேசு சிறப்புமிக்க அபிஷேகம்பண்ணப்பட்டவர், கிறிஸ்து இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒப்பற்றவர், ராஜாக்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் ஆசாரியர்களின் குணாதிசயங்களை உடையவர் என்று அறிந்துகொள்கிறோம். அவர் தாழ்மையுள்ள ராஜா. வானத்திலும், பூமியலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தீர்க்கதரிசிகள் எல்லாரிலும் பெரியவர். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவார்த்தை. அவரே இறைவனை வெளிப்படுத்துபவர். அவர் மெய்யான பிரதான ஆசாரியன். அவர் தன்னையே பலியாகக் கொடுத்ததினால் எல்லா மனிதர்களையும் இறைவனுடன் ஒப்புரவாக்குகிறார். அவர் ஒருவரே மத்தியஸ்தராக இருக்கிறார்.

தமது ராஜ்யத்திற்கான மக்களை தமது சொந்த ரத்தத்தினால் சம்பாதித்த ஆசாரிய ராஜாவாக இயேசு இருக்கிறார். தமது ஐக்கியத்திற்குள் அவர்களை அழைக்கிறார். நீதிமானாக்குகிறார், பரிசுத்தமாக்குகிறார், அவர்களை புதிய படைப்பாக மாற்றுகிறார். அவர்கள் இழந்துபோன உலகத்து மக்களுக்காக பரிந்துபேசுகிற இராஜாரீக ஆசாரியக் கூட்டமாக இருக்கிறார்கள்.

நியாயத்தீர்ப்பு நாளில் கிறிஸ்து தனது தெய்வீகத்துடன் நியாயாதிபதியாக இருப்பார். அவர் மனிதன். அவர் மனிதனில் இருப்பதை அறிந்திருக்கிறார். அவர் மரித்தோரை எழுப்பியதினால் நிரூபிக்கப்பட்ட சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

எல்லா மனித புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டதாக இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தன்மை இருக்கிறது. அவர் வார்த்தையாய் இருக்கிறார். இறைவன் அனைத்தையும் அவர் மூலமாக உண்டாக்கினார். அவர் உலகங்களின் ஆண்டவராக இருக்கிறார். அவருக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்பதை அவர் எதிர்பார்க்கிறார். நமது ஆராதனையை ஏற்றுக்கொள்ள அவர் பாத்திரராக இருக்கிறார். கலிலேயாவில் அவர் மூலமாய் சுகம் பெற்றவர்கள் ஏறெடுத்த ஆராதனையை அவர் ஏற்றுக்கொண்டார். “கிறிஸ்து” என்கிற பெயரில் நாம் இறைவனுடைய வல்லமை மற்றும் அவருடைய மீட்புத்திட்டத்தை ஏறெடுத்துச் செல்லும் திறன் ஆகியவைகளின் தொகுப்பைக் காண்கிறோம்.

இயேசுவின் காலத்தில், யூதர்கள் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்களை அறிந்திருந்தார்கள். நம்பிக்கையுடன் ஆவலாய் அவர் வருகைக்காக காத்திருந்தார்கள். ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்து அவர்களை விடுவிப்பார் என்று நினைத்தார்கள். இறைவனின் நோக்கங்களை அவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள், அரசியல் விடுதலையாளரை எதிர்பார்த்தார்கள். அவர்களை ஒருங்கிணைந்து, ஆயத்தப்படுத்தி, தாழ்மையுள்ள இரக்கம் மிகுந்த இரட்சகரை அல்ல, அவர்களுடைய எதிரிகளை அழிக்கும் கதாநாயகரை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆயுதங்கள், படைபலம் உலக வல்லமை இன்றி தாழ்மையுடன் இயேசு வந்து, கிராமங்களில், பட்டணங்களில் சுற்றித்திரிந்து, நற்செய்தியை பிரசங்கித்த போது யூதர்கள் சினம்கொண்டார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவரை புறக்கணித்தார்கள். ரோம ஆளுநரிடம் அரசியல் போராளியாக அவரை மரணத்தீர்ப்புக்கு நேராக ஒப்புக்கொடுத்தார்கள். இப்போதும் யூதர்கள் கிறிஸ்துவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தம் செய்து உலகின் மையமாக எருசலேமை மாற்றுவார் என்று கருதுகிறார்கள். மரித்தோரை எழுப்புகின்ற, கிறிஸ்துவையும், மோசேயின் கோலினால் பெருந்திரள் மக்களை ஆளுகின்ற கிறிஸ்துவையும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் அநேகர் தவறாக வழிநடத்தப்பட்டு, அந்திக்கிறிஸ்துவின் தந்திரங்கள், கவர்ச்சியான நபர்கள், சாவுக்கேதுவான வல்லமை இவைகளினால் ஈர்க்கப்பட்டு தேசங்களை குழப்பத்திற்குள்ளும், ஏமாற்றத்திற்குள்ளும் கொண்டு செல்வார்கள்.

உண்மையான கிறிஸ்து சோதனைகளுக்கு நேராக நடத்தும் சரீரப்பிரகாரமான பாவங்களை மேற்கொள்ளச் செய்வார். அவர் சுயநலத்தை வெறுத்தார். அவருடைய தியாக பலியினால் நம்முடைய பாவங்களுக்கான மீட்பு உண்டானது. அவர் மரண அதிகாரியை தமது மரணத்தினால் வென்று பரலோகிற்கு ஏறிச்சென்றார். அவர் இறைவனுடன் இணைந்தவராக அவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவரில் விசுவாசம் வைப்போருக்காக அவர் மத்தியஸ்தராக இருந்து பரிந்து பேசுகிறார். அவர் மூலமாக நம்மை தூய்மையாக்கி அவருடைய ஆவியின் வல்லமையை ஈவாகவும் கிருபையாகவும் தருகிறார். அவர் தமது அன்பின் ராஜ்யத்தை பகை நிறைந்த மனிதர்கள் மத்தியில் ஸ்தாபிக்கிறார். கிறிஸ்து சமாதானத்தின் ராஜா. இறைவனுக்கு எதிரான அனைத்து வல்லமைகளையும் மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

எல்லா தாழ்மையுள்ள கிறிஸ்தவர்களும் தங்கள் இருதயங்களில் கிறிஸ்துவின் பெயரை பெற்றிருக்கிறார்கள். விசுவாசத்தினால் அவருக்குள் இருக்கிறார்கள். அவருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வந்து தங்கும் போது, அவர்கள் இறைவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக மாறுகிறார்கள். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு பிரசங்கித்தான் : “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.”

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்துவை எங்களுக்கு அனுப்பீனீர். அவரில் சரீரப் பிரகாரமாக இறைவனின் பரிபூரணமெல்லாம் நிறைந்திருந்தது. அவர் எல்லா ராஜாக்கள், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகளை விட மேலானவர். ஆயுதங்கள் மற்றும் யுத்தங்களினால் கிறிஸ்து இந்த உலகை மேற்கொள்ளவில்லை. தாழ்மை மற்றும் அன்பினால் மேற்கொண்டார். எனவே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொடுத்தார். நாங்கள் கிறிஸ்துவுடன் ஒருங்கிணைந்து வாழும்படி தயவாய் எங்களையும் அபிஷேகியும் ஆண்டவரே ஆமென்.

கேள்வி:

  1. “கிறிஸ்து” என்ற பட்டப்பெயரின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 07:32 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)