Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 002 (Gospel)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1-13)
1. மாற்கு நற்செய்தியின் தலைப்பு மற்றும் சின்னம் (மாற்கு 1:1)

அ) “நற்செய்தி” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?


மாற்கு 1:1
1 இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்,

அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் அனுபவித்தார்கள். தங்கள் பாவங்கள் கழுவப்பட்டு பரிசுத்தமடைந்தார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்கள் மனங்கள் ஒளிரூட்டப்பட்டு, பெலப்பட்டார்கள். அவர்கள் இறைவனுடன் புதிய உடன்படிக்கையில் வாழ்ந்தார்கள். அவர்களது மொழிகளில் புதிய அர்த்தங்களைக் கண்டார்கள். இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி, பேரார்வத்தை காண்பித்து, தங்கள் அனுபவங்களை மனிதர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

அ) “நற்செய்தி” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?
கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகள் முன்பே “நற்செய்தி” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அது நற்செய்தியையும், நல்விபரங்களையும் கூறுகின்றது.

அரசு சார்ந்த அறிவிப்புகளுக்காக ரோமப் பேரரசனின் வீட்டில் தான் இந்த வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டது. அதாவது அரசருக்கு ஒரு குழந்தை பிறந்தால், அல்லது எதிரிகள் மீது அவன் வெற்றி பெற்றால்; நற்செய்தி அரண்மனை முழுவதும் பரவும். அறிவிப்புபலகைகள் மற்றும் எக்காளசத்தம் மூலம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் அதைக் கொண்டாடுவார்கள்.

தேடுகின்ற ஒரு தத்துவத்தையோ அல்லது கடைப்பிடிக்க வேண்டிய சட்டத்தையோ நற்செய்தி என்ற வார்த்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான சம்பவத்தைக் குறித்த பொதுவான ஓர் அறிவிப்பு தான் நற்செய்தி. இதை ஒருவர் ஏற்றுக்கொள்ளவோ அல்லது புறக்கணிக்கவோ செய்யலாம்.

பேரரசனுக்கு பொருத்தமான ஒரு வார்த்தையை கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் பயன்படுத்தினார்கள். புதிய அர்த்தங்கள் மற்றும் வல்லமைகளினால் அதை நிரப்பினார்கள். இறைவன் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். மனிதர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளார். அபிஷேகம் பண்ணப்பட்டவரை உலகிற்கு அனுப்பியுள்ளார். அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார். இயேசு இறைவனின் எதிரிகள் (பாவம், மரணம், சாத்தான்) மீது யுத்தம் மேற்கொண்டு வெற்றிசிறந்தார். தனது அன்பின் ஆவிக்குரிய அரசை நிறுவியுள்ளார். அவர் இவ்விதம் கூறினார். “காலம் நிறைவேறிற்று. இறைவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது. மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள்” (மாற்கு 1:15).

பரிசுத்த வேதாகமத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு புதிய புத்தகத்தை இறைவன் வெளிப்படுத்தவில்லை. இறைவன் தனது ஒரே பேறானகுமாரன் மாம்சத்தில் வெளிப்படும்படி விரும்பினார். அப்போஸ்தலனாகிய யோவான் இவ்விதம் அறிக்கையிட்டான். “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம் …..” ஆகவே நற்செய்தி என்பது ஒரு புத்தகத்தை குறிப்பிடவில்லை. கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் அதன் விளைவுகளை உள்ளடக்கிய ஒரு உயிருள்ள நபரைப் பற்றியதாகும். நற்செய்தியில் நாம் வாசிக்கும் ஒவ்வொன்றும் இயேசுவிடம் இருந்து வருகின்றது. அந்த நாசரேத்தூரான் இறைவனுடைய வார்த்தையை மட்டும் பேசவில்லை. அவரே இறைவனுடைய வார்த்தை. கிறிஸ்துவே நமது நற்செய்தி.

கிறிஸ்துவுடனான தங்களது சந்திப்புகள் குறித்த அறிக்கையை அநேக கண் கண்ட சாட்சிகள் கூறினார்கள். இந்த அறிக்கைகள் ஒவ்வொன்றும் நற்செய்தியாக, அல்லது பரிசுத்த நற்செய்தியாக கருதப்பட்டது. நான்கு நற்செய்திகள் மட்டும் இல்லை. அநேக நற்செய்திகள் உள்ளன. கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் வார்த்தைகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு நல்ல சாட்சியும் நற்செய்தி ஆகும். இயேசுவின் வாழ்வு குறித்த கண்கண்ட சாட்சிகளின் ஆதாரத்தில் இருந்து, விசுவாச தகப்பன்மார்கள் நான்கு தனித்துவமான நற்செய்திகளை தெரிந்தெடுத்தார்கள். அவைகளை இப்படி அழைத்தார்கள். மத்தேயு நற்செய்தி, மாற்கு நற்செய்தி, லூக்கா நற்செய்தி மற்றும் யோவானின் நற்செய்தி ஆகும். மரியாளின் மகனின் பெரிய தன்மையை அனைத்து நற்செய்திகளும் ஒரே குரலில் சாட்சியிடுகின்றன.

இன்னொருபுறம், அப்போஸ்தலனாகிய பவுல் தனது நிரூபங்களில், ரோமருக்கு எழுதும் போது இவ்விதம் கூறுகிறார். “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். விசுவாசிக்கிற எவருக்கும் அது தேவ பெலனாயிருக்கிறது”. பவுலின் நிரூபங்கள் நான்கு நற்செய்தி நூல்களுக்கு முன்பாக எழுதப்பட்டவை. அவைகளை பவுல் நற்செய்தி என்று கூறுகிறார். ரோமப்பேரரசன் சீஷரின் எழுத்துகளை விட கிறிஸ்துவைக் குறித்த தனது நிரூபங்கள் முக்கியமானவை என்று பவுல் கூறுகிறார். உலகத்தின் மற்ற அதிபதிகளைப் போல கிறிஸ்து கல்லறையில் தங்கிவிடவில்லை. அவர் உயிர்த்தெழுந்தார்.

உயிருள்ள கிறிஸ்து நம்மை விட்டு தொலைவில் இல்லை. எல்லா இறைவல்லமையையும் உள்ளடக்கிய தனது நற்செய்தியின் வார்த்தைகள் மூலம் அவர் நம் மத்தியில் இருக்கிறார். நற்செய்தி என்பது ஒரு ஆவிக்குரிய வெடிப்பொருள் போன்றது. அது உலகத்தை மாற்றக்கூடிய வலிமை படைத்தது.

இறைவன் நம்முடன் பேசக்கூடிய இடம் தான் நற்செய்தி ஆகும். இரட்சிப்பிற்கான அனைத்து வல்லமைகளையும் உள்ளடக்கியவராக இயேசு, இந்தப் புத்தகத்தில் பிரசன்னமாகி இருக்கிறார். நற்செய்தியைத் தன்னுடைய மனதைத் திறந்து, உயிருள்ள கிறிஸ்துவை நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்பவன் என்றென்றும் இரட்சிப்பைப் பெறுகிறான். நற்செய்தியின் வார்த்தைகள் விசுவாசிகளை உயிருள்ள கிறிஸ்துவுடன் தனிப்பட்ட விதத்தில் இணைக்கின்றன. அவரை விசுவாசிப்பவர்களிடம் நற்செய்தியின் வல்லமை பொங்கி வழிகின்றது. இரக்கமும் தாழ்மையும் உள்ள கிறிஸ்துவின் சாயலுக்கு அவர்களை மறுரூபப்படுத்துகிறது. அவர்கள் கிறிஸ்துவின் வல்லமைக்கு உயிருள்ள சாட்சிகளாக மாறுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் புதிய நற்செய்தியை வெளிப்படுத்துகிறார்கள். நான்கு நற்செய்திகளுக்கு அப்பால், புறவினத்து அப்போஸ்தலனாகிய பவுலின் நற்செய்தியையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவன் தனது வலிமைமிக்க நிரூபங்கள் மற்றும் தாழ்மையுள்ள கிறிஸ்தவர்களின் வாழ்வு எனும் நற்செய்தியின் மூலம் இதை வெளிப்படுத்துகிறான். நீ நடமாடும் நற்செய்தியாக மாறியுள்ளாயா? உன்னிலிருந்து பேசுவது எந்த ஆவி?

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே, நாங்கள் உம்மை ஆராதிக்கின்றோம். எங்கள் உலகிற்கு நீர் கிறிஸ்துவை அனுப்பினீர். அவருடைய வாழ்க்கையின் மூலம் உம்மை அறிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகள் மூலம் உமது சித்தத்தை உணரவும் செய்தீர். நீர் அவரை மரணப்பிரமாணத்துடன் அனுப்பவில்லை. இரட்சகராகவும், வாழ்வு தருபவராகவும் அனுப்பினீர். நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் சரீரங்கள் மூலமாகவும் உம்முடைய நற்செய்தி வெளிப்படும்படி எங்கள் மனங்களைத் திறந்தருளும். எங்களில் அதிக கனிகள் காணப்படச் செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. “நற்செய்தி” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 04:57 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)