Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- The Ten Commandments -- 06 Fourth Commandment: Remember the Sabbath Day, to Keep it Holy

Previous Lesson -- Next Lesson

TOPIC 6: பத்து கட்டளைகள் - மனிதனை விழாது காக்க இறைவன் கட்டிய மதிற்சுவர்கள்

06 - நான்காவது கட்டளை: ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்கக்கடவாய்



யாத்திராகமம் 20:8-11
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; 9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; 10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
(யாத்திராகமம் 20:8-11).


06.1 - படைத்தவராகிய இறைவனைத் துதிப்பதற்காக ஓய்வு நாள்

யூதர்களைப் பொறுத்தவரை ஓய்வு நாள் என்பது இறைவன் அவர்களோடு ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளங்களில் ஒன்று. ஆராதனை செய்யும்படி ஏற்படுத்தப்பட்ட அந்த நாள் அவர்களை மற்ற இனங்களில் இருந்து வேறுபடுத்திக் காண்பித்தது. இன்றுவரை பழைய உடன்படிக்கையின் மக்கள் வாரத்தின் இறுதி நாளைப் பரிசுத்தப்படுத்தி, வாரத்தின் மற்ற நாட்களில் வேலை செய்வதைப் போல அந்த நாளில் வேலை செய்வதில்லை. அவர்கள் நெருப்பு முட்டுவதில்லை, நீண்ட பிரயாணத்தை மேற்கொள்வதில்லை. அவர்கள் விழாக்களுக்காக வைத்திருக்கும் புதிய ஆடைகளை அந்நாளில் அணிந்துகொள்கிறார்கள். ஓய்வு நாளில் மக்கள் கூடி வந்து நியாயப்பிரமாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளை வாசித்து, இறைவனுக்குத் துதிசெலுத்தி, மகிழ்ச்சியோடு இறைவனுக்கு ஆராதனை செய்தார்கள்.

கர்த்தருடைய நாளில் விசுவாசிகள் மனிதர்களோடு செலவிடும் நேரத்தைக் காட்டிலும் ஆண்டவரோடு அதிகமான நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களுடைய சிந்தைகளும் இருதயங்களும் அவரையே கருத்தில்கொள்ள வேண்டும், ஏனெனில் அவரே நம்மைப் படைத்தவர். நமது இரட்சகரும் நம்மை ஆறுதல்படுத்துகிறவரும் அவரே. வேதாகமத்தை வாசிப்பதையும், நல்ல பிரசங்கத்தைக் கேட்பதையும், வாரம் முழுவதும் நாம் மேற்கொண்ட வனாந்தரப் பிரயாணத்தில் நம்மை ஆறுதல்படுத்தி தாங்கக்கூடிய துதிப்பாடல்களில் பங்கெடுப்பதையும் நாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆயினும் மனிதனோ, அவனுக்கு வேண்டிய ஓய்வோ இந்தக் கட்டளையின் முக்கிய நோக்கம் அல்ல. ஆண்டவரே இந்தக் கட்டளையின் நோக்கமாவார். இவ்விதமாகத்தான் ஓய்வுநாள் கர்த்தருடைய நாளாக மாறியது. அவர் இந்த நாளைப் பரிசுத்தப்படுத்தி, ஆசீர்வதித்து, முக்கியப்படுத்தினார். கர்த்தருடைய நாள் என்பது படைப்பாளியாகிய இறைவன் தம்முடைய படைப்புகளுக்குக் கொடுத்திருக்கும் விலையேறப்பட்ட கொடையாகும்.

ஓய்வு நாளைப் பரிசுத்தமாக அனுசரித்தல் என்பது வானத்தையும், பூமியையும், நட்சத்திரங்களையும், நிலத்தையும், மரங்களையும் தம்முடைய வார்த்தையினால் படைத்தவரைத் துதிக்கிறோம் என்று பொருள். அவர் மீன்களையும், பறவைகளையும், அனைத்து சிறிய பறவைகளையும், அனைத்து பெரிய பறவைகளையும் படைத்தார். அவருடைய படைப்பு இறுதியில் தம்முடைய சாயலில் அவர் படைத்த மனிதர்களோடு முடிவடைந்தது. இவற்றில் ஒவ்வொரு படைப்புகளுமே ஞானமும் பெலமும் நிறைந்ததாக, தனிச்சிறப்பான முறையில் படைக்கப்பட்டிருக்கின்றன. மனித உடல், அவனது திறமைகள், அவனுடைய ஆவியின் உயர்வான தன்மை ஆகியவற்றின் இரகசியங்களில் வெகு சொற்பமானவைகளையே விஞ்ஞானிகள் தீர்த்திருக்கிறார்கள். இறைவனுடைய செயல்கள் எத்தனை அற்புதமானவைகள்! அவருடைய படைப்புகளே இவ்வளவு அழகாக இருக்குமானால், படைப்பாளியாகி அவர் எத்தனை அழகுள்ளவராக இருக்க வேண்டும்! அவருடைய மேன்மையையும், மகிமையையும், எல்லாம்வல்ல தன்மையையும் மனித மொழியினால் முழுவதும் விளக்கிவிட முடியாது. அவருடைய படைப்புகள் அனைத்தும் அவரைத் தொழுதுகொள்ளும் தகுதியுள்ளவர் அவர்.

இறைவன் படைப்பில் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றியபோது, அவர் ஓய்ந்திருந்தார். அவர் படைப்பின் வேலையைச் செய்த காரணத்தினால் களைப்படைந்து ஓய்வெடுக்கவில்லை. ஏனெனில் எல்லாம்வல்ல இறைவன் ஒருபோதும் களைப்படைவதில்லை, தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை. மாறாக, அவர் தாம் படைத்தவற்றில் திருப்தியடைந்தவராக, தம்முடைய படைப்பின் மகத்துவங்களை நினைத்து மகிழ்ச்சியடைந்து, அவை நல்லது என்று கண்டார். ஒவ்வொரு நாளும், சிறப்பாக, கர்த்தருடைய நாளில், ஆராய்ந்து முடியாத அவருடைய படைப்பின் அற்புதங்களை நினைத்து நாம் அவரைத் துதிக்க வேண்டும்.


06.2 - ஓய்வு நாளில் ஓய்வின் அவசியம்

ஓய்வு நாளில் இறைவன் நமக்காக ஆயத்தப்படுத்தி பரலோக ஓய்வில் பங்கெடுக்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆழ்ந்த அமைதியையும் தொழுகையையும் அனுபவிக்கும் வாய்ப்பை அவர் நமக்குக் கொடுக்கிறார். கர்த்தருக்கு முன்பாக நம்முடைய உள்ளான அமைதியும் வெளியான அமைதியும் நம்முடைய நல்வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. இந்தக் கட்டளையை மீறுகிற எவரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. முன்னால் சோவியத் ஓன்றியம் போன்ற நாடுகளும் மேற்குலகத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களும் ஆண்டவருடைய நாளைக் கைவிட்டுவிட வேண்டும் என்ற தங்கள் முயற்சியில் தங்கள் மன அமைதியை இழந்துவிட்டார்கள். இந்த நாளைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கார்களில் வேகமாகப் பறந்து செல்கிறவர்கள் இறைவனுடைய படைப்பில் உள்ள அவருடைய மகிமையைக் காணத் தவறுகிறார்கள். அவர்கள் தியானிக்கும் திறனை இழந்துவிடுவதால், வாரம் முழுவதும் அவர்களுடைய பணி பாதிக்கப்படுகிறது. மிருகங்கள்கூட ஓய்வெடுக்க வேண்டியவைகளாக இருக்கின்றன. ஏனெனில் இறைவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கவில்லை என்றால் அவருடைய படைப்பு தன்னுடைய பலத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாது. ஆகவே, நாம் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க வேண்டும் என்ற கட்டளையை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. இந்தக் கட்டளை 35 அல்லது 40 மணிநேரம் உழைப்பைப் பற்றி பேசாமல் ஆறுநாள் கடின உழைப்பைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் ஏழாவது நாள் முழுவதும் இறைவனுடையது. சும்மா இருக்கும் மனிதன் எல்லாவித தீமையையும் செய்யக்கூடியவனாக மாறுகிறான் என்றும் அனுதினமும் வேலை செய்வது மனிதனுக்கு நல்லது என்றும் வேதாகமம் போதிக்கிறது.

அவ்வப்போது நாம் லீலி மலர்களையும் வானத்துப் பறவைகளையும் நின்று கவனித்துப் பார்த்து, அவை எப்படி வளர்கின்றன, வாழ்கின்றன என்பதைக் காண வேண்டும் என்று இயேசு சொல்கிறார். அந்தச் செடிகள் கனிகொடுப்பதற்கும், பூப்பூப்பதற்கும், எவ்வளவு காலம் செல்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? நின்று உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். இயற்கையின் விதிகளையும் சக்திகளையும் அறிந்துகொள்ளுங்கள். அப்பொழுது அவற்றிற்குக் காரணராகிய ஞானமுள்ள படைப்பாளியையும், நல்ல பிதாவையும் அறிந்துகொள்வீர்கள். பூக்களின் மகிமையை நாம் அரசர்களுடைய மகிமையோடு ஒப்பிட்டு, அழிந்துபோகும் பூக்களைப் போல அரசர்கள்கூட தங்களை அழகாக உடுத்துவிக்க முடியாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொல்கிறார். மனிதனே இறைவனுடைய படைப்புகள் அனைத்திலும் அழகுள்ளவனாக இருக்கிறான். அவனுடைய முகம் இறைவனுடைய மகிமையின் ஒரு சிறிய அளவைப் பிரதிபலிக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொண்டு, அவசர அவசரமாக ஓடுவதை நிறுத்தி, பொறுமையாக, நின்று நிதானித்துச் சிந்தித்தால் எத்தனை நலமாக இருக்கும்! அவ்விதமாக நாம் செய்யும்போது, இறைவனுடைய படைப்பின் அழகினால் நாம் தூண்டப்பட்டு, அவருக்கு நன்றியையும் துதியையும் ஏறெடுப்போம். இறைவன் கோடை காலம், மாரி காலம், வசந்த காலம், இலையுதிர் காலம் என்று அழகிய படைப்பின் அற்புதங்களை நாம் கண்டு இரசிக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க, ஆபாசமும், தீவிரவாதமும் நிறைந்த கேவலமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் ஒலிபரப்புவது எத்தனை வேதனைக்குரியது.

ஓய்வு நாளைக் கைக்கொள்ளும்படி ஆண்டவர் கட்டளையிடும்போது, மனிதன் இறைவனுக்கு முன்பாக எவ்விதமாக வாழவேண்டும் என்பதைக் கைக்கொள்ளும்படி தனிப்பட்ட முறையில் செலவு செய்ய வேண்டும் என்று நம்மிடம் கோருகிறார். கர்த்தருடைய நாளைப் பரிசுத்தமாகப் பயன்படுத்துவது என்பது ஓய்ந்திருந்து, இறைவனுடைய வார்த்தையைக் கேட்பதும் வாசிப்பதும் மட்டுமல்ல, அவர் நம்மை மாற்றி தம்முடைய நன்மையினால் நம்மை நிரப்பும்படியாக முழு இருயத்தோடும் அவரிடத்தில் நாம் திரும்புவதையும் குறிக்கிறது. அவர் பரிசுத்தராயிருக்கிற காரணத்தினால் நாமும் பரிசுத்தராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அமைதியாக அமர்ந்திருக்காமலும் நாம் புதுப்பிக்கப்பட முடியாது என்பதால் நாம் இறைவனுடைய அன்பில் முன்னேறவும் அவருடைய மகிமையைப் பிரதிபலிக்கவும் முயற்சிப்போமாக.


06.3 - ஓய்வு நாளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்

பழைய ஏற்பாட்டு மக்கள் சீரழிந்து போகாமலும் அவர்களைச் சுற்றியிருக்கிற பலதெய்வ வழிபாட்டு மக்களைவிட்டுப் பிரிந்து வாழவும் ஓய்வு நாள் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்திருந்தது. கர்த்தருடைய நாளின் மேல் அவர்கள் இவ்விதமாகக் கவனம் செலுத்தியதன் மூலமாக வரப்போகும் உலக இரட்சகராகிய கிறிஸ்துவின் வருகைக்கும் ஆயத்தமானார்கள். ஆனால் ஓய்வு நாள் அதைக் கைக்கொள்ளும் விசுவாசிகளை மாற்றவோ, பாதுகாக்கவோ அல்லது புதுப்பிக்கவோ இயலாததாக இருந்தது. அனைத்து மனிதர்களும் இறைவனுக்கு முன்பாக, பெலவீனமுள்ளவர்களாகவும், தீயவர்களாகவும், குறைவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். எந்தச் சட்டமும் மனுக்குலத்தை மாற்ற முடியாது. ஓய்வு நாளும் மனிதனுடைய பாவத்தில் இருந்து அவனை விடுவிக்க முடியாது. ஆனால் அது அவனைப் பல தெய்வ வழிபாட்டிலிருந்து பாதுகாத்தது. புதிய உடன்படிக்கையில் இறைவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் ஆண்டவருடைய நாளைக் கொண்டாடுவதில்லை. மாறாக அவர் நம்மைப் படைத்தபடியால் அவருக்கு நன்றி செலுத்தும்படி நாம் அதைக் கொண்டாடுகிறோம். அவர் மனுவுருவாகி இவ்வுலகத்திற்கு வந்து, தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவதைக் காட்டிலும் அதிகமாக நமக்கு இரங்குகிறவராயிருக்கிறார். இறைவனுடைய சட்டத்தை கைக்கொள்வதால் நம்முடைய பாவங்களில் இருந்து நாம் விடுதலையடைய முடியாது. இறைவனுடைய கிருபையே நம்முடைய இரட்சிப்பு மற்றும் மறுபிறப்பின் இரகசியமாயிருக்கிறது. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக்கப்பட விரும்புகிறவர்கள் அதனால் நியாயம் தீர்க்கப்படுவார்கள். ஆனால் உங்களை நோக்கி நீட்டப்பட்டிருக்கும் இயேசுவின் கரத்தை நீங்கள் பற்றிக்கொள்வீர்களானால், அவர் உங்களை வழிநடத்தி, அனைத்துத் தண்டனையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவார்.

ஏழாம் நாளில் ஓய்ந்திருந்த இறைவன் தம்முடைய படைப்பைப் பார்த்து மகிழ்வடைந்தார். அவை அனைத்தும் அழகாயிருந்தது என்பதை அவர் கண்டார். ஆனால் இறைவனுடைய பரிசுத்தமான ஓய்வு மனிதன் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் பாவத்தில் வீழ்ச்சியடைந்தபோது முடிவுக்கு வந்துவிட்டது. அந்த நாளில் இருந்து இறைவன் தாம் ஓய்வெடுப்பதை நிறுத்திவிட்டு, இழந்துபோன படைப்பை மீட்கும்படி இரவு பகலாக வேலை செய்துகொண்டிருக்கிறார். “உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்” (ஏசாயா 43:24) என்று அவர் சொல்கிறார். “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார்; நானும் கிரியை செய்து வருகிறேன்” என்று இயேசு சொன்னார் (யோவான் 5:17). இறைவன் நம்மையும் நம்முடைய அசிங்கமான பாவங்களையும் குறித்து ஆழந்து கருத்துள்ளவராக இருக்கிறார். ஆனால் கிறிஸ்துவின் பரிகார பலியின் மூலமாக அனைத்துப் பாவிகளுக்கும் விடுதலை உண்டு என்பதால் நாம் அவருக்க நன்றி செலுத்துகிறோம். இறைவனுடைய ஆட்டுக்குட்டியை விசுவாசிக்கிறவர்கள் நியாயப்பிரமாணத்தின் தண்டனைக்குக் கீழாக வரமாட்டார்கள். அவர்கள் இயேசுவின் இரத்தத்தினால் முழுவதும் நீதிமான்களாக்கப்படுவார்கள். அவர் ஓய்வுநாளுக்குச் சரியாக முந்திய நாளில் மரித்து அடக்கம் செய்யப்பட்டார். இறைவனுடைய ஓய்வு நாளில் அவர் பணக்காரனுடைய கல்லறையில் ஓய்வெடுத்தார். அவர் வாரத்தின் முதலாம் நாளில் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்ததன் மூலமாக ஓய்வு நாளின் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றினார். அவருடைய உயிர்தெழுதலின் மூலமாக அவர் ஒரு புதிய நாளை உருவாக்கினார். அந்த நாள் நியாயத் தீர்ப்பைக் குறிக்காமல் இறைவனுடைய கிருபையினாலும் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் உருவாகிச் செழிக்கும் புதிய படைப்பை அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.


06.4 - சனிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக் கிழமையைக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது சரியா?

கிறிஸ்தவர்கள் சனிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாளாக அனுசரிப்பதால், அவர்கள் நான்காவது கட்டளையை மீறுகிறார்கள் என்றும் அதனால் இறைவனுடைய கோபம் அவர்கள் மீது விழப்போகிறது என்றும் யூதர்களும் ஏழாம் நாள் திருச்சபையாரும் அடிக்கடி கிறிஸ்தவர்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆயினும் கர்த்தராகிய இயேசு தானே ஓய்வு நாளுக்கு ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறார். அவர் அந்த ஓய்வு நாளை நிறைவேற்றி அதை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார். அவர் ஒரு புதிய நாளை, மாதத்தை அல்லது வருடத்தை பரிசுத்தப்படுத்தும் ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கவில்லை. அவர் தம்மைப் பின்பற்றுகிறவர்களை இரட்சித்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினார். மனிதன் ஓய்வு நாளிலும் குறிப்பிட்ட சில பண்டிகைகளில் மட்டுமல்ல, எப்போதும் இறைவனை ஆராதிக்கிறவனாக இருக்க வேண்டும். இதனால்தான் இயேசு நாட்களை அல்ல, தனிநபர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். “வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்” (கொலோசெயர் 3:17). பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினால் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனை ஆராதிக்கும் செயலே ஆகும். ஒரு நாள் இன்னொரு நாளைக் காட்டிலும் சிறப்பானதல்ல. இயேசு தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை நீதிமான்களாக்கி, பரிசுத்த ஆவியினால் நம்மைப் புதுப்பிக்கிறார். அவர் மக்களைத்தான் பரிசுத்தப்படுத்துகிறார், நாட்களை அல்ல. ஓய்வுநாள் செய்ய முடியாததைச் செய்வதற்காகத்தான் அவர் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் புதிய மக்களை உருவாக்கவும், தீய பாவிகளைப் பரிசுத்தமான சீடர்களாக மாற்றவும், சுயநலவாதிகளை வேலைக்காரர்களாக மாற்றவும் அவர் இவ்வுலகத்திற்கு வந்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றியமைத்திருக்கிறார். இதனால்தான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து உயிரோடு எழுந்த ஞாயிற்றுக் கிழமையை தெரிவுசெய்து, புதிய படைப்புடன் கூடிய புதிய உடன்படிக்கையைக் கொண்டாடுகிறார்கள். தம்முடைய சீடர்களும் ஓய்ந்திருந்து, புதிய படைப்பின் பங்கடைந்திருப்பதால் நமக்குள்ள ஆசீர்வாதத்தை தியானிக்க வேண்டும் என்று கிறிஸ்து விரும்புகிறார். ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்க வேண்டும் என்று அவர் கட்டளையிடவும் இல்லை, ஓய்வுநாளைக் கைக்கொள்வதைத் தடைசெய்யவும் இல்லை. அவர் நாட்களினாலும் பண்டிகைகளினாலும் நம்மைக் கட்டுப்படுத்தாமல், பாவிகளாகிய நம்மை இரட்சிக்கவே இவ்வுலகத்திற்க வந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, நாம் குற்றஞ்சாட்டும் சட்டத்திற்குக் கீழாக வாழாமல், ஆண்டவருடைய இரட்சிக்கும் கிருபைக்குக் கீழாக வாழ்கிறோம். இதனால் கிறிஸ்தவர்கள் எந்தச் சட்டத்திற்கும் கீழ்ப்படியாத மக்கள் என்று நாம் கருதிவிட முடியாது. கிறிஸ்தவர்களாகிய நமக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவரே அன்பின் பிரமாணமாயிருப்பதோடு நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி நம்மை பெலப்படுத்துகிறார். ஓய்வு நாள் பழைய பெலவீனமான உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமையோ புதிய உடன்படிக்கையை உருவாக்கிய கிறிஸ்துவின் வெற்றிக்கு அடையாளமாயிருக்கிறது.

இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் வாழும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையையோ அல்லது சனிக்கிழமையையோ அனுசரிக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் “எங்கே இரண்டு மூன்று பேர் என்னுடைய நாமத்தினாலே கூடியிருக்கிறீர்களோ, அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்” என்ற ஆண்டவரின் வாக்குறுதியை அறிந்தவர்களாக வெள்ளிக்கிழமைகளில் கூடிவருகிறார்கள் (மத்தேயு 18:20). இயேசு ஆராதனைக்குரிய சில நாட்களை பரிசுத்தப்படுத்துவதற்காக வராமல் எங்கும் எப்போதும் இருக்கும் விசுவாசிகளைப் பரிசுத்தப்படுத்தும்படி வந்தார்.


06.5 - ஞாயிற்றுக் கிழமையைக் கொண்டாடுதல்

கிறிஸ்தவர்கள் தங்கள் ஆண்டவருடைய நாளை எப்படி பரிசுத்தமாக அனுசரிப்பது? அன்பினால் தூண்டப்பட்டு அவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆராதனைக்காக கூடி வருகிறார்கள், வேதாகமத்தை வாசிக்கிறார்கள், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் இறைவனைத் துதிக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகளும், விருந்தாளிகளும், உடன்வேலையாட்களும், ஏன் மிருகங்களும்கூட ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் நினைவுகூரப்படும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தெய்வீக மகிழ்ச்சியிலும், அதனால் கிடைக்கும் ஓய்விலும் பங்குகொள்கிறார்கள். கிறிஸ்தவர்களுடைய மகிழ்ச்சிக்கான அடிப்படை யூதர்களுடையதைக் காட்டிலும் ஆழமானது. “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11; 17:13). பவுலும், “கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் உங்களுக்குச் சொல்கிறேன்” (பிலிப்பியர் 4:6) என்று சொல்கிறார். “ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம்…” (கலாத்தியர் 5:22). ஞாயிற்றுக் கிழமையில் நம்முடைய ஆவி எப்படியிருக்க வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்குத் தெளிவுறக் காண்பிக்கின்றன. அதேவேளையில் வாரநாட்களில் நாம் பணிசெய்யும்போதும் நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் இந்த வசனங்களே காண்பிக்கின்றன. கிறிஸ்தவ குடும்பங்களில் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதையும் இந்த வசனங்கள் நமக்குக் காண்பிக்கின்றன.

ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்தவர்கள் வேலை செய்யலாமா? மற்றவர்களைப் போல கிறிஸ்தவர்களும் சாதாரண மக்களே. அவர்களுக்கும் உடல்களிருக்கின்றன, அவர்களும் களைப்படைகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர்கள் சாதாரணப் படைப்புகளாக இருந்தாலும், ஆவியில் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள். அவர்கள் மாம்சத்தில் இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும், ஆவியில் கிறிஸ்துவோடுகூட பரலோகத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய முகத்திற்கு முன்பாக ஓய்வு நாளை மறுதலிப்பதில்லை. ஞாயிற்றுக் கிழமை என்பது படுத்துறங்குவதற்குரிய நாளல்ல, பிதாவாகிய இறைவனை மகிமைப்படுத்தி, துதிக்க வேண்டிய நாள். இந்த நாள் இறைவனுக்குரிய அந்த நாளில் நாம் தேவையற்ற வேலைகள் எதையும் செய்யக்கூடாது. ஆயினும் மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அன்பின் நிமித்தமாகவும் கடமையின் நிமித்தமாகவும் வேலை செய்ய வேண்டும் என்று வரும்போது நாம் விலகி ஓடக்கூடாது. நாம் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதால் நீதிமான்களாக்கப்படுவதில்லை, பலி என்னும் கருத்தை நம்முடைய உள்ளத்தில் இருத்தியிருக்கும் கிறிஸ்துவின் பாவப் பரிகார மரணத்தினாலேயே நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுவான ஆராதனைக்குப் போவதும் மற்ற ஆவிக்குரிய கூட்டங்களுக்குப் போவதும் கிறிஸ்தவர்களுக்கே உரிய சிலாக்கியமாக உள்ளது. ஆனால், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தங்கள் ஆவிக்குரிய உணவைப் பெற்றுக்கொண்டால் போதாது. அவர்கள் அனுதினமும் தங்கள் ஆவிக்குரிய உணவை உட்கொள்ள வேண்டும், அல்லது அவர்களுடைய விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவை தணிந்துபோகும். ஞாயிற்றுக் கிழமை என்பது நாம் ஒரு சமூகமாகக் கூடிவந்து பாடுவதற்கும், குழுவாக விண்ணப்பிப்பதற்கும், திருச்சபையின் அங்கத்தவர்களாக ஐக்கியத்தை உணரும்படி நமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் நமக்கு வாய்ப்பளிக்கிறது. விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவின் ஆவிக்குரிய உடலாயிருக்கிறார்கள். புதிய படைப்பின் நோக்கம் தனிப்பட்ட விசுவாசி அல்ல, குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கூடிவரும் பரிசுத்தவான்களின் ஐக்கியமே புதிய படைப்பின் நோக்கமாக இருக்கிறது.

ஞாயிற்றுக் கிழமைகளில் நோயாளிகளையும், முடவர்களையும், ஏழைகளையும் விசாரிப்பவர்கள் பாக்கியவான்கள். இவர்கள் தங்கள் வாகனங்களில் அடுத்த நூறு கிலோமீட்டருக்கு எரிபொருள் இருக்கிறதா என்பதைப் பற்றி கவலைப்படாமல், அடுத்த வேளை உணவுக்கு இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறவர்களாயிருக்கிறார்கள்.

ஆவியானவர் நம்மை திருச்சபைக் கட்டடத்தை விட்டு வெளியே நடத்திக்கொண்டு வந்து பாவத்தில் மரணமடைந்திருப்பவர்களைத் தேடச் செய்கிறார். அப்படிப்பட்டவர்கள் தங்கள் நம்பிக்கையின்மையிலும் இருதயக்கடினத்திலும் இருந்து எழுந்துவரும்படி, அவர்களைக் கிறிஸ்துவினிடத்தில் மனந்திரும்பும்படி வழிநடத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவைக் குறித்து அவிசுவாசிகளுக்கு சாட்சிபகராமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அதேவேளையில் நாம் தேவையுள்ள தனிநபர்களுக்கும் துயரத்திலுள்ள குழுக்குக்கும் இரக்கத்தின் செயல்களைச் செய்யும்படியாகவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஆண்டவருக்குப் போதிய அளவு நன்றி செலுத்த வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து, மற்றவர்களுடைய தேவைகளுக்காக விண்ணபஞ் செய்ய வேண்டும். ஆண்டவர் நமக்குப் பிள்ளைகளைக் கொடுத்திருந்தால், நாம் அவர்களோடு சேர்ந்து இறைவனைத் துதித்துப் பாடுவதில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமையில் கர்த்தருடைய விண்ணப்பத்தின் முதல் மூன்று விண்ணப்பங்களை எப்படி நிறைவேற்றுவது என்று இயேசுவிடம் கேட்போம்.

நாம் ஞாயிற்றுக் கிழமையை கைக்கொண்டு நடந்தால் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவோம். ஞாயிற்றுக் கிழமையில் உயிரோடெழுந்த கிறிஸ்துவின் ஆவியினால் நிரப்பப்படுவதை நாடுகிற ஒவ்வொருவருக்கும் இயேசு பல்வேறு ஆசீர்வாதங்களை ஆயத்தம் செய்திருக்கிறார்.


06.6 - ஞாயிற்றுக் கிழமையை அசுசிப்படுத்துதல்

வாரத்தின் கடைசி நாட்களில்தான் மற்ற நாட்களைக் காட்டிலும் அதிக தீமைகள் நடைபெறுகின்றன என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் கார்கள் கிராமங்களைக் கெடுக்கின்றன. தொலைக்காட்சி நிலையங்கள் இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு கொஞ்ச நேரம்தான் ஒதுக்குகின்றன. ஆனால் பயங்கரமான திரைப்படங்களையும், ஆபாசப் படங்களையும், ஆவியுலகத்தோடு தொடர்புகொள்ளும் நிகழ்ச்சிகளையும் அதிக நேரம் ஒலிபரப்புகின்றன. வாரத்தின் மற்ற நாட்களில் செய்யக்கூடிய வேலைகளை மக்கள் தோட்டங்களிலும், வீடுகளிலும், பண்ணைகளிலும் சிலர் செய்கிறார்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஓய்வு நாளில் ஒருவர் வேலை செய்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மரண தண்டனைக்கு உள்ளாவார்கள். ஒரு நகரத்தில் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் வாரத்தின் கடைசி நாட்களில் செய்யப்படும் பாவங்களை மட்டும் நாம் கவனிப்போமானால் நாம் அதிர்ச்சிக்குள்ளாவோம். இறைவனுடைய அன்பு மட்டுமே பாவிகள் மீது நீடிய பொறுமையையும் தயவையும் காண்பிக்கிறது.

கர்த்தருடைய நாளில் தன்னைக் கெடுத்துக்கொள்கிற ஒரு மனிதனைப் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? யாத்திராகமம் 31:14-17-வரையுள்ள வசனங்களை வாசித்தால் நாம் கர்த்தருக்கு முன்பாக அமைதியாக இருப்பது எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம் (கர்த்தருடைய நாளைக் கைக்கொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள எண்ணாகமம் 15:32-34 ஆகிய வசனங்களையும் வாசிக்கவும்). நாமும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். உதாரணமாக, நாம் ஆசிரியர்களாக இருந்தால், நம்முடைய மாணவர்களுக்கு நாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுப்பாடங்களைக் கொடுக்கக்கூடாது. ஓய்வு நாளை ஆராதனை செய்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்தாத ஒரு நகரத்தை அல்லது கிராமத்தை கர்த்தர் சுட்டெரித்து விடுவதாக எச்சரிக்கிறார் (எரேமியா 17:22). இந்த எச்சரிக்கையை நாம் அற்பமாக எண்ணக்கூடாது. உலகப் போர்களும் பேரழிவுகளும் இப்படிப்பட்ட பாவங்களின் விளைவாகக்கூட நமக்கு நேரிட்டிருக்கலாம், யார் அறிவார்? “வஞ்சிக்கப்படாதிருங்கள்; கர்த்தர் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7). இறைவனுடைய கட்டளையை மீறிவிட்டு எந்த மனிதனும் தப்பித்துவிடலாம் என்று கருதக்கூடாது.

இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரணமடைந்து, அவற்றிற்கான தண்டனையைச் சுமக்கவில்லை என்றால், நமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், அவருடைய மரணத்தின் காரணத்தைக் காரணம் காட்டி கர்த்தருடைய நாளை நாம் அசுசிப்படுத்தலாகாது. இயேசுவும் அவருடைய சீடர்களும் எப்போதும் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக அனுசரித்தார்கள். அவர் தம்முடைய பிதாவை மகிமைப்படுத்தும்படியாக வாழ்ந்தார். இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு வாரத்தின் முதலாம் நாளாகிய தம்முடைய உயிர்த்தெழுதலின் நாளில், புதிய உடன்படிக்கையின் புதிய விருந்தைக் கொண்டாடும்படி தம்முடைய சீடர்களுக்குக் காட்சியளித்தார்.


06.7 - நியாயப்பிரமாணத்தைக் குறித்த புதிய புரிந்துகொள்ளுதல்

தவறான முறையில் ஓய்வு நாளைக் கைக்கொள்வதைப் பற்றிச் சிந்திக்கும்போது, இறைவனுடைய நியாயப்பிரணமானத்தை மக்கள் எவ்வளவு எளிதாக தவறாகப் பயன்படுத்த முடியும் என்பதை நாம் கவனிக்கலாம். ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கியதற்காகவும் தம்மை இறைமகன் என்று அறிவித்ததற்காகவுமே இயேசுவுக்கு யூதர்கள் மரண தண்டனை விதித்தார்கள். இயேசுவின் காலத்தில் இருந்த யூத மதத் தலைவர்கள், மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மீது கொண்டிருந்த வெறியின் காரணமாக, இறைவனையும் மக்களையும் நேசிக்க முடியாதவர்களாக மாறியிருந்தார்கள். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் எப்போதும் இயேசுவைச் சுற்றித் திரிந்து அவர் மீது குற்றஞ் சுமத்த வகைதேடினார்கள். அவர்கள் மாய்மாலமான முறையில் வெளித்தோற்றத்தில் நீதிமானகளாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற இறைவனுடைய சத்தத்திற்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. அவர்கள் தங்கள் மனதை மாற்றவும் ஆயத்தமாயிருக்கவில்லை. அவர்கள் பிதாவாகிய இறைவனையும், குமாரனாகிய இறைவனையும், பரிசுத்த ஆவியாகிய இறைவனையும் மறுதலித்தார்கள். அவர்கள் ஓய்வு நாளில் சுகவீனமாக இருந்தவர்களைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை. ஆகவே, அவர்கள் வைராக்கியத்துடன் ஓய்வு நாளைக் கைக்கொள்ள முயற்சித்தது வெறும் மாய்மாலமாகவே இருந்தது. “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதளை செய்கிறார்கள்” (மத்தேயு 15:8,9) என்று இயேசு இவர்களைப் பற்றிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கர்த்தருடைய நாளைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ளவது என்பதன் பொருள் என்ன என்பதை அவர் நமக்கு விளக்கும்போது வேலை செய்வதையோ அல்லது வேலை செய்யாமல் இருப்பதையோ பற்றி அதிகம் பேசாமல், இறைவனுக்கு முன்பாக நம்முடைய இருதயம் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றியே பேசியிருக்கிறார். கிறிஸ்துவின் சிந்தையில் நியாயப்பிரமாணத்தைக் குறித்த இந்தவிதமான புரிதலையே அப்போஸ்தலனாகிய பவுலும் தொடர்ந்து முன்வைத்தார். யூதர்கள் அல்லாத கிறிஸ்தவர்கள் பழைய உடன்படிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் போதித்ததற்காக அவர் சபிக்கப்பட்டுக் கல்லெறியப்பட்டார். நாம் கிறிஸ்துவினுடைய மரணத்தின் மூலமாக நியாயப்பிரமாணத்திற்கு மரித்துவிட்ட காரணத்தினால் இப்போது நாம் நியாயப்பிரமாணத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் போதித்தார். ஆகவே, நியாயப்பிரமாணத்திற்கு இனிமேல் நம்மீது அதிகாரம் இல்லை. ஆனால் கிறிஸ்துவினுடைய அன்பின் புதிய ஒழுங்கைப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வைத்திருக்கிறார். நம்முடைய இருதயங்களில் இருக்கும் புதிய ஆவிக்குரிய பிரமாணம் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது, நம்முடைய அனைத்து சிந்தனைகளிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் திரியேக இறைவனைத் துதிக்கும்படி நம்மைத் தூண்டுகிறது. ஆகவே நாம் இனிமேல் நியாயப்பிரமாணத்தினால் அழுத்தப்படுவதில்லை, அது பரிசுத்த ஆவியானர் மூலமாக நம்மில் விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் உண்டாக்குகிறது. கிறிஸ்து நபர்களைத்தான் பரிசுத்தமாக்குகிறார், நாட்களை அல்ல என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நான்காவது கட்டளையைக் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளுதல் மூலமாக பழைய உடன்படிக்கைக்கும் புதிய உடன்படிக்கைக்கும் இடையில் உள்ள இந்த மிகப்பெரும் வித்தியாசத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்.


06.8 - முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை

முஸ்லீம்கள் தங்கள் ஒன்று கூடுகைக்கான முக்கிய நாளாக வெள்ளிக் கிழமையை ஏற்படுத்தி, அதை நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களால் நான்காவது கட்டளையைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அவர்கள் காண்பிக்கிறார்கள். யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஹம்மதுவின் தீர்க்கதரிசன வரத்தையும் அவர்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் என்ற அவருடைய அழைப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, அவர் யூதர்களின் சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களின் ஞாயிற்றுக் கிழமையையும் புறக்கணித்து, வெள்ளிக்கிழமையை முஸ்லீம்களின் ஒன்றுகூடுகைக்குரிய நாளாக அறிவித்தார். இவ்விதமாக அவர் செயல்பட்டபோது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு வெள்ளிக் கிழமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குரிய எந்த ஆதாரங்களும் வேதாகமத்தில் இல்லை. மீட்பின் திட்டத்திலும் இந்த நாளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. உண்மையில் இது இறைவனுக்கும் அவருடைய மேசியாவிற்கும் எதிரான கலகத்தினால் செய்யப்பட்ட செயலாயிருக்கிறது. வெளிக்கிழமைக்கு எந்த வேதாகம ஆதாரமும் பின்னணியும் இல்லை.

வெள்ளிக் கிழமைகளில் முஸ்லீம்கள் தங்கள் தொழுகையை முடித்த உடனேயே தங்கள் வேலைகளுக்குச் செல்கிறார்கள். வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசல்களில் கொடுக்கப்படும் சொற்பொழிவுகள் பெரும்பாலானவை அரசியல் சார்பானவையாகவே இருக்கின்றன. வெறுப்பும் அழிவும் நிறைந்த உதாரணங்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாளைப் பரிசுத்தமாக்குதல் அல்லது ஒரு விசுவாசியைப் பரிசுத்தமாக்குதல் என்பது இன்றுவரை தொழுகைசெய்யும் முஸ்லீம்களுக்கு புரியாத காரியமாகவே இருக்கின்றன. அல்லாஹ் மிகப் பெரியவனாக இருக்கின்ற காரணத்தினால், அவனுடைய திருப்பெயரைத் தவிர அவரைக் குறித்த எந்த காரியத்தையும் அவர்கள் அறிந்துகொள்ள முடியாது. இதன் மூலமாக, இந்தக் கட்டளையைப் பொறுத்தவரை, இஸ்லாம் பழைய உடன்படிக்கையைவிட மிகவும் குறைவான நிலையில் ஏன் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு இரட்சிப்பைப் பற்றியோ புதிய உடன்படிக்கையில் உள்ள புதிய படைப்பைப் பற்றியோ எந்த அறிவும் கிடையாது.

ஆயினும், இயேசு ஓய்வு நாளிலும் வார நாட்களிலும் அற்புதங்களைச் செய்தபடியால், மரணத்திலிருந்து உயிர்தெழுந்த அவருக்கு எங்கள் நன்றிகளை ஏறெடுக்கிறோம். அவர் வாரத்தின் முதலாம் நாளில் உயிர்தெழுந்த காரணத்தினால், அந்த நாளுக்கு முற்றிலும் புதிய பொருளைக் கொடுத்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒவ்வொரு புதிய வாரத்தினுடைய புதிய சூரியனைப் போல எழுந்து, ஆண்டவரின் இந்த உயிர்ப்பிக்கும் வார்த்தைகளை அறிவிப்பதைப் போல இருக்கிறது: “நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புள்ளவராயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” (யோவான் 13:34-35).

www.Waters-of-Life.net

Page last modified on March 16, 2015, at 12:43 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)