Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Ewe French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Ukrainian -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)
7. அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34)அப்போஸ்தலர் 17:16-21 பெரோயா பட்டணத்திலிருந்து அத்தேனே பட்டணத்திற்கு பவுலுடன் சில சகோதரர்களும் பிரயாணம் மேற்கொண்டு வந்தார்கள். ஆனால் அவர் அங்கு தனிமையில் விடப்பட்டார். இந்தப் பட்டணத்தில் பவுல் தன்னுடைய வழக்கமான முறையைப் பின்பற்றவில்லை. இறைவனே கிரேக்க தத்துவ ஞானிகளுடன் பேசும்படி பவுலை வழிநடத்தினார். அந்த மாபெரும் கிரேக்க நகரத்தில் பவுல் தீமோத்தேயுவுக்காகவும் சீலாவுக்காகவும் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் ஒன்றித்த சேவை மற்றும் விண்ணப்பத்தின் மூலமாக அந்த புகழ்பெற்ற நகரத்தினுடைய பெருமையின் ஆவியை மேற்கொள்ள நினைத்தார்கள். ஆயினும் புவினத்து மக்களுடைய மதிப்பிற்குரிய அப்போஸ்தலரால் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை. அந்த நகரத்தின் வழியாக நடந்து வந்தபோது அங்கிருந்த பளிங்கு ஆலயங்கள் அனைத்தும் எத்தனை சிலைகளால் நிறைந்திருந்தது என்பதைக் கண்டு வேதனையும் வைராக்கியமும் அடைந்தார். யூதர்கள் பல தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு விட்டார்கள். ஆனால் அத்தேனே பட்டணத்தில் அந்த சிலைகள் புதிது புதிதாக முளைத்திருந்தன. அந்த மாபெரும் நகரத்தில் மக்களுக்கு மெய்யான விசுவாசம் இல்லாமல் இருப்பதற்கு அங்கிருந்த சிலைவழிபாடும் சமயசமரசப் போக்குமே காரணம் என்பதை அவர் உடனடியாக வேதனையோடு உணர்ந்துகொண்டார். அத்தேனர்கள் விசுவாசத்தை அடிப்படையான சத்தியமாகவோ முக்கியமான அம்சமாகவோ கருதவில்லை. அவர்கள் இறைவனுடைய வெளிப்பாட்டினால் வரும் சத்தியத்தைப் பற்றி அக்கறைப்படவில்லை. மாறாக அவர்கள் அனைத்துக்கும் மேலாக தங்கள் அறிவை உயர்த்தினார்கள். அனைத்துப் போதனைகளும் கருத்துக்களும் அவர்களுடைய தத்துவஞான முறையின்படி ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். இந்தப் பயங்கரமான உண்மையின் வெளிச்சத்தில் இந்த இறைமறுப்புத் தத்துவங்களுக்குப் பின்புலமாயிருக்கும் மாயையின் தெய்வங்களுக்கு எதிராக பவுல் போராடினார். இந்த சிலைகளுக்கு சேவை செய்வதிலிருந்து அவர்களை விடுவித்து உயிரும் உண்மையுமுள்ள இறைவனுக்கு சேவை செய்பவர்களாக மற்ற பவுல் முயற்சி மேற்கொண்டார். அறிவு, புரிந்துகொள்ளுதல், சிந்தித்தல் ஆகியவை இறைவனுடைய அருட்கொடைகள்தான். கர்த்தரைவிட்டு மனிதன் பிரிந்துவாழும்போது, அவனுடைய சிந்தனைகள் அனைத்தும் முரண்பட்டதாகவும், சீரழிந்ததாகவும், கெட்டதாகவுமே இருக்கும். சிந்தனையாளர்கள் பெருமையுள்ளவர்களாகவும் தங்களையே ஏமாற்றிக்கொள்பவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் சிந்தனைகளினால் இறைவனை அறிந்துகொள்ள முடியாது. அதனால் அவர்கள் அறிவாளிகளாயிருந்த போதிலும் மூடத்தனத்தில் குருட்டுத்தனமாக விழுந்துபோகிறார்கள். உயிருள்ள இறைவன் அவர்கள் மதிக்காத காரணத்தினாலும், மனித தெய்வங்களையும் அசுத்த ஆவிகளையும் குறித்த அவர்களுடைய எண்ணற்ற மூடநம்பிக்கைகளினாலும் அவர்கள் மனிதர்களை தெய்வங்களாக உயர்த்துகிறார்கள். இறைவனை அறியாதவர்கள் இந்த அண்டத்தின் மையமாகவும் அனைத்து காரியங்களின் அளவுகோலாகவும் உள்ள இறைவனுடைய நிலைக்குத் தங்களை உணர்த்துகிறார்கள். அத்தேனர்களுடைய அவநம்பிக்கையைக் கண்டு, அதிலும் அவர்களுடைய பலதெய்வ வழிபாட்டைக் கண்டு கோபமடைந்தார். இந்தக் கோபம் மாபெரும் ஆசீர்வாதமாக மாறியது. இந்த தருணத்தில்தான் ஐரோப்பாவிற்கு கிருபை அறிமுகம் செய்யப்பட்டது. இறைவனுடைய மகிமைக்காக கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலன் சுகவீனமான ஐரோப்பாவைப் பயன்படுத்தினார். புறவினத்து மக்களுக்கிருக்கும் ஒரே நம்பிக்கையாக உயிருள்ள கிறிஸ்துவை அவர்களுக்கு அறிவித்தார். இறைமறுப்பு சார்ந்த கலை, சமயம், தத்துவம் ஆகியவற்றைக் குறித்த பவுலுடைய கோபம்தான் இந்த அருட்பணியாளரும் நற்செய்தியாளருமான பவுலுக்கு ஐரோப்பாவைத் திறந்துகொடுத்தது. அதன் பிறகு பவுல் தன்னுடைய வழக்கத்தின்படி இறைவனுக்குப் பயந்தவர்கள் கூடிவரும் ஜெப ஆலயத்திற்குப் போனார். அங்கிருந்த யூதர்கள் மற்றும் புறவினத்து மக்கள் யாரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாக நாம் வாசிப்பதில்லை. அந்நகரத்தின் குடிமக்கள் அனைவருமே நம்பிக்கையைக் குறித்த கருத்தியல் விளையாட்டில்தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். யூதர்களுடைய ஜெபஆலயத்தில் கூட இறைவனுடைய உண்மையான வெளிப்பாட்டிற்கு தங்களை திறந்துகொடாமல், பல்வேறு தத்துவஞானக் கருத்துக்களைக் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இதற்குப் பிறகு அப்போஸ்தலன் தெருக்களிலும், வீதிகளிலும், பொதுவான இடங்களிலும் சென்று பிரசங்கம் பண்ணத் தொடங்கினார். அத்தேனேயில் இருந்தவர்கள் அனைவருமே பவுல் பேசும் காரியத்தைப் பேசக்கூடியவர்களாயிருந்தார்கள். பேசுவதும் எழுதுவதும் அவர்கள் நடுவில் சாதாரண, தரம்தாழ்ந்த செயலாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் தன்னை ஒரு சிறிய தத்துவஞானி என்றுதான் கருதிக்கொண்டிருந்தார்கள். பவுல் தன்னுடைய ஞானத்தின் காரணமாக அவர்களுக்கு பிரசங்கத்தின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கவில்லை. அவர் சாக்ரட்டீஸின் கேள்வி கேட்கும் முறையைப் பயன்படுத்தினார். அங்கிருந்தவர்களுக்குப் பரிச்சயமான ஒரு முறையைப் பயன்படுத்தி அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க பவுல் முயன்றார். சிலநேரத்திற்குள்ளாக சில தத்துவஞானிகள் தங்களைத் தாழ்த்திக்கொண்டு இந்த யூதனாகிய வழிப்போக்கனிடத்தில் விவாதிக்க முன்வந்தார்கள். எப்பிக்கூரியர்கள் என்பவர்கள் இருப்பியல்வாதிகள் (existentialists). இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிப்பதுதான் மனித வாழ்வின் நோக்கம் என்று அவர்கள் கருதினார்கள். மற்ற அனைத்து சிந்தனைகளும் அவர்களைப் பொறுத்தவரை கற்பனைகளும் கனவுகளுமே. ஸ்தேக்கியர்கள் மாம்சீக சிந்தனையை மேற்கொள்ள முயற்சித்தார்கள். அவர்கள் சுயகட்டுப்பாடு மற்றும் நற்குணங்களை வளர்த்தெடுப்பதன் மூலமாக தீய நோக்கங்களின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள விளைந்தார்கள். இருப்பியல்வாதிகளும் சரி, இலட்சியவாதிகளும் (idealists) சரி பவுலுடைய போதனையைப் புரிந்துகொள்ளவில்லை. அவரை “வாயாடி” என்று கருதினார்கள். கிரேக்க மொழியில் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைக்கு “விதைகளைப் பொறுக்குபவன்” என்று பொருள். அதாவது பேச்சாளன் தன்னுடைய பேச்சுக்குரிய முறையான சிந்தனையைக் கொண்டிராமல் மற்றவர்களுடைய கருத்துக்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருத்தமற்ற காரியங்களைத் தன்னுடைய பேச்சில் எடுத்துக்கூறுபவன் என்று அதற்குப் பொருள். ஒரு கோர்வையாக தன்னுடைய சிந்தனையை வடிவமைக்க முடியாதவர் என்று அவர்கள் பவுலைப் பற்றி நினைத்தார்கள். ஒழுங்கற்ற முறையில் அவர் தம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் என்றும் ஒரு பறவையைப் போல தனது கருத்துக்களை எங்கும் சிதறச் செய்கிறார் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இயேசு மகிமையின் கர்த்தர் என்றும் அவருடைய உயிர்தெழுதலே நம்முடைய எதிர்காலம் என்றும் பவுல் கூறுவதை அவர்களில் சிலர் கேட்டார்கள். இந்த கருத்துக்களை அவர்கள் மீண்டும் ஒரு முறை சற்றுக் கோர்வையான முறையில் கேட்டு அதை விமர்சன ரீதியில் ஆராயவும் நியாயம்தீர்க்கவும் அவர்கள் விரும்பினார்கள். இதன் மூலமாக அவர்கள் ஒருவேளை அவரை பரிகசிப்பார்கள் அல்லது அவரையும் தங்களுடைய தத்துவஞானிகளுடைய பட்டியலில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களில் யாரும் பவுலுடைய செய்தியைப் புரிந்துகொள்ளவோ, இறைவன் அவர்களுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்துவதையோ புரிந்துகொண்டு, தங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பவில்லை. அவர்களுடைய சிந்தைகள் அனைத்துமே இவ்விதமான கருத்துக்களால் தங்களை மகிழ்வித்துக்கொள்வதையும் தங்கள் செவிகளுக்கு விருந்தளிப்பதையும் பற்றியதாகவே இருந்தது. அவர்கள் இதுவரை கேட்டிராத கருத்துக்கள் எதையாவது பவுல் சொன்னால் அதை பிறகு தங்கள் நூல்களில் எழுதுவதற்காகவே அவர்கள் பவுலுடைய பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய விமர்சனத்தில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதற்கும் இந்த பரிதாபத்திற்குரிய மனிதனை அவர்கள் தொடர்ந்து ஏளனம் செய்யவும் ஏதேனும் காரணம் இருக்குமா என்றுதான் அவர்கள் ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அந்தக் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக பவுலைக் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் அந்த விவாதத்தில் ஈடுபட்டிருக்கலாம். காரணம் அவர்கள் பவுலை நகர் மன்றத்திற்கு முன்பாகக் கொண்டுபோனார்கள். ஏதேனும் அந்நிய ஆவி தங்களுடைய நாட்டிற்குள் நுழைந்து, அத்தேனேயில் உள்ள பல ஆவிகளின் ஒற்றுமையைக் குலைத்துவிடாதபடிக்கு, அங்கு கொண்டுவரப்படும் சிந்தனைகள், உபதேசங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தையும் அவர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். அவருடைய கொள்கையையும் தத்துவத்தையும் விளக்கும்படி பொய்யான தாழ்மையோடு அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய இருதயங்கள் இறைவனைத் தேடவில்லை, அவர்களுடைய சிந்தனைகள் நீதியின்மேல் தாகம்கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய சிந்தனைகளின் விதிமுறைகளுக்கு பவுலுடைய சிந்தனையை உட்படுத்துவதற்கு மட்டுமே அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் சத்தியத்தைச் சரியாக அறிந்துகொள்ள முடியும் என்று அவர்களில் யாரும் நம்பவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இறைவன் அவர்களுக்கு மறைக்கப்பட்டவராகவே இருந்தார். அவர்களுடைய சிந்தனைகள் இச்சைகளினாலும் விபசாரத்தினாலும் நிறைந்திருந்தது. அவர்கள் பிரகாசமான, அறிவுபூர்வமான கருத்துக்களுக்கு அடிமைப்படிருந்தார்கள். அவர்கள் அனைத்து கவர்ச்சிகரமான கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டாலும் தங்களுடைய சுயத்தை வலியுறுத்துகிற தத்துவத்தையே அவர்கள் முக்கியப்படுத்தினார்கள். சிந்தனைவறட்சிக்குட்பட்ட இவர்கள் ஒவ்வொருவரும் தங்களையே ஞானிகளாகக் கருதிக்கொண்டிருக்கும் மாயத்தையே வெளிப்படுத்த நினைத்தார்கள். இறைவன் மட்டுமே மிகப்பெரியவன் என்றும் மனிதன் இறைவனுக்கு முன்பாக பயனற்றவனும் ஒன்றுமில்லாதவனுமாக இருக்கிறான் என்பதை இவர்கள் அறியவில்லை. அவர்களிலிருந்த ஞானிகளில் ஒருவர் அவர்களுடைய குருட்டுத்தனத்தை அருமையாக அறிக்கை செய்திருக்கிறார்: “எனக்கு எதுவும் தெரியாது என்பது மட்டுமே எனக்குத் தெரியும்” என்று கூறுகிறார். மனிதன் இறைவனை அறியாதவனாக இருக்கிறதால் அவன் தன்னையும் அறியாதவனாகவே இருக்கிறான். அப்படிப்பட்ட மனிதன் குருடனுக்கு வழிகாட்டும் குருடனாயிருக்கிறான். விண்ணப்பம்: பரிசுத்தமும் உண்மையுமுள்ள இறைவா, அறிவுக்கலகத்திலிருந்து நீர் என்னைக் காப்பாற்றும். அப்போது நான் என்னை உம்முடைய அறிவுக்கு ஒப்புக்கொடுப்பதால், தத்துவ ஞானக்கருத்துக்களின் விளையாட்டுக்கு உட்பட்டு என்னையும் மற்றவர்களையும் புறக்கணியாதிருப்பேன். நீர் மட்டுமே பெரியர், நாங்கள் பயனற்றவர்களும் பாவிகளும் ஆவியில் விபச்சார சிந்தையுள்ளவர்களுமாயிருக்கிறோம். நாங்கள் உம்முடைய வார்த்தையில் நிலைத்திருக்கும்படி, எங்கள் சிந்தையிலுள்ள பாவங்களை மன்னித்து, அதைப் பரிசுத்தப்படுத்தும். கேள்வி:
|