Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 091 (The Arrest of Jesus)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

8. இயேசு கைது செய்யப்படுதல் & சீஷர்கள் ஓடிப்போதல் (மாற்கு 14:43-52)


மாற்கு 14:43-52
43 உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். 44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். 45 அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். 46 அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 47 அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். 48 இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; 49 நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். 50 அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். 51 ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். 52 அவன் தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.

இயேசு தமது எதிரிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவதற்கு ஆயத்தப்பட்டார். இந்த வேளையைக் குறித்து அவர் ஏற்கெனவே தமது பிதாவுடன் பேசியிருந்தார். பாடுகள் மற்றும் உபத்திரவங்களை முறுமுறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும்படியான வல்லமையைப் பெற்றுக்கொண்டார். வரப்போகும் சோர்வில் இருந்து அவருடைய விண்ணப்பம் அவரை விடுவித்தது. அவருடைய அன்பு மற்றும் தாழ்மையுடன் சோதனையை மேற்கொள்ளும்படியான வல்லமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இயேசுவின் இருதயம் முழுவதும் துக்கத்தினால் நிறைந்திருந்தது. அன்பின் அடையாளமாகிய முத்தத்தை துரோகத்தின் அடையாளமாக காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்து மாறிவிட்டான். அப்போஸ்தலனின் இருதயத்தில் இருந்து மிக மோசமான அருவருப்புகளையும் கொண்டுவரக் கூடியவனாக சாத்தான் இருந்தான். ஆனாலும் காட்டிக்கொடுத்த துரோகியை இயேசு சபிக்கவில்லை. கடைசி நேரத்திலும் மனந்திரும்புதலுக்கு நேராக அவனை நடத்தும்படி அன்புள்ள வார்த்தைகளுடன் பேசினார்.

மேலும் நம்மை மீட்கும்படி தாழ்மையுடன் இறைவனின் ஆட்டுக்குட்டியாக மரிக்கும்படி அவர் ஆயத்தப்பட்டார். அவருடைய நடத்தையை சீஷர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை விடுவிக்கும்படி பெருந்திரளான தூதர்கள் வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் கிறிஸ்துவின் வெற்றியையும், இறைவனின் வல்லமை வெளிப்பாட்டையும் விசுவாசித்தார்கள்.

இவ்விதமாக இயேசு பலவீனராகவும், சிறைப்பட்டவராகவும் தோன்றினார். அவர் தன்னையும், தன்னைப் பின்பற்றியோரையும் காப்பாற்றும்படி எந்தவொரு அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை. அவர்களும் இயேசுவைப் போல துன்பங்கள் அனுபவித்தார்கள். வேவுகாரர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டார்கள். இயேசு கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த குழப்பமான இரவு நேரத்தில் அவர்களால் ஓடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

அறியப்படாத ஒரு வாலிபன் இயேசுவைத் தூரத்தில் பின்பற்றிப் போனான். ஒருவேளை அவன் இந்த நற்செய்தியை எழுதிய மாற்கு என்று கருதப்படுகிறது. மேலும் தனது வீட்டில் கிறிஸ்துவின் இராப்போஜனத்தை ஆயத்தம் செய்த மனிதனின் மகனாகவும் இருக்கக் கூடும். அந்த இரவு உணவின் போது இயேசு பேசிய அனைத்து வார்த்தைகளையும் இந்த வாலிபன் கேட்டிருக்க வாய்ப்புண்டு. புதிய உடன்படிக்கையைக் குறித்து இயேசு பேசியதைக் கேட்டு, அவரைப் பின்பற்ற தீர்மானித்திருப்பான்.

ஆனாலும் இயேசு கைது செய்யப்பட்டபோது, அவனும் ஓடிப்போனான். அந்த இரவில் இயேசுவுடன் துன்பப்படுவதற்கு பதிலாக, ஆடையின்றி ஓடிப்போகவும் அவன் ஆயத்தமானான். இந்த சம்பவத்தை குறிப்பிடும்போது, இயேசு கிறிஸ்துவைக் குறித்த நற்செய்தியை எழுதுவதற்கு தான் தகுதியற்றவன் என்பதை அறிக்கையிட மாற்கு விரும்பினான். மற்ற சீஷர்களைப் போல அவனும் ஓடினான். ஆனாலும் கிறிஸ்து உண்மையுள்ளவராக இருந்தார்.

பிரியமான சகோதரனே, நீ கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறாயா, அல்லது நீ வசதியையும், ஐசுவரியத்தையும் தேடிக்கொண்டிருக்கிறாயா? கிறிஸ்து தாழ்மையுடன் வாழ்ந்ததைப் போல நீயும் தாழ்மை, திருப்தி மற்றும் சாந்தத்தை தெரிந்துகொள். இல்லையெனில் ஆண்டவரை விட்டு வழிவிலகவும், அவரை மறுதலிக்கக்கூடிய ஆபத்தும் நேரிடும். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி மனந்திரும்பு. சுயத்தை வெறுத்துவிடு. இன்றே உனது ஆசை இச்சைகளை மேற்கொள்.

இயேசு அந்த மனிதர்களின் கைகளில் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு, பேதுருவை எழுப்பினார். அவன் தூக்கத்தில் இருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடன் தனது பட்டயத்தை எடுத்தான். பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசுவிடம் சொல்லியிருந்த வார்த்தையை நிறைவேற்ற பேதுரு விரும்பினான். அவன் இயேசுவுடன் உறுதியாக நிற்க விரும்பியும், இறைவனுடைய வழியை அவன் புரிந்துகொள்ளவில்லை. அவன் சோதனைக்குட்படாதபடி, யுத்தத்திற்கு முன்பு விண்ணப்பம் ஏறெடுக்காதபடி இக்கட்டான சூழ்நிலையில் தூங்கிக்கொண்டிருந்தான்.

பட்டயத்தை எடுத்து வெட்டியதின் மூலம், அந்த ஏழை வேலைக்காரன் நற்செய்தியைக் கேட்க முடியாதபடி பேதுரு தடை செய்தான். ஆனாலும் இயேசு தமது அன்பினால் அந்த எதிரியையும் சுகமாக்கினார். தமது எதிரிகளையும் நேசிப்பதன் மூலம் அவருடைய ராஜ்யத்தின் சட்டத்தை நிறைவேற்றினார். தனது சொந்தக் காதுகளால் வேலைக்காரன் நற்செய்தியைக் கேட்கும்படியும், தனது இரக்கத்தினால் அவன் மாற்றம் அடையவும் இயேசு விரும்பினார்.

போர்ச்சேவகர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவர் குற்றம் செய்யாதவர். பரலோகத்தின் மில்லியன்கணக்கான இறைதூதர்கள் அவருக்கு சேவை செய்ய ஆயத்தமாக இருந்தாலும், தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்காக, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி தமது எதிரிகளின் கைகளில் தன்னை ஒப்புக்கொடுத்தார். சிலுவையில் அடைந்த அவரது மரணத்தினால் நமது பாவங்களை மன்னித்தார். தமது ஆவியினால் அவருடைய இரட்சிப்பின் வெற்றியை நமக்கு காண்பித்தார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, உமது தாழ்மை எங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. உமது சாந்தம் எங்கள் பெருமையை உடைக்கிறது. உமது இரக்கம் எங்கள் இருதயக் கடினத்தை மென்மையாக்குகிறது. எங்கள் சுயநலம், பண ஆசை, துரோகம் உம்மைப் பின்பற்றுவதில் தோல்வி போன்ற காரியங்களை மன்னியும். பரிசுத்த ஆவியின் வழிகளை நாங்கள் புரிந்துகொள்ளவில்லை. உமது அன்பின் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றவில்லை. தயவாய் எங்களை மன்னியும். உமது இரக்கத்தில் எங்களை உறுதிப்படுத்தும். உமது அன்பினால் எங்களை நிரப்பும். உமக்கு கீழ்ப்படிந்து உம்மைப் பின்பற்றுகிறோம். உமது பெரிய கிருபையை எண்ணி துதிக்கிறோம். ஆமென்.

கேள்வி:

  1. இயேசுவை கைது செய்த நிகழ்வில் உங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பகுதி எது?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:15 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)