Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 065 (Jesus Cleanses the Temple)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)

3. இயேசு அத்திமரத்தை சபித்தார் தேவாலயத்தை சுத்திகரித்தார் (மாற்கு 11:11-19)


மாற்கு 11:11-19
11 அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார். 12 மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. 13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. 14 அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். 15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, 16 ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: 17 என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். 18 அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள். 19 சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.

இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்த போது, அவர் மக்களின் அதிபதிகள் சந்திக்கும் இடமாகிய அரண்மனை முற்றப் பகுதிக்கு செல்லவில்லை. அவர் இராஜாவாக வந்தார். பரிசுத்தத்தின் மையமாகிய இறைவனின் ஆலயத்திற்குள் சென்றார். ஆனால் அங்கு திரளான மக்கள் கடமைக்காக வேண்டுதல் செய்வதையும், பலிக்கான மிருகங்களை வாங்குவதற்கு காசுக்காரர்களிடம் மக்கள் செல்வதையும் கண்டார். அவர்களுடைய இருதயங்களில் மனந்திரும்புதலை அவரால் காண இயலவில்லை. இறைவனின் பிரசன்னம் அங்கே இல்லை. வியாபாரிகளின் சத்தம் மேலோங்கி இருந்தது. இயேசு அந்த நகரத்தைக் கண்டார். மக்களின் கண்களினூடாக பார்த்தார். அவர்களின் பாவம், அருவருப்பு, பெருமை, இச்சைகள், பகை ஆகியவற்றைக் கண்டார். பின்பு அவர் துக்கத்துடன் நகரத்தை விட்டு வெளியே சென்றார். அந்த நகரம் பகையினாலும், கொலையினாலும் நிறைந்திருந்தது.

அழகான கேதுரு மரம் லெபனோனைக் குறிக்கின்றது. அத்திமரமும், ஒலிவமரமும் பழைய உடன்படிக்கையைக் குறிக்கினற உருவகமாக உள்ளது. அத்திமரத்தின் சிறப்புத் தன்னை என்னவென்றால், இலையும், கனியும் ஒரே காலத்தில் தோன்றுவதாகும். சில சமயம் கனி முதலில் தோன்றும். இயேசு ஒரு குறிப்பிட்ட அத்திமரத்தின் வழியே கடந்து சென்றார். அது முழுவதும் இலைகளால் நிறைந்திருந்தது. அப்படியென்றால் அதில் கனிகள் அறுவடை செய்கின்ற காலம். அது சரியாக அத்திப்பழங்களை அறுவடை செய்கின்ற காலம் ஜீன் மாதம். ஆனால் அதில் ஒரு கனியைக் கூட காண முடியவில்லை. எனவே கிறிஸ்து அந்த மரத்தை சபித்தார். அது ஒருக்காலும் கனி கொடாதபடி அதை சபித்தார்.

பழைய உடன்படிக்கையில் வல்லமை இல்லை என்பதை இதன் மூலம் நாம் காண்கிறோம். மோசேயின் நியாயப்பிரமாணம் இறைவனுக்கு உகந்த கனிகளைக் கொடுக்க முடியவில்லை. அத்திமரத்தைப் போல பழைய ஏற்பாட்டில் நாம் அநேக இலைகளைக் காண்கிறோம். அது முழுவதும் கட்டளைகள், நியாயத்தீர்ப்புகள், சட்டங்கள், விண்ணப்பங்கள், சடங்கு முறைகளினால் நிறைந்துள்ளது. ஆனால் அவைகள் உண்மையான மனந்திரும்புதல், நித்திய மன்னிப்பு, அன்பின் வல்லமையைக் கொண்டு வர முடியவில்லை.

இயேசுவை ஏற்றுக்கொள்ளாதபடி எருசலேம் அதன் பெயருக்கு ஏற்ப பரிசுத்த நகரமாக இருக்க முடியாது. ஆகையால் அங்கு அழிவும், நியாயத்தீர்ப்பும் ஆரம்பித்தது.

அவர் மறுநாள் அந்த நகரத்திற்கு திரும்பி வந்தார். இயேசு தனது ராஜ்யத்தின் துவக்கத்திற்கான அடையாளத்தைக் காண்பித்தார். அவர் பிரசங்கிக்கவில்லை, குணமாக்கவில்லை. அவர் மறுபடியும் தேவாலயத்திற்கு வந்தார். வியாபாரிகள், காசுக்காரர்கள், சத்தமிடும் கூட்டத்தாரை அங்கிருந்து துரத்தினார். தேசத்தின் சீர்திருத்தம் மதசீர்த்திருத்தத்தில் ஆரம்பிக்கிறது என்பதைக் காண்பித்தார். அது பொருளாதார நிறுவனம், பொது நிறுவனம், புரட்சி அல்லது தியாகத்தினால் ஏற்படுவது கிடையாது.

கிறிஸ்து உனது இருதயத்தை சுத்தமாக்கவும், உன் மனதை மாற்றவும், உன் சரீரத்தை பரிசுத்தப்படுத்தவும் விரும்புகிறார். உன்னில் மறைந்திருக்கும் பகை அல்லது பண ஆசை அல்லது தீய ஆவி இருப்பதை கிறிஸ்து விரும்பவில்லை. அவர் தாமே உன்னில் வாசம்பண்ண விரும்புகிறார். இதனால் உனது சரீரம் ஆவியினால் நிரப்பப்பட்ட இறைவனின் ஆலயமாக மாறுகிறது.

உனது சபையிலும் இது உண்மை. கிறிஸ்து அந்நிய ஆவிகள் வருவதை அனுமதிப்பதில்லை. நாம் அனைவரும் அவருடைய பரிசுத்தத்திற்கு முன்பு நொறுக்கப்பட அவர் விரும்புகிறார். அவருடைய நற்செய்தியை மூப்பர்களும், இளைஞர்களும் பறை சாற்றுகிறார்கள். அவர் உன்னிலும், உனது குழுவிலும் வாசம்பண்ணுகிறார். நீங்கள் அனைவரும் இறைவனுடைய ஆலயமாக மாறுகிறீர்கள். உனது தூய நடக்கையும், அன்பும் உனக்குள் இறைவனின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துகிறது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் உண்மையான பிரதான ஆசாரியர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் வல்லமையும், அதிகாரமும் பெற்றிருக்கிற ராஜா. நீர் திருச்சட்டத்தைக் கொடுத்த ஞானமும், சத்தியமும் நிறைந்தவர். உமது மகிமைக்கு முன்பு எங்கள் இருதயங்கள் அசுத்தமாயிருப்பதை நாங்கள் உமக்கு முன்பு அறிக்கையிடுகிறோம். நாங்கள் அதிகம் சிந்திக்கிறோம், வாசிக்கிறோம், எழுதுகிறோம். ஆனால் எங்கள் நற்செயல்கள் குறைவாக உள்ளது. உமது பரிசுத்த ஆவியின் கனிகள் எங்களில் காணப்பட விரும்புகிறீர். எங்கள் பாவங்களை மன்னியும். உமது வல்லமையினால் எங்களை அபிஷேகியும். உமது விருப்பத்தை நிறைவேற்றுகிற கிறிஸ்தவர்களாக எங்களை மாற்றும். அநேகர் உம்மிடத்தில் திரும்பும்படி, உமது அன்பை எங்கள் தேசத்தில் பரவச் செய்யும். இருதயம் நொறுங்குண்டவர்கள் மத்தியில் நீர் வாசம் செய்கிறீர். உமது பிரசன்னமாகிய பரிசுத்த ஆலயமாக நாங்கள் இருக்கிறோம். ஆமென்.

கேள்வி:

  1. ஏன் இயேசு தேவாலயத்தை சுத்திகரித்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 18, 2021, at 04:14 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)