Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 001 (Introduction)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்

முன்னுரை


கிறிஸ்து தன்னுடைய வார்த்தைகள், பணிகள், வாழ்வின் சம்பவங்கள், மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் குறித்து எழுதும்படி சிலரை வழிநடத்தினார். மத்தேயு கண்கண்ட சாட்சியாகவும், மொழியியலாளராகவும் இருந்தார். யோவான் ஆசாரியருடன் தொடர்பு கொண்டிருந்த பிரியமான சீஷனாகவும், லூக்கா அப்போஸ்தலனாகிய பவுலுடன் இணைந்து செயல்பட்ட சிறந்த மருத்துவராகவும் இருந்தார்கள். அப்போஸ்தலர்களில் முக்கியமானவரான பேதுருவின் பிரசங்கங்களை பதிவு செய்த இளம் வாலிபராக மாற்கு இருந்தார்.

மாற்கு யார்?

அப்போஸ்தலானகிய பவுலுடனும், தனது மாமா பர்னபாவுடனும் முதல் அருட்பணி பயணத்தில் இணைந்து சென்ற யோவான் மாற்குதான் இதன் எழுத்தாளர் என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். (அப் 12:12-25; 13:5-13; 15:37-39). அப் பயணத்தின் போது நேரிட்ட பாடுகளை அவனால் அப்போது தாங்கிக்கொள்ள இயலவில்லை. அவனுடைய வாலிபத்தின் நிமித்தம், அப்பயணத்தில் இரண்டு அப்போஸ்தலர்களை விட்டுப் பிரிந்து, தனது ஊருக்குத் திரும்பினான். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இது பிடிக்கவில்லை.

ஆனாலும் பர்னபா மாற்குவிற்குள் எதிர்கால மனிதனை தனது உள்ளுணர்வினாலும், விவேகத்தினாலும் கண்டான். அவன் இரண்டாவது அருட்பணி பயணத்தில் மாற்குவை அழைத்துக்கொண்டு போக விரும்பி, பவுலுடன் பேசினான். ஆனால் இந்த நிலையற்ற வாலிபனை அழைத்துச் செல்ல பவுல் விரும்பவில்லை. இதன் நிமித்தம் இரு அருட்பணி தலைவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில வருடங்களுக்கு பின்பு, பவுலுடன் இணைந்து பணி செய்தவனாக ரோமில் நாம் மாற்குவைக் காண்கிறோம். பவுலின் சிறையிருப்பில் அவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்தான். (கொலோ 4:10; பிலேமோன் 24; 2தீமோத்4:11)

தூரத்தில் இருந்து இயேசுவைப் பின்பற்றியவனாக மாற்கு கருதப்படுகிறான். போர்ச்சேவகர்கள் இயேசுவைப் பிடித்த போது, தனது உடையை விட்டுவிட்டு, நிர்வாணமாக ஓடினான்( மாற்கு 14:51). கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது நடந்த இந்த நிகழ்ச்சியை மாற்கு குறிப்பிடுகிறான். இந்த நற்செய்தியை எழுத தகுதியற்றவன் என்கிறான். இருப்பினும் கிறிஸ்து அவன் மீது இரக்கம் கொண்டார். தனது தெய்வீக வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி, அவனுக்கு பொறுப்பைக் கொடுத்தார்.

எவ்விதம் மாற்கு நற்செய்தி தொகுக்கப்பட்டது?

சபை வரலாற்று அறிஞர் எசுபியஸ் இவ்விதம் கூறுகிறார். பவுலின் மரணத்திற்குப் பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுருவுடன் இணைந்து, மாற்கு உண்மையுள்ள ஊழியக்காரனாக பணி செய்தான். கிறிஸ்துவின் வாழ்வைக் குறித்து இந்த அப்போஸ்தலன் கூறிய வார்த்தைகளை, பிரசங்கங்களை மாற்கு துல்லியமாக எழுதினான். அவன் வரலாற்றை வரிசைப்படி பதிவு செய்யவில்லை. அவன் பேதுருவுடன் இணைந்து, வாசகர்களின் தேவைகளை சந்திக்கும் வண்ணம் தொகுத்து எழுதினான். அவன் நேரில் பார்த்தது போல இயேசுவின் வாழ்வை வெளிப்படுத்துகிறான். இந்த நற்செய்தியில் அவன் குறிப்பிடும் தகவல்களின் ஆதாரம் முதன்மையான அப்போஸ்தலரிடம் இருந்து பெறப்பட்டவையாகும்.

இயேசுவைக் குறித்து மாற்கு நற்செய்தி நூல் வெளிப்படுத்தும்போது, அவர் என்ன சொன்னார் என்பதை விட, அவர் என்ன செய்தார் என்பதையே பெரிதும் கூறுகின்றது. மாற்கு இயேசுவின் வார்த்தைகளை விட, அவரது செயல்களை தெளிவாகப பதிவு செய்கிறான். மற்ற நற்செய்தி நூல்களில் இல்லாத விவரங்களை இதில் காணமுடியும், கிறிஸ்துவின் பணிகள் நமது மனங்களில் சுருக்கமாகவும், வலிமையாகவும் பதிவு செய்யப்படுகின்றன. பேதுரு கிறிஸ்துவை மறுதலித்த சம்பவம் முழுமையாக கூறப்படுகிறது. மற்ற நற்செய்தி நூல்களை விட, மாற்கு நற்செய்தி நூலில், பேதுருவின் கசப்பான தோல்வி வலியுறுத்தி பேசப்படுகிறது. அவன் மூன்று முறை மறுதலித்த போதும், கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபை அவனை ஆசீர்வதித்தது.

யாருக்காக இந்த நற்செய்தி எழுதப்பட்டது?

நாசரேத்தூர் இயேசு வெற்றிசிறந்தவர், வல்லமையுள்ளவர், பலமுள்ள கிறிஸ்து என்பதை பர்னபா, பவுல் மற்றும் பேதுருவைப் பின்பற்றியதனால் மாற்கு கற்றுக்கொண்டான். ரோமர்களுக்கு கிறிஸ்துவே இறைவனுடைய குமாரன் என்பது வெளிப்படுத்தப்பட்டது. ரோமர்களும், கிரேக்கர்களும் வாழ்வு மற்றும் மரணத்தின் உண்மையான நம்பிக்கையை தங்கள் கோயில்களிலும், தங்கள் தெய்வங்களிலும் காணவில்லை. ஆகவே இறைவனின் ஒரே குமாரனை உலகின் நம்பிக்கையாக மாற்கு காண்பிக்கிறார்.

புறவினத்தார்கள் இயேசுவின் பின்னணியத்தைப் புரிந்துகொள்ளும்படி, மாற்கு சில யூத முறைமைகளை அவர்களுக்கு விளக்கி காண்பித்தார். இயேசுவிற்கும் பரிசேயர்களுக்கும் இடையில் இருந்த மாறுபாடுகளைக் குறித்து அவர் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை. அவர் அரமேய மற்றும் எபிரெய பதங்களை மொழிபெயர்த்தார். மேலும் புகழ்மிக்க லத்தீன் சொற்றொடர்களை கிரேக்கத்தில் மொழிபெயர்த்தார். மாற்கு நற்செய்தி நூல் எபிரெயர்களுக்கு அல்ல, புறவினத்தாருக்கும் குறிப்பாக ரோமருக்கும் எழுதப்பட்டது என்பதை இது காண்பிக்கிறது. ராஜாதிராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகியவரும், நமது தீமையான உலகில் ஆவிக்குரிய அரசை நிறுவியவருமாகிய கிறிஸ்துவில் உயிருள்ள விசுவாசம் வைக்கும்படி எழுதப்பட்டது.

எப்போது மாற்கு நற்செய்தி எழுதப்பட்டது?

பேதுரு இந்த நற்செய்தி நூலை வாசித்து, தனது மரணத்திற்கு முன்பு, இதற்கான அங்கீகாரத்தை தந்தார் என்று ஐரேனியு எழுதியுள்ளார். நீரோவின் மூலம் மிகப்பெரிய உபத்திரவம் கி.பி64ல் ஏற்படுவதற்கு முன்பு இந்த நற்செய்தி எழுதப்பட்டது என்பதை இது உணர்த்துகிறது.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பணியில் இறைவனின் வல்லமை வெளிப்படுவதை இந்த குறுகிய நற்செய்தியிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றும் நம்முடன் இருக்கின்றவரையும் நாடுகளின் மத்தியில் தனது அன்பின் அரசை நிறுவியவரையும் நாம் அறிகிறோம். அவருடைய கட்டளைகளுக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படியும்படி இறைவனின் குமாரன் நம்மை அழைக்கிறார். அவருடைய அரசில் ஒழுங்கீனமோ அல்லது பாவமோ இல்லை. அவருடைய அழிவில்லாத வெற்றியின் அடிப்படையில் வெளிப்படும் அவருடைய கிருபையினால் பரிசுத்த ஆவியானவர் வல்லமையுடன் செயல்படுகிறார்.

மாற்கு நற்செய்தி நூலை தயவுசெய்து அவசரப்பட்டு வாசிக்க வேண்டாம். அதனுடைய ஒவ்வொரு வார்த்தைûயும் படியுங்கள். உனது ஆவிக்குரிய வாழ்வில் நீ பெலப்படும்படி அதை உறுதியாகப் பற்றுக்கொள்ளுங்கள்.

மாற்கு நற்செய்தியின் பகுப்பாய்வு.

  1. கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள், மாற்கு 1:1-13
  2. கலிலேயாவில் கிறிஸ்துவின் பணியின் ஆரம்பம், மாற்கு 1:14-45
  3. இயேசுவுக்கும், யூதத்தலைவர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடு, மாற்கு 2:1-36
  4. கலிலேயாவில் கிறிஸ்துவின் பெரிய அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள், அதன் சூழ்நிலைகள், மாற்கு 3:7 – 8:26
  5. தனது பாடுகள் மற்றும் மரணத்திற்காக கிறிஸ்து தனது சீஷர்களை ஆயத்தப்படுத்துதல், மாற்கு 8:27-10:45
  6. எருசலேமில் இயேசு பிரவேசித்தலும், அவருடைய கடைசிபணிகளும், மாற்கு 10 : 46-52
  7. இயேசுவின் பாடு மற்றும் மரணம், மாற்கு 14,15
  8. இயேசுவின் உயிர்த்தெழுதல், மாற்கு 16

கேள்விகள்:

  1. மாற்கு யார்.? அவருடைய உடன்-வேலையாட்கள் யார்?
  2. மாற்கு நற்செய்தியின் முக்கிய ஆதாரம் என்ன?
  3. மாற்கு தனது நற்செய்தியை யாருக்கு, எப்போது எழுதினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 04:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)