Previous Lesson -- Next Lesson
3. அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேமிற்குத் திரும்பவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் செல்லவும் திட்டமிடுதல் (அப்போஸ்தலர் 19:21-22)
அப்போஸ்தலர் 19:21-22
21 இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி, 22 தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.
அனதோலியா பிரதேசத்திலுள்ள தங்களுடைய ஒரு மாகாணத்தைக் குறிப்பதற்கு ரோமர்கள் ஆசியா என்ற பெயரை வழங்கினார்கள். அந்த மாகாணத்தின் தலைநகரமாகவும் தொடர்பு மையமாகவும் இருந்ததுதான் எபேசு பட்டணம். பின்னாட்களில் இந்த ஆசியா என்ற வார்த்தை முழு ஆசியக் கண்டத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆசிய கண்டத்தின் துல்லியமான எல்லைகளும் விவரங்களும் சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டது.
முன்பு ஆசியா என்று அழைக்கப்பட்ட அனதோலியா என்ற பகுதியில் பவுல் பிரசங்கம் செய்தார். இரண்டரை வருட காலம் நீதியின் மேல் பசியுள்ளவர்களுக்கு அவர் ஆவிக்குரிய உணவளித்தார். இந்நாட்களில் ஒரு உயிருள்ள திருச்சபை அந்த பகுதியில் நாட்டப்பட்டது. அது தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் தனது அன்பின் ஒளியை பிரகாசித்தது. அந்தப் பிராந்தியத்திலுள்ள கடைசி கிராமம் வரைக்கும் விடுதலையின் நற்செய்தி சென்றடைந்தது. எருசலேமிற்கும் அந்தியோகியாவிற்கும் அடுத்தபடியாக ரோமாபுரிக்கு நற்செய்தியை அனுப்பவதற்கான மூன்றாவது நகரமாக எபேசு விளங்கியது. பவுல் இங்கிருந்துதான் கொரிந்தியருக்கு வைராக்கியமுள்ள அந்த இரண்டு கடிதத்தையும் எழுதினார். அவர்களுடைய பிரச்சனைகளினால் பவுல் வேதனையடைந்து, அங்குள்ள சகோதரர்கள் ஆவிகளைப் பகுத்தறிய வேண்டும் என்றும், ஆண்டவர் அவர்களை உளவியல் பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தார்.
பவுல் இங்கிருந்த காலத்தில் தேவையிலிருந்த எருசலேம் திருச்சபைக்கு தர்மப் பணத்தைச் சேகரித்தார். அவர் தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் கொரிந்தியருக்கு எழுதுவதைப் போல (8 மற்றும் 9-ம் அதிகாரங்களில்) கிரேக்க மற்றும் அனதோலிய திருச்சபைகள் இந்த முக்கியமான பணியில் பங்குகொண்டன. அப்போஸ்தலனாகிய யோவான் கிறிஸ்துவின் மந்தைகளுக்கு மேய்ப்பனாக இருந்த இந்த நகரம் ஆதித்திருச்சபை வரலாற்றில் சில நூறுவருடங்களுக்கு முக்கிய பங்காற்றியது. வெளிப்படுத்தின விசேஷத்தில் உயிருள்ள ஆண்டவர் யோவானிடத்தில் பேசும்போது இந்த திருச்சபை முதலாவதாகவும் மற்ற திருச்சபைகளின் தாயாகவும் கருதப்பட்டது (வெளிப்படுத்தல் 2:1-7). பைசாண்டின் இராயர்களுடைய காலத்தில் கூட்டப்பட்ட ஒற்றுமை மாநாடு உட்பட (கி. பி. 431), பல முக்கியமான திருச்சபை மாநாடுகள் இந்தப் பட்டணத்தில் கூட்டப்பட்டன. கி. பி. 55-ம் ஆண்டில் அப்பகுதியில் தன்னுடைய பணி முடிவடையும்போது பவுல் சின்ன ஆசியாவில் கிறிஸ்து அடைந்த வெற்றிக்காக அவரைத் துதித்தார். புறவினத்து மக்களின் அப்போஸ்தலனாகிய பவுல் விரைவாக எருசலேமிற்குச் சென்று இந்தப் புதிய திருச்சபையை எருசலேமிலிருந்த தாய்த் திருச்சபையோடு இணைக்கப்பட வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் உணர்த்தினார்.
கிரேக்க திருச்சபைகளின் அன்பாக சகோதரர்களை மீண்டும் சந்திப்பதற்கு பவுல் ஆசைப்பட்டார். ஆகவே அதிக விண்ணப்பத்தோடு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி முதலில் மேற்கு நோக்கி ரோமாபுரிக்கும் பிறகு கிழக்கு நோக்கி எருசலேமிற்கும் பிரயாணம்பண்ண திட்டமிட்டார். பரிசுத்த நகரத்தில் தன்னுடைய பணி முடிவடையாது என்றும் ரோமாபுரிக்கு செல்வதே தன்னுடைய பிரயாணத்தின் இறுதி இலக்கு என்றும் பரிசுத்த ஆவியானவர் தனக்கு வெளிப்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். நற்செய்தி எருசலேமிலிருந்து ரோமாபுரியை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அது பரிசுத்த ஆவியின் மையத்திலிருந்து உலக அதிகார மையத்தை நோக்கி அதாவது நீதியின் கரம் அநீதியை வெல்வதற்காகச் சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு நகரமும், கட்சியும், மதமும் தனக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கிறிஸ்து கோருகிறார். அவரே ஆண்டவர், வானத்திலும் பூமியிலுமுள்ள அனைத்து முழங்கால்களும் அவருக்கு முன்பாக முடங்கும், பிதாவின் மகிமைக்காக நாவுகள் யாவும் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று அறிக்கை செய்யும் (பிலிப்பியர் 2:10-11). இந்த தனிச்சிறப்பான கிறிஸ்துவின் திருப்பெயரை மகிமைப்படுத்துவதே பவுலுடைய அருட்பணி பிரயாணங்களின் உந்துவிசையாகவும் நோக்கமாகவும் இருந்தது.
இறைவனுடைய அரசில் பவுல் மட்டும் ஒரு தனி அறிவாளியாக இருக்கவில்லை. கிறிஸ்துவின் ஆவிக்குரிய உடலில் அங்கமாயிருந்த பல சகோதரர்களுடன் சேர்ந்துதான் பவுல் இந்தப் பணிகளை மேற்கொண்டார். இவர்களில் யாரும் சகோதர ஐக்கிமின்றி பணிசெய்ய முடியாது. ஆகவே உங்களுக்கு எங்களுடைய சேவையும் விண்ணப்பமும்; தேவைப்படுவதைப் போலவே எங்களுக்கும் உங்களுடைய விண்ணப்பமும் ஐக்கியமும் தேவைப்படுகிறது. நாங்கள் உங்களுக்காக விண்ணப்பம் செய்கிறோம். நீங்களும் எங்களுக்காக விண்ணப்பம் செய்கிறீர்களா? பவுலுக்கு மகனைப் போல சேவை செய்த தீமோத்தேயுவை அனுப்பி தன்னுடைய பிரயாணத்திற்கான ஆயத்தத்தை அவர் மேற்கொண்டார். பவுலுடைய பிரியாவிடை பயணத்திற்கான ஆயத்தத்தை அவர் இப்போது மேற்கொள்ள வேண்டியிருந்தது.
விண்ணப்பம்: எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவே, இவ்வுலகத்தின் அதிகாரமோ, சாத்தானுடைய செயல்களோ உம்முடைய வெற்றி பவனியைத் தடுக்க முடியாது என்பதால் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். உம்முடைய அரசை விரிவாக்கும் பணியை நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கிறீர். நீர் விரும்பும் இடத்திற்கு நாங்கள் செல்லவும் நீர் விரும்பும் நேரத்தில் நீர் விரும்பும் விதத்தில் நாங்கள் பணிசெய்யவும்தக்கதாக உம்முடைய பரிசுத்த ஆவியானவருக்குச் செவிகொடுக்க எங்களுக்குக் கற்றுத்தாரும்.
கேள்வி:
- பவுல் ஏன் ரோமாபுரிக்குப் போகவேண்டியிருந்தது?