Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 077 (Signs of the End of the Universe)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

4. உலக முடிவின் அடையாளங்கள் (மாற்கு 13:14-18)


மாற்கு 13:14-18
14 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். 15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன். 16 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். 17 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! 18 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

வஞ்சகர்கள் மூலம் ஏற்படும் சோதனைகளைக் குறித்து இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எச்சரிக்கிறார். உபத்திரவங்கள் மத்தியிலும் உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிக்கும்படி கட்டளையிட்டார். அவர்களுக்கு தெளிவாக ஒரு காரியத்தைச் சொன்னார். கி.பி 70-ல் ஏற்படும் எருசலேமின் வீழ்ச்சியைக் குறித்து அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

பாழாக்குகிற அருவருப்பு என்பது இயேசு தமது சபைக்கு கொடுத்த இன்னொரு அடையாளமாகும். தானியேலின் தீர்க்கதரிசனத்தில் இது மூன்று முறை குறிப்பிடப்படுகிறது. இது பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

கி.மு 168-ல் சிரியா ராஜா அந்தியோகஸ் எப்பிபானஸ் என்பவன் செயுஸ் என்ற ரோமத் தெய்வத்திற்கு எருசலேம் தேவாலயத்தின் நடுவில் ஓர் பலிபீடம் கட்டினான். ரோமர்களைப் பிரியப்படுத்த ஏறெடுக்கப்பட்ட யெகோவாவிற்கு அனுதின பலிகள் மற்றும் காணிக்கைகளைத் தடை செய்தான். முதல் முறையாக அருவருப்பு தோன்றிய காலம் இது. அதைத் தொடர்ந்து விரைவில் அழிவு ஏற்பட்டது (தானியேல் 9:27; 11:31; 12:11).

கி.பி 40-ல் கலிகுலா என்ற ரோமப் பேரரசன் தனது சிலையை எருசலேம் ஆலயத்தில் நிறுவக் கட்டளையிட்டான். பரிசுத்த ஆலயத்தில் அவனும் ஒரு தெய்வமாக வழிபடும்படி அப்படிச் செய்தான். ஆனால் அந்த சிலை செய்து முடிக்கப்படும் முன் அவன் இறந்துபோனான். இந்த செயல்களைக் கண்டு நிச்சயம் திருச்சபை மக்கள் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

கி.பி 70-ல் ரோமப்படைகள் எருசலேமை முற்றுகையிட்டன. நகரத்திலும், ஆலயத்திலும் இருந்த செலோத்தே பிரிவினர் நகரத்தைப் பாதுகாக்க போராடினார்கள். இந்தக் கொடூர யுத்தத்தில் ஆலய முற்றப்பகுதியில் இரத்தத்தோடு ஆசாரியர்களின் இரத்தமும் கலக்கப்பட்டது.

யூதமார்க்கத்தில் இருந்து தோன்றிய கிறிஸ்தவ சபை அப்போது கிறிஸ்து கூறியதைப் புரிந்துகொண்டது. “யூதேயாவில் இருக்கிறவன் மலைகளுக்கு ஓடிப்போகக் கடவன்”. அவர்கள் யோர்தானைக் கடந்து ஓடிச்சென்று பாலிஸ் என்ற இடத்தில் புகலிடத்தை கண்டார்கள். இஸ்ரேல் மீது ஊற்றப்பட்ட நியாயத்தீர்ப்பை அவரது சபை சந்திக்க ஆண்டவர் விரும்பவில்லை. தன்னைப் பின்பற்றுவோரை இந்த முற்றுகையில் இருந்து அவர் காப்பாற்றினார்.

ரோமப் படையினர் மிகக் கொடூரமாகத் தாக்கினார்கள். பஸ்கா பண்டிகைக்காக பரிசுத்த பூமிக்கு ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் வந்திருந்தார்கள். ரோமப்படையின் முற்றுகையால் அந்தப் பட்டணத்தில் பெருந்திரளான மக்களுக்கு போதுமான உணவு இல்லை. பஞ்சம் மிகக் கொடிதாக இருந்தது. தனது குழந்தையை தாயே உண்ணும் அவல நிலை ஏற்பட்டது. அநேகர் ரோமர்களிடம் சரணடைந்தார்கள். அவர்கள் சிலுவையிலறையப்பட்டார்கள். எருசலேம் சுவரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான சிலுவைகள் உயர்த்தப்பட்டன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு சிலுவை மரத்தின் மீது தான் இறைவனின் நீதிநிறைந்த குமாரன் தொங்கினார்.

பட்டணத்தில் பசியுடனும், நம்பிக்கையற்றும் இருந்த மக்களிடம் செலோத்தேயினர் சொன்னார்கள். “பயப்பட வேண்டாம். இறைவன் நம்மைக் காப்பாற்றுவார். அவர் நம்முடன் இருப்பதற்கான அடையாளமாக அவருடைய ஆலயம் இருக்கிறது. நாம் அற்புதங்கள் மூலமாக வெற்றி பெறுவோம்”. அவர்கள் தொடர்ந்து இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தீத்து என்ற ரோமப் படைத் தளபதி நகரத்தை கைப்பற்றினான். அவன் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் அனைவரையும் ராஜ்யம் எங்கும் அடிமைகளாக விற்றான். இறைவனுடைய ஆலயம் இறைவனுடைய கோபாக்கினையின் விளக்கைப் போல பற்றியெரிந்தது. பட்டணம் முற்றிலும் பாழாக்கப்பட்டது.

பாழாக்குகிற அருவருப்பு என்பதும் உலக முடிவைக் குறிக்கிற அடையாளம் ஆகும். அதனுடைய சரியான அர்த்தத்தை புரிந்துகொண்டவர் எவருமில்லை. ஆனாலும் சில உண்மைகளை நாம் அறியும்படி நற்செய்தி நமக்கு உதவுகிறது. வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை மாற்றியமைக்க முயலும் எந்தவொரு மனித முயற்சியும் அல்லது உலக மதங்களுடன் ஒத்துப்போவதற்காக வார்த்தையை தவறாக வியாக்கியானம் செய்வதும் பாழாக்குகிற அருவருப்பு ஆகும்.

மேலும் எருசலேமின் பழைய ஆலயத்திற்கு வெளியே கட்டப்படும் அவருடைய மக்களைக் கொண்ட புதிய ஆலயத்தையும் இது குறிக்கிறது. இயேசுவின் சபை மட்டுமே இன்றைய உலகில் இறைவனுடைய ஆவியின் ஆலயமாக இருக்கிறது.

மனந்திரும்புதலுடன் கூடிய மன்றாட்டு, துதியின் பாடலுடன் எருசலேமில் செலுத்தப்பட்ட பலிகளையும் இது குறிக்கின்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே கடைசியான பலி. அவர் இறைவனுடைய முழுமையான பலி.

புதிய ஆலயத்தில் வீற்றிருக்கும் வரப்போகிற புதிய கிறிஸ்துவையும் இது குறிக்கின்றது. அவர் துன்புறும் உலக மக்களுக்கு சமாதானத்தை தந்திருக்கிறார். அவர் ஆராதனைக்குரியவர். அப்போது எல்லா சபைத் தலைவர்களும், தேசமும் அவரை ஆராதிக்கும். அவர் ஒருவரே இரட்சகர். நம்முடைய நம்பிக்கைக்குரியவர் (2தெச 2:3-12; வெளி 13:1-9).

எனவே நாம் விழிப்பாயிருக்க வேண்டும். பகுத்தறிய வேண்டும். இறைவனுடைய மெல்லிய சத்தத்தை கேட்டு அதன்படி நடக்க வேண்டும். ஆண்டவர் விரும்புகிற அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும். தங்களுடைய சொத்துகள் மற்றும் சமுதாயத்தைவிட்டுச் செல்லும் மக்களையும் இது குறிக்கின்றது. மறந்துவிட வேண்டாம். பாழாக்குகிற அருவருப்பு முதலில் தோன்றும். பின்பு அழிவு ஏற்படும்.

யூத மார்க்கத்தில் இருந்து வந்த கிறிஸ்தவர்களைப் பார்த்து இயேசு கூறுகிறார். அவர்களுடைய யுத்தம் குளிர்காலத்தில் ஏற்படாதபடி வேண்டிக்கொள்ளச் சொல்கிறார். முதியவர்கள், பிரசவப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அது கடினமான காலமாக இருக்கும். நியாயத்தீர்ப்பு நேரத்திலும் இயேசு பலவீனர் மற்றும் சிறுபிள்ளைகளை தமது இரக்கத்தினால் பாதுகாக்கிறார். அவர் சபையைத் தமது கண்ணின் மணியைப் போல் பாதுகாக்கிறார். அவளுக்கு நேரிடும் யுத்தத்தை முன்னறிந்தார். துன்பங்கள் மத்தியிலும் அவளை அரவணைத்துக்கொண்டார்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, உமது நியாயத்தீர்ப்பு நீதியானது. நாங்கள் உபத்திரவப்படவும், மரணமடையவும் வேண்டியவர்கள். நீர் இரட்சகராகிய நாசரேத்தூர் இயேசுவை எங்களுக்காக அனுப்பியதற்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இறுதி நியாயத்தீர்ப்பை அடையாதபடி எங்களை காத்துக்கொள்ளும். நீர் எங்களுக்கு கொடுத்துள்ள அடையாளங்கள், ஆதாரங்களை அறிந்துகொள்ள உதவும். உமது சத்தத்தை நாங்கள் கேட்கிறோம். உமது சித்தத்தை முழுமையாக நிறைவேற்ற எங்களுக்கு பெலன் தாரும். உமக்கு கீழ்ப்படிய நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். ஆமென்.

கேள்வி:

  1. “பாழாக்குகிற அருவருப்பு”; என்றால் என்ன அர்த்தம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 06:52 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)