Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 030 (Jesus Silences the Storm)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
6. புயல், ஆவிகள், மரணத்தின் மீது இயேசுவின் வல்லமை (மாற்கு 4:35- 5:43)

அ) திபேரியாக் கடலில் இயேசு புயலை அதட்டினார் (மாற்கு 4:35-41)


மாற்கு 4:35-41
35 அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். 36 அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. 37 அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. 38 கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். 39 அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 40 அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற் போயிற்று என்றார். 41 அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

சாத்தான் கிறிஸ்துவை வெறுக்கிறான். அவரைப் பின்பற்றுபவர்களைத் தாக்க அவன் தீர்மானித்து செயல்படுகிறான். அவர்களை பயம், சோர்வு, அவிசுவாசம் என்ற பாதாளக் குழிக்குள் தள்ள முயற்சிக்கிறான். இறைராஜ்யத்திற்கும் இரக்கமற்ற சாத்தானுக்கும் இடையே யுத்தம் நடைபெறுகிறது. நாம் எல்லா நேரங்களிலும் மனிதர்களை உண்மையாக நேசித்தாலும், பரிசுத்த ஆவியானவரும் சாத்தானுடைய ஆவியும் இணைந்து பணி செய்வது ஒருபோதும் இயலாத காரியம் ஆகும். கிறிஸ்துவின் ஆவி தூய்மையான ஆவி ஆவார். அவர் சாத்தானின் கிரியைகளை அழிக்க வந்தேன் என்று கூறுகிறார். சாத்தான் கிறிஸ்துவையும், அவருடைய சீஷர்களையும், அவர்கள் திபேரியாக் கடலில் படவில் சென்று கொண்டிருந்த போது கொடிய புயலைக் கொண்டு வந்து அழிக்க முயற்சித்தான். தனது பகல் நேர ஊழியத்தை நிறைவேற்றிய பின்பு கிறிஸ்து சோர்வுடன், களைப்புற்றிருந்தார். எனவே அவர் மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்திருந்தும் அமைதியாகத் தூங்கினார். அந்தப் புயல் அவரை அழிக்காது என்பது அவருக்குத் தெரியும். தன்னைப் பாதுகாக்கும் பிதாவின் கரங்களால் அவர் வழிநடத்தப்பட்டார்.

சீஷர்கள் இன்னும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெறாதிருந்தார்கள். அவர்களுக்கு மீனவர்களாக இருந்த அனுபவம் இருந்தது. கடும் இருட்டில் புயல் கடுமையாக வீசியது. இது அவர்கள் அனுபவத்தைக் கடந்ததாக இருந்தது. அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் படகில் நீர் நிரம்பியது. அனைவரும் மூழ்கும்படியான நிலை ஏற்பட்ட போது, அவர்கள் இயேசுவை எழுப்பினார்கள். தங்கள் மீது அவருக்கே கவலையே இல்லை என்று அவரை குற்றம்சாட்டினார்கள். தங்கள் உயிரைக் குறித்து பயந்தார்கள்.

கிறிஸ்து புயலுக்கான காரணத்தை அறிந்திருந்தார். அவர் எழுந்து காற்றில் உள்ள அசுத்த ஆவியை அதட்டினார். உடனே அமைதியுண்டாயிற்று. கிறிஸ்துவின் வாயில் இருந்து புறப்பட்ட ஒரு வார்த்தை பிசாசுகளின் சேனையின் சத்தத்தை அமைதிப்படுத்தியது. கிறிஸ்து காற்று, பூமி, கடல், ஆவிகள், மரணம் மற்றும் வாழ்வின் மீதான ஆண்டவராக இருக்கிறார். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கே காணப்படுகின்றதும், காணப்படாததுமான காரியங்களின் மீதான இறைவனுடைய மகிமையின் அமைதி நிச்சயம் காணப்படும்.

திருச்சபை என்பது ஒரு படகைப் போன்றது. இந்த உலகம் என்ற கடினமான கடல், அழிக்கின்ற புயல்கள் மத்தியிலும் கிறிஸ்து நம்முடன் படகில் இருக்கிறார். திரளான விசுவாசிகளுடன் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? அல்லது சோதனைகள், அதிகாரங்கள், தாக்குதல்கள், உலக அழிவுகள் இவைகளைக் குறித்து பயப்பட்டு, உங்களுடன் இருக்கும் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்களா?

இறைவனின் குமாரன் தம்முடைய சீடர்களிடம், அவர்களுடை இருதய நிலையைக் குறித்து கடிந்து பேசினார். “நீங்கள் ஏன் பயப்பட்டீர்கள்? உங்களுக்கு ஏன் விசுவாசம் இல்லாமற் போயிற்று?” அவர் தமது அப்போஸ்தலர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கவும், அசுத்த ஆவிகளைத் துரத்தவும், வியாதியுள்ளோரை சுகமாக்கவும் அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனாலும் சோதனை நேரத்தில் அவர்கள் தோற்றுபோனார்கள். பயத்தால் அலறினார்கள். நாம் அப்பிரயோஜனமற்ற ஊழியக்காரர்கள் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் கிறிஸ்து இல்லாமல், நாம் அனைவரும் வெற்றி பெற முடியாது. உயிருள்ள விசுவாசத்துடன் நமது இரட்சகருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது அவர் தமது ஆவியைக் கொடுத்து நமக்கு அமைதியையும், நம்பிக்கையும், இயேசுகிறிஸ்துவுக்குள் நிச்சயத்தையும் தருகிறார். அவர் திருச்சபையை தமது கண்மணியைப் போல பாதுகாக்கிறார்.

விண்ணப்பம்: ஆண்டவரே, வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் உமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் விசுவாசக் குறைவு, கவலைகள், பொய்களை மன்னியும். உமது பாதுகாப்பு மற்றும் இளைப்பாறுதலில் எங்களை நிலைப்படுத்தும். உமது வாயின் வார்த்தைகள் தீய ஆவிகளை அமைதிப்படுத்தட்டும். உமது பாதுகாப்பில் உமது சபை இருக்கிறது. இந்த உலகத்திலும், நரகத்திலும் எந்தவொரு வல்லமையும் எங்களை அழிக்க முடியாது. ஏனெனில் முடிவு பரியந்தமும் நீர் எங்களுடன் இருக்கிறீர்.

கேள்வி:

  1. புயலின் மத்தியிலும் இயேசு ஏன் கவலைப்படாமல் தூங்கினார்? அழிக்கும் புயலை அமைதிப்படுத்தியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 12:08 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)