Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 019 (Withered Hand Restored on the Sabbath)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - இயேசுவிற்கும், யூதத் தலைவர்களுக்கும் இடையே போராட்டம் (மாற்கு 2:1 - 3:6)

5. சூம்பின கையுடைய மனுஷன் ஓய்வுநாளில் சுகமாக்கப்பட்டான் (மாற்கு 3:1-6)


மாற்கு 3:1-6
1 மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். 2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். 3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்துநடுவே நில் என்று சொல்லி; 4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். 5 அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. 6 உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.

இயேசுவின் காலத்தில் வேதபாரகர்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார்கள். அவர்கள் தங்கள் சகோதரர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் குணமாவதை விரும்பவில்லை. ஓய்வுநாளில் சுகமாக்குவதையும் ஒரு வேலையாகக் கருதி, அதை பாவமாக எண்ணினார்கள்.

இயேசு தமது இரக்கத்தினால் மக்களை சுகமாக்குவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்புடன் கூடிய ஒவ்வொரு சேவையும் உண்மையான ஆராதனை ஆகும். சடங்காச்சாரங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இறைவனுக்கு வழியை ஆயத்தம்பண்ண முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய பக்தி நடவடிக்கையின் மத்தியிலும் அவர்களுடைய இருதயங்கள் கடினப்பட்டதை அவர்கள் உணரவில்லை. எனவே வித்தியாசமாக யோசிப்பவர்கள் மீது அவர்கள் வெறுப்பைக் காட்டினார்கள். தங்களுடைய குருட்டாட்டத்தினால் அவர்கள் ஆவிக்குரிய மரணம் அடைந்திருந்தார்கள்.

இச்சமயத்தில் ஒரு அற்புதமான காரியம் நடந்தது. அவிசுவாசிகள் அல்ல கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இறைவனின் குமாரனுடைய சுகமாக்கும் அன்பை கவனித்தார்கள். இதன் மூலம் அவரைக் குற்றப்படுத்தி, ஆலோசனைச் சங்கத்திடம் அவரை ஒப்புக்கொடுக்க நினைத்தார்கள். அவர்கள் இறைவனுடைய அன்பை உணர மறுத்தார்கள். அவர்கள் ஆராதனை அர்த்தமற்றதாக காணப்பட்டது. ஆனால் வரிவசூலிப்பவர்கள், பாவிகள் கிறிஸ்துவில் இறைவனுடைய பிரசன்னத்தை உணர்ந்தார்கள். மனந்திரும்பினார்கள், குணமாக்கப்பட்டார்கள்.

இயேசு மத வைராக்கியமிக்க எதிரிகளை நேசித்தார். அங்கிருந்த சூம்பின கையுடைய மனுஷனையும் நேசித்தார். அவர் இறைவனுடைய அன்பை வெளிப்படுத்திக் காண்பிக்க, பாடுகள் நிறைந்த அவனை எழுந்து நிற்கும்படி சொன்னார். பரிசேயர்களுக்கு அவர்களுடைய இருதயக் கடினத்தைக் காண்பித்தார்.

இயேசு மனித மனங்களையும், பொது அறிவையும் குறைத்து மதிப்பிடவில்லை. இறைவனுடைய வெளிப்பாடு இல்லாமல் அவைகள் பயனற்றவை என்று கருதினார். இந்த உலகிலும், வருகின்ற உலகிலும் இறைவனுடைய இரகசியங்களை அவர் அறிகிறார். இயேசு தமது அன்பினால், தனது எதிரிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற எளிய சிந்தனையின் மூலம் அவர் அவர்களை அமைதிப்படுத்தினார்.

ஒரு நல்ல செயல் நல்லது. தீயசெயல் கெட்டது. இயேசுவை பொறுத்தமட்டில் நன்மை செய்ய அறிந்திருந்தும், அதை செய்யாமற்போனால், அது பாவம் ஆகும். ஒருவன் வழியில் கடந்துபோகும் போது, துன்பப்படுகிறவனைக் கண்டு விலகிச் சென்றால் அவன் கொலைகாரன் ஆவான்.

காயப்பட்ட மனிதனுக்கு பிரசங்கம் பண்ணுவதை விட, அவனுக்கு முதலுதவி செய்ய வேண்டியது அவசியம். அவனுக்கு அப்பம், குடிநீர், மருந்துகளைக் கொடுங்கள். அன்பு எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழிநடத்துகிறது.

அவர் காலத்தின் வேதபாரகர்களின் ஆவிக்குரிய குருட்டுத்தனத்தை அன்புள்ள இயேசு கண்டு கோபப்பட்டார். அவருடைய பரிசுத்த கோபத்தை இறை அன்பு தடை செய்யவில்லை. அவருடைய ஆவியுடன் மக்கள் இணைந்து வாழாதபோது, அவருடைய இருதயத்திற்குள் ஆழமான வேதனை ஏற்படுகிறது. ஆனாலும் இயேசு மாய்மாலக்காரர்களை அழித்துவிடவில்லை. அவர்கள் தங்கள் பெருமை, சுயபக்தியில் மரித்திருந்தும், நீதிமான்களாகத் தங்களைக் கருதிய அவர்களுடைய இருதயத்தின் நிலையைக் கண்டு துக்கமடைந்தார். மனிதர்களின் அவபக்தியின் மீது இறைவனுடைய கோபாக்கினை உடனடியாக இறங்கி வரவில்லை. அவர் பொறுமை நிறைந்தவர் அவருடைய நீதியுள்ள பரிசுத்தம் ஒவ்வொரு பாவமும் முழுமையாகத் தண்டிக்கப்படுவதை எதிர்பார்க்கிறது. இறைவன் பொறுமை நிறைந்தவர். நமது பெலவீனத்தின் நிமித்தம் அவர் தமது கோபாக்கினையைத் தாமதம் பண்ணுகிறார். நமது மனம் மாற்றம் அடைவதற்கும், அவருடைய அன்பைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு கால அவகாசம் தருகிறார். இயேசு சூம்பின கையுடைய மனுஷனை தமது வல்லமையின் வார்த்தையினால் சுகமாக்கினார். அவருடைய அதிகாரத்தின் அடையாளமாக இது காணப்படுகிறது. அவரைப் புறக்கணிப்பவர்கள் மீதான நியாயத்தீர்ப்பிற்கும் இது அடையாளம் ஆகும்.

பரிசேயர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. கிறிஸ்துவின் அன்பிற்கும் பதிலளிக்க விரும்பவில்லை. அவருக்கு எதிராக குற்றம் சாட்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் உடனடியாக ஒன்று கூடினார்கள். ஏரோதியாளுடன் இணைந்து புதிய உடன்படிக்கையின் ஸ்தாபகரை எவ்விதம் கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்டினார்கள். அவருடைய சரீரத்தை மட்டும் கொலை செய்வது அவர்களின் நோக்கம் அல்ல. அவருடைய உபதேசத்தை துடைத்தெறிவது அவர்களின் திட்டம். அவரை ஏமாற்றுபவராக குற்றம் சாட்டினார்கள். அவர்கள் நியாயப்பிரமாணம் அவர்களின் கடவுளாக மாறியது. நியாயப்பிரமாணத்தைப் பாதுகாக்க இறைவனுடைய குமாரனைப் பலியிட அவர்கள் தீர்மானித்தார்கள். வனாந்தரத்தில் சோதனைகளில் இயேசுவை வீழ்த்த முடியாதவனாக சாத்தான் காணப்பட்டான். எனவே தனது தோல்வியின் நிமித்தம் பிசாசுகளினால் பிடிக்கப்பட்டிருந்த மதப்போதகர்கள் மூலம் அவரை அழிக்கும்படி செயல்பட்டான்.

ஆண்டவருக்குப் பணிசெய்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆண்டவர் அனுமதித்தால் ஒழிய ஒருவனும் அவர்களுடைய தலை முடிகளில் ஒன்றையாகிலும் விழப்பண்ண முடியாது.

இயேசு அவர்களுடைய சதித்திட்டத்தை அறிந்தார். அவர் ஓடிப்போகவில்லை. அவர் தமது அன்பின் வழியில் ஊழியத்தை தொடர்ந்தார். அவருடைய பிதாவினால் பாதுகாக்கப்பட்டார். அவரே உலகிற்கு அவரின் பெயரை அறிவிப்பவர்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது எதிரிகளைக் கண்டு பயப்படுவது இல்லை. உம்மை வெறுப்பவர்கள் மத்தியில் நீர் வருகிறீர். உமது கோபத்தில் அவர்களை நீர் அழிப்பதில்லை. உமது அன்பின் அடையாளமாக பொறுமையுடன் இருக்கிறீர். உமது பொறுமையை எங்களுக்கு கற்றுத்தாரும். ஒவ்வொருவருக்கும் இரக்கம் காண்பிக்க உதவும். வார்த்தைகளால் மட்டும் அல்ல செயலிலும் காணப்பட உதவி செய்யும். நாங்கள் சடங்காச்சாரங்களை பின்பற்றாதபடி, தேவையுள்ள மக்களுக்கு உதவிசெய்ய வழிநடத்தும். எங்களுக்கு திறந்த மனதையும், பெரிய இருதயத்தையும் தாரும். உமது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்படியச் செய்யும். “இன்றே” உமது இரட்சிப்பை ஒவ்வொருவருக்கும் தாரும். ஆமென்.

கேள்வி:

  1. ஏன் இயேசு நியாயப்பிரமாண வேதபாரகர்கள் மீது கோபப்பட்டார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 10:10 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)