Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 046 (The Leaven of the Pharisees and Herod)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

18. பரிசேயர்கள் மற்றும் ஏரோது என்ற புளித்தமாவைக் குறித்த உரையாடல் (மாற்கு 8:14-21)


மாற்கு 8:14-21
14 சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது. 15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். 16 அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே சனைபண்ணிக்கொண்டார்கள். 17 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 18 உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? 19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள். 20 நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

மனிதபெலத்தினால் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்து இறைவன் ஏற்றுக்கொள்கிற நீதியை உங்களால் பெற முடியாது. அது கிறிஸ்துவின் கிருபையினால் உங்களுக்கு ஈவாக வழங்கப்படுகிறது. பரிசுத்தமானவருக்கு முன்பு நிற்க உங்களை அது தகுதிப்படுத்துகிறது. நமது நற்செய்தியின் மிகப்பெரிய இரகசியம் இது. அதனுடைய தனித்தன்மையின் சாராம்சம் இது. இயேசு “பரிசேயர்கள் என்ற புளித்த மா” என்று வார்த்தையைப் பயன்படுத்தினார். அது எதிர் – நற்செய்தியைக் குறிக்கின்றது. பழைய உடன்படிக்கையை வலியுறுத்தி, விதிகளை உருவாக்கி, அவற்றை கடைப்பிடிக்க முற்படுகிறார்கள். ஓய்வுநாளை அனுசரிப்பதைக் குறித்து பேசுகிறார்கள். மக்கள் உபவாசம் இருப்பது, புனிதப் பயணம் மேற்கொள்வது, தானதர்மம் செய்வது இறைவனை பிரியப்படுத்தும் என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சிந்தனை சாத்தானின் மிகப்பெரும் வஞ்சகம் ஆகும். இப்படி நினைக்கும் ஒவ்வொருவரும் மனிதன் தன்னில் தானே நீதியுடையவன் என்று நம்புகிறார்கள். மன்னிப்பைப் பெறாமல் இறைவனுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். மனிதன் நீதியுள்ளவன் அல்ல என்று கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுக்கிறார். அவன் குழந்தைப் பருவம் முதல் அப்படி இருக்கிறான். இறைவனுடைய பரிசுத்தத்துடன் ஒப்பிடும் போது நாம் கறையுள்ளவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும் இருக்கிறோம்.

நமது பாவத்தன்மையை அறிக்கையிடுவது பெருமைமிக்க பரிசேய ஆவியில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். மாய்மால வேதபாரகர்களின் வஞ்சகத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றும். சில உணவுகளைத் தவிர்ப்பது அல்லது சில காரியங்களைக் கடைப்பிடிப்பது நம்மை பரலோகிற்கு கொண்டு செல்லும்; இறைவனுக்கு நேராக நடத்தும் என்று சிலர் நினைக்கிறார்கள். மனிதத் முயற்சிகள் மீது நம்பிக்கை வைப்பவன் இறைவனுக்கு உகந்தவன் அல்ல: இறைவனால் அவன் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான். அவன் நரகத்திற்குச் செல்கிறான்.

பரிசேயர் என்ற புளித்தமாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். சில சமயம் சிறிய காரியம் கூட உங்கள் விசுவாசத்தைக் கறைப்படுத்தும். பவுலின் நிரூபங்களை கவனமாகப் பாருங்கள். நியாயப்பிரமாணத்தில் இருந்து விடுதலை மற்றும் கிறிஸ்துவின் இலவச கிருபையில் தொடர்ந்து வாழ்வது இவற்றிற்கு இடையேயுள்ள கடினமான போராட்டத்தை நீங்கள் காண முடியும்.

“ஏரோது என்ற புளித்தமா” என்ற பதம் இச்சை மிகுந்த ஆசைகள் மற்றும் எதிர்காலம் குறித்த பயத்தை குறிக்கின்றது. நவீனத்துவத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறவன் இறைவனுடைய உடன்படிக்கையை விட்டுவிடுகிறான். விசுவாசிக்கின்ற நாம் நியாயப்பிரமாணத்திற்கு கீழானவர்கள் அல்ல, கிறிஸ்துவுக்குள் விடுதலை பெற்றவர்கள். நாம் பரிசுத்தமாக நடக்கவும், தாழ்மையுடன் வாழவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவருக்கு நம்மை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கும் போது, நம்முடைய இருதயங்களில் அவர் வாழ்கிறார். இந்த புதிய உடன்படிக்கையின்படி நாம் விடுதலை பெற்ற மக்கள். பாவம், மற்றும் நமது மாம்ச இச்சைகளின் கட்டுகளில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். கிறிஸ்து தந்துள்ள தனித்துவமான சுதந்தரத்தில் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

கிறிஸ்து பேசிய இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அந்நேரத்தில் சீஷர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் அப்பக் குறைவைக் குறித்து எண்ணினார்கள். பரிசேய நீதியை விட ஆவிக்குரிய நீதியைக் குறித்து அவர் பேசினார். ஏரோதின் தன்மையைக் குறித்து எச்சரித்தார். கிறிஸ்து தமது சீஷர்களை பாவங்களில் மூழ்காதபடி காப்பாற்றுகிறார். மரணக்கட்டுகள், சாத்தானின் சோதனைகளில் இருந்து தப்புவித்து, தம்முடைய பரலோகப் பிதாவிற்கு நேராக அவர்களை வழிநடத்துகிறார். சீஷர்கள் உலகப்பிரகாரமான உணவையும், உலக வாழ்வில் தங்கள் பாதுகாப்பையும் குறித்து எண்ணினார்கள். ஆவிக்குரிய காரியத்தை புரிந்துகொள்ளவில்லை அல்லது உணவிற்காக கவலைப்படுகிறார்கள் என்பதற்காக கிறிஸ்து அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. அவர்கள் உலக சிந்தனைகள், தற்கால எண்ணங்கள், அவநம்பிக்கைகள் ஆகியவற்றால் நிறைந்திருந்து விசுவாசமின்றி இருந்தார்கள். இரண்டு சம்பவங்களில் எவ்விதம் திரளான மக்களுக்கு கிறிஸ்து நிறைவான உணவைக் கொடுத்தார் என்று அவர்கள் கண்டார்கள். இயேசு அவர்களுடன் இருக்கும் போது எதற்காக அவர்கள் அப்பத்திற்காக கவலைப்பட வேண்டும்?

கிறிஸ்து உங்களுடன் இருப்பதை நீங்கள் உணருகிறீர்களா? நீங்கள் வேலை செய்ய அவர் உதவுகிறார். உங்கள் அனுதின அப்பத்தை அவர் தருகின்றார். விண்ணப்பம் ஏறெடுத்து உண்மையுடன் வேலை செய்பவர்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வாழ்கிறார்கள். உலகக் கவலைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறார். நமது விசுவாசம் அவருடைய நித்திய வல்லமையின் மீது உள்ளது.

விண்ணப்பம்: பொறுமை நிறைந்த ஆண்டவரே, எங்கள் அறியாமையை மன்னியும். எங்கள் உலகக் கவலைகள் அப்பத்தைக் குறித்த கவலைகளுக்காக எங்களை மன்னியும். சுய நீதியில் இருந்து எங்களை விடுவியும். இச்சை, ஒழுக்கக்கேட்டிலிருந்து எங்களை காத்துக்கொள்ளும். உமது கிருபையின் விடுதலையில் எங்களை உறுதிப்படுத்தும். உமது இரட்சிப்பில் உறுதியான நம்பிக்கையைத் தாரும். ஆமென்.

கேள்வி:

  1. பரிசேயர்கள் என்ற புளித்தமாவைக் குறித்து இயேசு பேசிய போது தமது சீஷர்களிடம் என்ன பதிலை எதிர்பார்த்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 06:57 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)