Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 039 (Jesus Walks on the Sea)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

11. இயேசு கடலின் மீது நடந்து தமது சீஷர்களுக்கு தோன்றினார் (மாற்கு 6:45-56)


மாற்கு 6:45-56
45 அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார். 46 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். 47 சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். 48 அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார். 49 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். 50 அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, 51 அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52 அவர்களுடைய இருதயம் கடினமுள்ள தாயிருந்தபடியினால் அப்பங்களைக் குறித்து அவர்கள் உணராமற் போனார்கள். 53 அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள். 54 அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, 55 அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள். 56 அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

இயேசு தங்களுக்கு வழங்கிய நிறைவான அப்பத்தினால் திரளான மக்களும், சீஷர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். இயேசுவை தங்கள் தேசத்தின் ராஜாவாக்கும்படி அவர்கள் முயற்சித்தார்கள். இயேசு திரளான மக்களிடம் இருந்து தமது சீஷர்களைப் பிரித்தார். அவர்களை அதிகாரச் சோதனையில் இருந்து தப்பிக்கச் செய்தார். திரளான மக்களை விட்டுப்பிரிந்து தூரமாய் அவர்கள் போகும்படி அனுப்பினார். என்ன நிகழ்ந்தது என்பதை இறைவனுக்கு முன்பாக அவர்கள் நின்று உணரும்படி அவர் விரும்பினார். இறைவன் யார் என்பதையும் அவர் நிகழ்த்திய அற்புதத்தையும், அவரே போஷிப்பவர், பராமரிப்பவர் என்றும் அவர்கள் உணர வேண்டும்.

சீஷர்கள் படவில் ஏறிச்சென்ற போது, இயேசு மன்றாடும்படி தனியே வனாந்தரமான இடத்திற்குப் போனார். தமது பிதாவிடம் பேசும்படி உன்னதமானவரின் குமாரன் சென்றார். அவருடைய நாமத்தினால் அவர் அற்புதத்தை நிகழ்த்தினார். பிதா இல்லாமல் குமாரன் எதையும் செய்யமாட்டார். அவர் எல்லா நேரங்களிலும் விண்ணப்பம் செய்தார். அவருடைய சித்தத்துடன் முழுமையாக இணைந்து செயல்பட்டார்.

இறைவனுடைய முகத்திற்கு முன்பு நீங்கள் அமைதியாக மன்றாடியது உண்டா? பரிசுத்த ஆவிக்குள் நீங்கள் விண்ணப்பம் ஏறெடுப்பது முதன்மையானதாக இராவிட்டால் நீங்கள் பலவீனமாக இருப்பீர்கள்.

தமது விண்ணப்பத்தினாலும், அன்பினாலும் இயேசு தன்னுடைய சீஷர்கள் பிரச்சினையில் இருப்பதைக் கண்டார். அவர்கள் புயல் மற்றும் கொந்தளிக்கும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்தார்கள். அவர்கள் உதவி கேட்டு அழைப்பதை இயேசு கேட்டார். இயேசு அந்த வனாந்தர இடத்தில் தொடர்ந்து இருக்கவில்லை. அவர்களைக் காப்பாற்றும்படி துரிதமாகச் சென்றார். எல்லாவற்றின் மீதும் அவரே ஆளுகை செய்கிறவர் என்பதை அவர்களுக்குக் காண்பிக்கச் சென்றார். கடலின் மீது நடந்தது, கல்லறைக் குகையை விட்டு வெளியேறியது, பரலோகிற்கு ஏறிச்சென்றது போன்ற சம்பவங்கள் அவரே ஆண்டவர் என்பதைக் காண்பிக்கின்றன. அவர் ஆவிக்குரிய சரீரத்தைப் பெற்றிருந்தார். அவர் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவராக இருந்தார்.

இயேசு உடனடியாக தமது சீஷர்களிடம் வரவில்லை. முதலாவது அவர்களுடைய விசுவாசத்தை அவர் சோதித்தார். அவர்கள் இறைவனை நோக்கி உதவி கேட்டார்கள். எதிர்பாராதவிதமாக உதவி செய்பவர் வந்தார். அவர்கள் பயத்தால் நடுங்கி “ஆ ஆவேசம்” என்று அலறினார்கள்.

உங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு அவர் பதிலளிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு எல்லா நேரங்களிலும் உங்களைக் கவனிக்கிறார். அவர் நிச்சயம் உங்கள் அருகில் வருவார். உங்களைச் சுற்றியுள்ள பயமுறுத்தும் காரியங்கள், மக்கள், புயல்கள், இருள் ஆகியவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம். உங்கள் ஆண்டவர் உங்கள் அருகில் இருக்கிறார். இயேசு தமது பிரசன்னத்தினால் நீங்கள் பாதுகாப்பை உணரும்படி விரும்புகிறார். அவருடைய மகிமைக்கென்று, எல்லாவிதமான பயங்களையும் விட்டு நீங்கள் விலகியிருக்கும்படி அவர் கட்டளையிடுகிறார்.

தமது மாறுபட்ட வருகையைக் கண்டு சீஷர்கள் பயந்ததினால் இயேசு அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. அவர்களை அமைதிப்படுத்தினார். தமது பிரசன்னத்தினால் அவர்களை தைரியப்படுத்தினார். மீனவர்களாக அவர்கள் ஆவிகளைக் (பேய்கள்) குறித்த நம்பிக்கை கொண்டிருந்ததை அவர் அறிந்திருந்தார். அவர் கூறினார்: “நான் தான்” நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன். நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவன் நான் தான், பயப்படாதிருங்கள், தைரியமாயிருங்கள்.

உனது இருதயம் கடினமாக உள்ளதா? அல்லது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ளதா? உங்கள் நேச இரட்சகரை இருள்சூழ்ந்த பிரச்சினையான நேரங்களில் விசுவாசிக்கிறீர்களா? அல்லது உங்கள் கண்கள் அப்பத்தைத் தேடுகின்றதா? உங்களுக்கான இறைவனின் பரிசு தான் இயேசு. மற்றவைகள் அனைத்தும் இரண்டாவதாக உள்ளன. கிருபையின் நதிகள் அவருடைய அன்பில் இருந்து அவரை நாடி வருபவர்களை நோக்கிப் பாய்கின்றன. அவர் மட்டுமே இறைவனுடைய வல்லமையின் ஆதாரமாக இருக்கிறார். அவருடைய சீஷர்கள், பரிசுத்தவான்கள், பிஷப்மார்கள் அல்லது எந்தவொரு மனிதனும் அல்ல. நீங்கள் அவரைத் தேடினால் உங்கள் ஆத்துமா மற்றும் சரீரத்தை கிறிஸ்து மட்டுமே குணமாக்குகிறவராக இருக்கிறார்.

இயேசு தமது சீஷர்களுடன் ஏரியைக் கடந்து சென்றபோது, சில மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர்கள் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று வியாதியுற்றோரையும், முடவர்களையும் இயேசு குணமாக்கும்படி அழைத்து வந்தார்கள். அவர் குணமாக்க முடியாத வியாதி ஒன்றும் கிடையாது. அவரே வெற்றியாளர். அவரை விசுவாசித்து வஸ்திரத்து ஓரத்தைத் தொடுபவர் கூட குணமடைகிறார். இந்நாட்களில் அவர் உங்களிடம் கூறுகிறார். “உனது விசுவாசம் உன்னை இரட்சித்தது”. விசுவாசம் இல்லாமல் இரட்சிப்பு இல்லை, சமாதானம் இல்லை.

விண்ணப்பம்: இறைவனின் குமாரனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். கடல், புயல், மற்றும் அனைத்துக் காரியங்களும் உமக்குக் கீழ்ப்படிகின்றன. உமது அன்பிற்கு எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். இன்று உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்கிறோம். எங்களுடன் தங்கியிரும். எங்கள் பயங்களை நீக்கும். எங்களில் விசுவாம், சமாதானம் மற்றும் அன்பை உருவாக்கும். நாங்கள் கிராமங்கள் தோறும், பட்டணங்கள் தோறும் சென்று குணமடைய விரும்புவர்களை உம்மிடம் கொண்டு வரும்படி உதவும். நீரே உண்மையாய் உதவிசெய்பவர், ஆமென்.

கேள்வி:

  1. “நான்தான்” என்று கிறிஸ்து தமது சீஷர்களிடம் கூறியதின் அர்த்தம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 04:35 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)